க்ரெடிட் கார்டும் CIBIL ஸ்கோரும்

எனக்கு முந்தையத் தலைமுறை க்ரெடிட் கார்டை கௌரவக் குறைச்சலாகப் பார்த்தது, பணம் கொடுத்தே பொருள் வாங்கியவர்கள் க்ரெடிட் கார்ட் நீட்டுவதை கடன் சொல்வதைப் போல எண்ணினார்கள்.

என் நண்பர்கள் இந்தியாவில் க்ரெடிட் கார்டை பரவலாக உபயோகித்த முதல் தலைமுறையினர். அது செயல் படும் விதம் புரியாமல் “ரிவால்விங் க்ரெடிட்டில்” சிக்கி சின்னாபின்னமானார்கள்

இன்றைய தலைமுறை க்ரெடிட் கார்டின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு எப்போதும் லிமிட் முழுவதையும் உபயோக்கின்றன்றனர். 
ஆக மொத்தம் க்ரெடிட் கார்ட் என்கிற வஸ்து பெரும்பாலான நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளப்படவேயில்லை.

சிபில் ஸ்கோர் வந்தப்புறம் “நான் க்ரெடிட் கார்ட் எல்லாம் வச்சிக்கவே மாட்டேன்” என்று சொல்வது வேலைக்காக்காது – ஏன்னா நீங்க கடன் வாங்கி ஒழுங்கா கட்டியிருந்தாத்தான் உங்க சிபில் ஸ்கோர் ஏறும். வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்ற Big Ticket Loan வாங்கப் போகும் போது அதிக ஸ்கோர் இருந்தாத்தான் வட்டி கம்மியா இருக்கும். நான் கார்டே வச்சிக்கிட்டத்தில்லைன்னு சொல்றவருக்கான வட்டி கார்டுக்கு மாசா மாசம் ஒழுங்கா டியூ கட்றவருக்கான வட்டியை விட அதிகமா இருக்கும்.

க்ரெடிட் கார்ட்டை ஒழுங்கா கையாள்வது எப்படி

1. Credit Card பாலபாடம் இலவசக் கார்டை மட்டுமே வாங்குங்க – இலவச கார்டுகள் இருக்கும் போது Annual Fee கொடுத்து கார்ட் வாங்குவது வீண்

2. ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம், ரெண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் – எண்பதுகளில் பிரபலமாக இருந்த வாசகம் – இது க்ரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும் – பத்து கார்டு கையில் இருந்தால் எதை உபயோகிக்கிறோம், எதுக்கு எப்போ டியூ என்று மறத்து விடும். 99% மக்களுக்கு ரெண்டு கார்டுக்கு மேல் தேவையில்லை

3. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் மாதாவையும் மாதாந்திர டியூவையும் ஒரு நாளும் மறக்க வேண்டாம் – கார்டோட டியூ தேதிக்கு 5 நாள் முன்ன ஞாபகப் படுத்தறா மாதிரி ஒரு நோட்டிஃபிகேசன் வச்சிக்கோங்க, கடைசி நாள் வரை காத்திராமல் சீக்கிரமே பணத்தைச் செலுத்தவும்

4. பணத்தைச் செலுத்தும் போது ஸ்டேட்மெண்ட் பேலன்ஸ் முழுவதையும் செலுத்தவும். 5 % கட்டினா போதும் 10% கட்டினா போதும்னு பேங்க் காரன் சொல்லுவான் – ரிவால்விங் க்ரெடிட் ஒரு புதைமணல் அதில் சிக்கி மீண்டு வருவதற்கான வாய்ப்பு ரொம்ப கம்மி

5. ரிவால்விங் க்ரெடிட் உபயோகிக்காமல் பேலன்ஸ் முழுவதையும் எப்படிச் செலுத்துவது? அது ரொம்ப சிம்பிள் – அடுத்த மாசம் உங்களால் எவ்வளவு பணம் க்ரெடிட் கார்டுக்கு கட்ட முடியுமோ அதற்கும் கம்மியா இந்த மாசம் கார்டில் தேய்ங்க.. ரொம்ப சிம்பிள்தானே?

6. வங்கிகள் தரும் க்ரெடிட் லிமிட் பெரும்பாலும் உங்களை ரிவால்விங் க்ரெடிட் சுழலுக்குள் இழுக்கும் அளவுக்கே இருக்கும். என் அனுபவத்தில் பொதுவா பயனருக்குத் தரவேண்டிய லிமிட்டின் ரெண்டு மடங்கு தருகின்றன வங்கிகள். அவன் சொல்றதை தூர தூக்கிக் கடாசிட்டு நீங்களே உங்களுக்கு ஒரு லிமிட் செட் பண்ணுங்க – பொதுவா அது வங்கி தரும் லிமிட்டில் பாதியா இருக்கும். குறிப்பா சொல்லணும்னா சம்பளத்திலேருந்து – வாடகை அல்லது இ எம் ஐ, கார்டில் தேய்க்காத பிற செலவுகள், சேமிப்பு இவை போக எவ்வளவு கட்ட முடியுமோ அதுக்கு 5-10% கம்மியா லிமிட் முடிவு பண்ணிக்கோங்க

7. Credit Utilization Ratio : சிபில் ஸ்கோரை நிர்ணயிக்கும் முக்கிய காரணி இது. 
உங்களுக்கு வங்கி தந்திருக்கும் லிமிட்டில் எத்தை % உபயோக்கிறீர்கள் என்பதைக் குறிப்பது இது. உங்க லிமிட் 1 லட்ச ரூபாய் என்றும் இன்று உங்க பேலன்ஸ் 50,000 என்றும் வைத்துக் கொண்டால் உங்க Credit Utilization Ratio 50%, இது ஒரு போதும் 90% தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 80%க்கு குறைவாக வைத்துக் கொள்வது உசிதம். இதற்கு ஒரு சின்ன ட்ரிக் இருக்கு. உங்க Credit Utilization Ratio வங்கியால் சிபிலுக்கு மாதமொரு முறை அதாவது ஸ்டேட்மெண்ட் எடுத்தவுடன் ரிப்போர்ட் செய்யப்படும் – உங்க பில்லிங் ட்10ம் தேதி என்று வைத்துக் கொள்வோம் – நீங்க ஸ்டேமெண்ட்டுக்கெல்லாம் காத்திராமல் 5 ம் தேதியே இருக்கும் பேலன்ஸை க்ளியர் செய்து கொண்டே வந்தால் ஒவ்வொரு மாதமும் உங்க Credit Utilization Ratio மிகக் குறைவாகவே ரிப்போர்ட் ஆகும்.

8. க்ரெடிட் கார்டுகள் தரும் ரிவார்ட்ஸை ஒழுங்காக உபயோகியுங்கள். கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம், ஒழுங்காக திருப்பிக் கட்டினால் சிபில் ஸ்கோர் ஏறும் இவை போக கார்டுகள் வேறு ஒரு சலுகையும் தருகின்றன. அதுதான் கேஷ் பேக் மற்றும் ரிவார்ட்ஸ். 
குறிப்பிட்ட வகை ஷாப்பிங்குகளுக்கு கேஷ் பேக் தரும் கார்டுகள் உள்ளன. சிடி ரிவார்ட்ஸ் க்ரெடிட் கார்ட் போன்ற கார்டுகள் நீங்கள் பெரும் ரிவார்ட்ஸ் பாயிண்ட்களை பணமாக மாற்றி அதை உங்க கார்ட் பேலன்ஸ்க்கு கட்டுவதற்கு அனுமதிக்கின்றன. அதாவது கார்டும் இலவசம், அதைக் கொண்டு செய்யும் சில பர்ச்சேஸ்களுக்கு கேஷ் பேக், மற்ற பர்ச்சேஸ்களுக்கும் சுமாரா 1% ஸ்டேண்டெண்ட் க்ரெடிட் – சுருக்கமாச் சொன்னா கரும்பு தின்னக் கூலி.

இப்படி நமக்கு நாமே விதிகளை வகுத்துக் கொண்டால் க்ரெடிட் கார்ட் ஒரு நல்ல வரம்

வருமானவரியை சேமிக்கும் வழிமுறைகள்

பதிவை எழுதியவர் : திருமலை கந்தசாமி

ஜனவரி மாசம் வந்துடுச்சு. எல்லா நிறுவனத்திலும் இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி சேமிப்பு ரசீது கொடுக்கச்சொல்லிருப்பாங்க. அப்புறம் அடுத்த நிதி ஆண்டுக்கான வருமான வரி சேமிப்பு திட்டத்தை கொடுக்கச்சொல்லிருப்பாங்க.

2017 ஏப்ரல் – 2018 மார்ச் – நிதி ஆண்டின் வரிச்சேமிப்பை பார்ப்போம் ..

* இந்த வருடம் முதல் Standard Deduction 40,000 அமலுக்கு வருகிறது . இதன் மூலம் நமக்கான வரிவிலக்கு 2,90,000 ஆக உயர்ந்திருக்கு. இதற்க்கு எந்த ரசீதும் கொடுக்கத்தேவையில்லை. மேலும் பழைய Medical allowance கிடையாது.
Standard deductionனால் பெரிய அளவு நன்மை கிடையாது . ஏற்கனவே கொடுக்கப்பட்ட 19,200 Transport Allowance மற்றும் 15,000 Medical allowance நீக்கப்பட்டிருப்பதை கணக்கில் கொண்டால் வரிவிலக்குத்தொகை 5,800 மட்டுமே.

ஒரே நன்மை – இனி Medical allowanceக்கு ரசீது தரத்தேவையில்லை

* வருமான வரியின் மீதான Cess 4%யாக உயர்ந்திருக்கு. இதன் மூலம் சிறிய அளவு வருமான வரி கூடியிருக்கு.

* 80 சில் காட்டுவதற்காக மொத்தமாக ELSS _ Mutual Fund , NPS(Equity) வாங்குவது நல்லதல்ல.

* 80 சில் காட்டுவதற்காக, சில காப்பீட்டு முகவர்கள் உங்களிடம் உபயோகமில்லாத பாலிசிகளை விற்க முயற்சிப்பார்கள் . கிட்னி பத்திரம் .

* 80 சில் கடைசி நேரத்தில் வாங்குவதற்கு Bank FD , அரசு கடன் பத்திரங்கள் பாதுகாப்பானது என நான் கருதுகிறேன்.

* மருத்துவ காப்பீட்டினை 80D ல் காட்டி வரிச்சலுகை பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் நிறுவனம்(Employer) Fuel allowance என்று தனியாக ஒரு fuel expense reimbursement component கொடுத்தால் வரிவிலக்கு பெறலாம். சில நிறுவனங்களில் phone bill , news paper /magazine expense க்கும் reimbursement தர்றாங்க. ரசீது கொடுத்து 100% வரிவிலக்கு பெறலாம் .

My 2 cents : திருமலை சொன்னா மாதிரி, வரி சேமிக்கறேன்னு கடைசி காலாண்டில் impulsive முதலீடு செய்யாதீர்கள் – அது காப்பீடு அல்லது இ எல் எஸ் இஸ் மியூச்சுவல் ஃபண்ட் எதுவாக இருந்தாலும் உண்மையிலேயே தேவை என்றால் மட்டும் செய்யுங்க. தேவையான அளவு காப்பீடு இருந்தால் வேறு காப்பீட்டு ப்ளான் பத்தி யோசிக்காதீங்க. இ எல் எஸ் எஸ் என்றில்லை எந்த மியூச்சுவல் ஃபண்டிலும் மொத்த முதலீடு செய்வது நல்லதல்ல. உங்க போர்ட்ஃபோலியோவில் இ எல் எஸ் எஸின் தேவை இருந்தால் எஸ் ஐ பி முதலீடு ஆரம்பிங்க.

NPS(National Pension Scheme)

இப்பதிவை எழுதியவர்: திருமலை கந்தசாமி

நண்பர் ஒருவர் tax savingக்கு 80C,80Dக்கும் மேல எதாவது இருக்கான்னு கேட்டார் .? இருக்கே 80CCD -1b NPS (National Pension Scheme) Employee contributionனேன் .

ஓ, அப்படியா அருமை. எவ்வளவு வரைக்கும் போடலாமுன்னு கேட்டார் .? நாம எவ்வளவு வேணும்னாலும் போடலாம், ஆனால் 80CCD -1bன் வரிச்சலுகை 50,000 வரைக்கும் உண்டுனேன்.

பணி ஓய்வு பெற இன்னும் 30 வருடம் இருக்கு. தோராயமாக எவ்வளவு லாபம் கிடைக்கும்னார்?.
இப்போதைக்கு நீங்க 20% வருமானவரி வரம்பில் இருக்கீங்க . மாதம் 4,000னு தொடர்ந்து 30 வருடம் போடுங்க.
இன்னும் முப்பது வருடமிருப்பதால் Equityன் அதிகபட்ச முதலீட்டு சதவீதத்தை தேர்ந்தெடுங்க. அதனால உடனடியாக வரியில் வருடம் 9,984(cess 4%) மிச்சம். 30 வருடத்திற்கு -> 30* 9,984 -> 2,99,520 (இதுக்கு நான் வட்டிக்கணக்கு போடலை).
எதிர்காலத்தில் நீங்கள் 30% வருமானவரி வரம்பிற்க்கு மாறும் பொழுது ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ14,976 வரி மிச்சம். முடிஞ்சா வருட முடிவில் மிச்ச ரெண்டாயிராத்தையும்(50,000 – 48,000) முதலீடு செய்யுங்க .அப்புறம் 12% சதவீதம் CAGR returnsன்னு தோராயமாக கணக்கு செஞ்சா,உங்களுக்கு பணிஓய்வு சமயத்தில் மொத்தமாக ரூ 73,94,335(மொத்தத்தொகையின் 60%) கிடைக்கும். கிடைக்கும் மொத்தப்பணத்துக்கும் வருமான வரி கிடையாது. மேலும் மிச்சமிருக்கும் பணத்திற்கும் தோராயமாக 6% annuityனு கணக்கு செஞ்சா மாதம் ரூ24,647 பென்ஷன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் நீங்கள் இறந்து பிறகு உங்க நாமினிக்கு ரூ 49,29,557 கிடைக்கும்னு சொன்னேன் . நான் விளக்கியது annuityன் ஒரு வகைத்திட்டமே. பணிஓய்வுக்குப்பிறகு மீதமிருக்கும் ரூ 49,29,557(மொத்தத்தொகையின் 40%)னை எந்த வகையான annuity திட்டத்தில் போடுவதுனு நீங்களே முடிவு செஞ்சுக்கலாம்.

ஆ….னு ஆச்சிரியப்பட்டார். இப்படியொரு அற்புத திட்டமா .? னார்
அற்புதமுமில்லை, ஆச்சர்யமுமில்லை . எல்லாம் கூட்டு வட்டியின் மாயம்.

“Compound interest is the eighth wonder of the world. He who understands it, earns it … he who doesn’t … pays it.”
― Albert Einstein

Reference :

https://npscra.nsdl.co.in/state-nodal-annuity-service-provi…

The different type of Annuity options are:
Annuity/ pension payable for life at a uniform rate.
Annuity payable for 5, 10, 15 or 20 years certain and thereafter as long as the annuitant is alive.
Annuity for life with return of purchase price on death of the annuitant.
Annuity payable for life increasing at a simple rate of 3% p.a.
Annuity for life with a provision of 50% of the annuity payable to spouse during his/her lifetime on death of the annuitant.
Annuity for life with a provision of 100% of the annuity payable to spouse during his/her lifetime on death of the annuitant.
Annuity for life with a provision of 100% of the annuity payable to spouse during his/ her life time on death of annuitant. The purchase price will be returned on the death of last survivor.

https://economictimes.indiatimes.com/…/article…/67036758.cms

https://www.pfrda.org.in/myauth/admin/showimg.cshtml?ID=848

https://www.livemint.com/…/Invest-more-in-equities-soon-und…

Posted in NPS

Rear View Mirror Investing

இந்த ஆண்டு இந்த கம்பெனியின் பங்கை இத்தனை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தால் இன்னிக்கு இத்தனை கோடி ஆகியிருக்கும்னு ஃபார்வேர்ட் மெசஜ் எழுதறதுக்கு தடை விதிக்கச் சொல்லணும், முடியல இவனுங்களோட

After the Fact இப்படி நடந்திருந்தா இப்படி ரிசல்ட் வந்திருக்கும்னு சொல்றது ரொம்ப ஈசி, அப்படி எழுதறவங்களில் ஒருத்தர் கூட அந்நிறுவனங்களின் பங்குகளை குறைந்த விலையில் வாங்கி பெருமளவு சம்பாதித்ததாகத் தெரியவில்லை.

ரிலையன்ஸ் பங்கை வாங்கியிருந்தால், எச் சி எஃப் சி வாங்கியிருந்தால், ஐடிசி வாங்கியிருந்தால்னு தால் போஸ்ட் எழுதறவங்களுக்கு ஒண்ணு சொல்லிக்கறேன் – உங்க தந்தையிடமிருந்து புறப்பட்ட மில்லியன் கணக்கான விந்தில் வேற விந்து மில்லி செகண்ட் வேகத்தில் ஜெயித்திருந்தால் இந்த மாதிரி போஸ்ட் எழுத நீங்கள் பிறந்தேயிருக்கமாட்டீர்கள்

Children’s மியூச்சுவல் ஃபண்ட் – இவ்வகை ஃபண்ட்கள் தேவையா?

ஆதித்ய பிர்லா நிறுவனம் புதிதாய் ஒரு ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. பால பவிஷ்ய யோஜனா என்ற இந்த ஃபண்ட் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட ஃப்ண்ட் என்கிறது அந்நிறுவனம். இவ்வகை ஃபண்ட்கள் தேவையா?

ஐஐடிக்கு கட்டணம் 1.78 லட்சத்திலேருந்து 12 லட்சமாச்சு, மெடிக்கல் எண்ட்ரன்ஸுக்கு செலவு 2.3 லட்சத்திலேருந்து 12 லட்சமாச்சு என்றெல்லாம் பயமுறுத்திவிட்டு 10,000 ரூபாய்  மாதாந்திர முதலீடு 20 ஆண்டுகள் கழித்து  10% வளர்ச்சியில் 76 லட்சமாகும் 15% வளர்ச்சியில் 1.5 கோடியாகும் என்றெல்லாம் படம் காட்டுகிறது இத்திட்டத்தின் கையேடு. கண்ணில் பட்ட இடமெல்லாம் தேடி விட்டேன், திட்டத்தின் தனித்துவம் என்று எதையும் சொல்லவேயில்லை.  என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஒரு நல்ல காரணம் கூட எனக்குத் தென்படவேயில்லை.

பாப்பா பேர்ல ஒண்ணு பையன் பேர்ல ஒண்ணுன்னு ரெண்டு பாலிசி போட்டுடலாம் சார் என்கிற இன்சூரன்ஸ் ஏஜெண்ட் லெவலுக்கு ஆதித்ய பிர்லா நிறுவனம் வந்திருப்பது பெரும் சோகம். எச் டி எஃப் சி, ஆக்சிஸ், யூடிஐ, எஸ்பிஐ மேக்னம் ஏன் எல் ஐ சி மியூச்சுவல் ஃபண்ட் கூட சில்ட்ரன்னு பேர் வச்ச் ஃபண்ட் வச்சிருக்கு நமக்கும் ஒண்ணு இருக்கட்டும்னு ஆரம்பிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்.

சேமிப்பும் முதலீடும் இன்றியமையாதவை. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. பிள்ளைகள் கல்லூரிப் படிப்புக்கு சேமித்தே ஆகணும், அதற்கு நீண்ட கால சந்தை முதலீடுதான் என் சாய்ஸும் – ஆனால் அதற்காக இப்படி ஒரு தனி ஃபண்டில் முதலீடு செய்யத் தேவையில்லை. அனைத்து சேமிப்பு மற்றும் முதலீட்டு ஆலோசகர்களும் சொல்றா மாதிரி டைவர்சிஃபைட் போர்ட்ஃபோலியோ இருந்தால் போதும் (லார்ஜ் கேப், மிட் கேப், கடன் பத்திரங்கள் கொண்டவை) – இவை தவிர படிப்புக்கு ஒரு ஃபண்ட், மருத்துவச் செலவுக்கு ஒரு ஃபண்ட், சாப்பாட்டுக்கு, உடைக்கு, சாவு செலவுக்குன்னு தனித்தனியா ஃபண்ட்கள் தேவையில்லை. வரிவிலக்கு போன்ற சிறப்பு காரணங்கள் கொண்ட ஃபண்ட்கள் விதிவிலக்கு

படிப்புக்காக சேமிக்கும் சிறப்பு ஃபண்ட் என்று சொல்கிறார்களே, அப்படி என்ன இருக்குன்னு பாத்தா புழக்கத்தில் இருக்கும்  அக்ரசிவ் ஹைப்ரிட் மற்றும் கன்சர்வேடிவ் ஹைப்ரிட் ஃபண்ட்கள்தான், ப்ரத்யேகமான அம்சங்கள் ஏதுமில்லை.

எவ்விதச் சலுகையும் இல்லாமல் 5 ஆண்டுகள் லாக் இன் ப்ரீயட் கொண்ட ஒரு ஃபண்டில் முதலீடு செய்வது அர்த்தமற்றது. நீண்ட காலம் ஒரு ஃபண்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற வாதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலீடு செய்துள்ள ஃபண்டின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்றாலோ, அந்த கேட்டகரியில் வேறு ஃபண்ட்கள் இதை விட சிறப்பாக செயல்படுவதைப் பார்த்தாலோ, முதலீட்டு வேறு ஃபண்ட்களுக்கு மாற்றும் திறம் நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும்.

பிள்ளைகள் படிப்புக்கான சேமிப்பு, நாமே நினைத்தாலும் 5 ஆண்டுகளுக்கு பணத்தை எடுக்க முடியாது என்கிற உளவியலை வைத்து ஃபண்டை சந்தைப்படுத்த நினைக்கிறது ஆதித்ய பிர்லா நிறுவனம். இதில் முதலீடு செய்வதை விட லாக் இன் பீரியட் இல்லாத, 5 ஆண்டுகளுக்கும் மேலாக நன்றாக செயல்படும், கட்டணம் கம்மியாக இருக்கும் வேறொரு அக்ரெசிவ் ஹைப்ரிட் ஃபண்டில் முதலீடு செய்வது நலம்

குறிப்பிட்ட நாளை எதிர்பார்த்து சேமிக்கும் ஃப்ண்ட்களை டார்கெட் டேட் ஃபண்ட் என்பார்கள் – ரிட்டையர்மெண்ட், கல்லூரிச் செலவு போன்றவை எந்தாண்டு வரும் என்று பெரும்பான்மையானோர் சொல்லிவிடுவார்கள். 15 ஆண்டுகள் கழித்து வரும் கல்லூரிச் செலவுக்கோ 30 ஆண்டுகள் கழித்து வரும் ரிட்டையர்மெண்டுக்கோ சேமிக்கும் ஃபண்ட்கள் ஆரம்பத்தில் அதிக ஈக்விட்டி, கம்மி பாண்ட் என்று ஆரம்பித்து ஈக்விட்டி குறைந்து கொண்டே வரும். டார்கெட் டேட் அருகில் வரும்போது பெரும்பான்மை பாண்டிலும் சிறிய அளவு ஈக்விட்டியிலும் இருக்கும். அடுத்தாண்டு கல்லூரிக்கு பணம் வேணும் என்ற போது 80% ஈக்விட்டியில் பணத்தை வைப்பது நல்லதல்ல.

அமெரிக்காவில் 529 ப்ளான் என்று பிள்ளைகள் படிப்புக்குச் சேமிக்கும் திட்டம் இருக்கு. அதில் செய்யும் முதலீட்டை படிப்புச் செலவுக்கு மட்டுமே உபயோகிக்க முடியும். பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்லும் போது ஃபண்ட் நிறுவனம் நேரடியாக கல்லூரிக்கு பணத்தை அனுப்பும். 2011இல் பிறந்த மகள் படிப்புக்கு நான் சேமிக்க நினைத்தால் 80% ஈக்விட்டியிலும் 20% பாண்டிலும் ஆரம்பித்து அவளுக்கு 16-17 வயதாகும் போது அப்படியே தலைகீழாகிடும். 80% பாண்டிலும் 20% மட்டுமே ஈக்விட்டியிலும் இருக்கும். மேலும் இதில் செய்யும் முதலீட்டுக்கு வருமானவரி விலக்கும் கிடைக்கும்.

இதைப் போன்ற ஒரு திட்டமே இந்தியாவிற்குத் தேவை – இப்போதிருக்கும் சில்ட்ரன்ஸ் ஃபண்ட் என்ற போர்வையில் இருக்கும் ஹைப்ரிட் ஃபண்ட்கள் அல்ல.

இந்த மாற்றத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மட்டும் கொண்டு வந்து விடமுடியாது. மத்திய அரசு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும், வருமானவரி விலக்கு வழங்க வேண்டும். கல்லூரிகளும் கருப்புப் பணமின்றை முழுக் கட்டணத்தையும் முறைப்படி வாங்க முன்வரவேண்டும். அதுவரை எல்லா சில்ட்ரன்ஸ் ஃபண்ட்களும் பத்தோடு ஒன்று பதினொன்று ஹைப்ரிட் ஃபண்ட்களே.

பழைய மற்றும் புதிய பென்சன் திட்டங்கள்

இப்பதிவை எழுதியவர் : திருமலை கந்தசாமி

பழைய ஓய்வூதியத் திட்டம்: 
பணியாளர் பணி ஓய்வின் பொழுது பெற்ற Basic + DA வில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் கணக்கிடப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியம் பெற குறைந்த பட்சம் 10 வருடம் பணியில் இருந்திருக்க வேண்டும் .குறைந்த பட்ச ஓய்வூதியத்தொகை – 7,850 (மாதம்)
http://cms.tn.gov.in/sit…/default/files/…/fin_e_313_2017.pdf

30 வருடத்திற்கு மேல் பணியில் இருந்திருந்தால் (முழு ஓய்வூதியம்) -> 50% * (10 மாதங்கள் Basic + DAன் சராசரி / பணி ஓய்வின் பொழுது பெற்ற Basic + DA)
30 வருடத்திற்கு கீழ் பணியில் இருந்திருந்தால் -> 50% * (10 மாதங்கள் Basic + DAன் சராசரி / பணி ஓய்வின் பொழுது பெற்ற Basic + DA) * (மொத்தப் பணியின் அரை ஆண்டுகள் / 60).
http://www.tn.gov.in/karuvoolam/pension/suppen.htm

ஊழியரின் இறப்பிற்குப் பின் அவரைச் சார்ந்தோருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்படும் . இதன் கணக்கீட்டை அறிய இங்கு பார்க்கவும் .
http://www.tn.gov.in/karuvoolam/pension/fampension.htm

ஓய்வூதியம் தவிர்த்து மேலும் பல சலுகைகள் வழங்கப்படுகிறது. அதில் மிக மிக முக்கியமானது Pension – Commutation. அரசு ஊழியர் பணி நிறைவின் போது ,அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கான ஓய்வூதியத்தின் 33% சதவீத பணத்தை முன்பணமாக ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம். அரசு பதினைந்து ஆண்டு பணத்தையும் மொத்தமாக கொடுக்காமால் , 8% வட்டியை ஆதாரமாகக்கொண்ட commuatation table ன் படி பணத்தைக் கணிக்கிட்டு வழங்கும். http://www.tn.gov.in/karuvoolam/pension/commutab.htm

ஒரு எளிய உதாரணம். ஓய்வூதியத் தொகை – 30,000.Commutation value -> 33% * 30,000 -> 10,000.
பணி ஓய்வின் பொழுது வயது – 58. எனவே நாம் commutation table ல் 59 வயதிற்கான 8.371 யை கணக்கில் கொள்ளவேண்டும்.

ஊழியர்க்கு கிடைக்கும் மொத்த ரொக்கம் (commutation lump sum) -> 10,000 * 12 (மாதம்) * 8.371 -> 10,04,520. 
commutation கழிவிற்க்கு பிறகு ஓய்வூதியத் தொகை – 20,000.பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு மொத்த ஓய்வூதியத் தொகை வழங்கப்படும். அரசும் ஓய்வூதியத் தொகையில் increment கொடுக்கும் .
http://cms.tn.gov.in/sit…/default/files/…/fin_e_313_2017.pdf

—-

CPS – Contribution Pension Scheme
2003 April க்கு பிறகு பணியில் சேர்ந்த பணியாளரின் Basic + DA வில் இருந்து 10% சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு CPS நிதியில் வரவு வைக்கப்படும். பிடிக்கட்ட தொகைக்கு இணையான தொகையினை அரசும் தன் பங்கீடாகத்தரும்(employer contribution ).

ஒரு எளிய உதாரணம் .பணியாளரின் Basic + DA – 25,000.
CPS ற்கு பிடிக்கப்படும் தொகை 2,500(employee) . 
அரசு வழங்கும் தொகை 2,500 (employer). 
CPS நிதியில் வரவு – 5,000 (employee + employer).

தற்போதைய நிலவரப்படி அரசு 8.6% வட்டி வழங்குகிறது. பணி ஓய்வின் பொழுது அரசு ஊழியர் குறிப்பிட்ட சதவீத பணத்தை(i.e. 60%) ரொக்கமாக பெற்றுக்கொண்டு மீதத்தொகையினை((i.e. 40%) கொண்டு ஒரு Annuity திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் . (மேலும் விவரங்களுக்கு என்னுடைய NPS பதிவை பார்க்கவும்).

அரசு ஊழியரின் புகார்கள்:

1. CPS திட்டமே போலி , பணம் என்னானது என்றே தெரியவில்லை.பணத்திற்கு கணக்கில்லை.
விளக்கம் : உண்மையில்லை. http://cps.tn.gov.in/public/ என்ற இணையதளத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் வரவை சரி பார்த்துக்கொள்ளலாம். Statement update காலதாமதமாகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். 27 Jan 2019 அன்று Randomயாக நான் சரிபார்த்த பொழுது Feb 2018 வரை employer +employeeன் வரவு மற்றும் வட்டியினை பார்க்க முடிந்தது.

2.CPS திட்டம் நிலையற்றது. அரசு பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது.
விளக்கம் : உண்மையில்லை. சிலர் NPS உடன் இதை குழப்பிக்கொண்டுள்ளார்கள் என நினைக்கிறேன். அரசு இந்த பணத்தை எப்படி கையாள்கிறது என எனக்குத்தெரியவில்லை. ஆனால் தற்போது 8.6% வட்டி வழங்குகிறது.

3.CPS திட்டத்தினால் பென்ஷனே கிடையாது.
விளக்கம் : தவறான புரிதல். அரசு பென்ஷன் வழங்காது . ஆனால் பணி முடிவின் பொழுது பணியாளரே CPS ன் ரொக்கத்தொகையைக் கொண்டு தனக்கான Annuity திட்டத்தினை தெரிவு செய்து ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.

4.CPS திட்டத்தினால் குறைவான பென்ஷனே கிடைக்கும்.
விளக்கம் : ஓரளவுக்கு சரிதான். ஏனென்றால் பணி ஓய்வு சமயத்தில் பெறும் Increment, CPS ன் மொத்தத்தொகையில் பெருமளவு மாற்றத்தை கொடுக்காது. மேலும் பாதுகாப்பான முதலீடு என்பதால், 8.6% வட்டி குறைவான returnsயையே கொடுக்கும். பணி ஓய்விற்க்கு பிறகு அரசு ஓய்வூதியத்தில் increment கொடுக்கும் . CPS ல் கிடைக்காது.

5.CPS திட்டத்தினால் Commutationயே கிடைக்காது. ரொக்கத் தொகை கிடையாது.
விளக்கம் : பாதி சரி, பாதி தவறு. CPS ன் மொத்தத்தொகையில் குறிப்பிட்ட சதவீத பணத்தையும்(i.e. 60%) ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இது Commutation கிடையாது,பங்களிப்பு பணம் .

6.CPS ல் பணியாளர் இறப்புக்கு பின் பென்ஷனே கிடையாது.
விளக்கம் : தவறான புரிதல். Annuity ல் நிறைய திட்டங்கள் உள்ளன. அதில் அதிக சதவீத வட்டி தரும் ஒரு திட்டத்தை எடுத்து குழப்பிக்கொள்ள வேண்டாம் . உங்களுக்கான திட்டத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். https://economictimes.indiatimes.com/…/tomorro…/48326210.cms

7.CPSல் பணியாளர் இடையில் மரணமடைந்தால் பென்ஷனே கிடையாது.
விளக்கம் : ஓரளவுக்கு சரிதான். CPS ன் மொத்த வரவுத்தொகை குறைவாக இருக்கும். அதனால் Annuity செய்ய அதிகப்பணம் இருக்காது. இதை ஈடு செய்ய ஒரு Term Plan எடுத்துக்கொள்ளலாம்.

8.CPSல் கார்போரேட் உடன் கூட்டு.
விளக்கம் : தவறான புரிதல். Annuity ல் சில சிறப்பான திட்டங்களை HDFC ,ICICI ,KOTAK,etc. போன்ற தனியார் வங்கிகள் வழங்குகின்றன. ஆனால் Annuity நிறுவனத்தை தேர்வு செய்யும் உரிமை பணியாளருக்கே. தனியார் நிறுவனத்தில் நம்பிக்கையில்லையெனில் SBI அல்லது LIC யினை தேர்வு செய்து கொள்ளலாம்.

9.CPSன் பென்ஷன் தொகை எதிர்கால பண வீக்கத்தை(Inflation)யை ஈடு கட்டாது.
விளக்கம் : உண்மை . ஆனால் 8.6% வட்டியை அதிகரிக்க பகுதி பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை பற்றி ஆராயலாம் .இதை கூட்டமைப்புகள் ஏற்றுக் கொள்வது சந்தேகமே . NPS மாதிரி பணியாளருக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டால் மிகச் சிறப்பாய் இருக்கும்.

10. CPS யால் பணியாளருக்கு நன்மையில்லை. பழைய ஓய்வூதியத் திட்டமே சிறந்தது 
விளக்கம் : பணியாளரின் பார்வையில் உண்மை தான். ஒவ்வொரு மாதமமும் 10% (Basic + DA )பிடிக்கப்படுவதை பணியாளர்கள் விரும்பவில்லை. ஆனால் CPS அரசுக்கு எதிர்காலத்தில் ஓய்வூதியத்தினால் வரும் மிகப்பெரும் பொருளாதார சுமையினை குறைக்கும் .

Posted in NPS

பங்குச்சந்தையும் பொறுமையும்

Image result for warren buffett forever

Va Nagappan மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் பொறுமையின்மை குறித்து ஆதங்கப்பட்டிருந்தார்.

அஞ்சு லட்ச ரூபாய்க்கு வாங்குன நிலம் இன்னிக்கு கோடிரூபாய் என்றும் 300 ரூபாய்க்கு வாங்குன தங்கம் இன்னிக்கு 3000ரூபாய் என்றும் வி்யப்போர், அதற்கு ஆன காலத்தை குறிப்பிட மறந்துவிடுகின்றனர். ரியல் எஸ்டேட்டிலும் தங்கத்திலும் பொறுமை காக்க தயாராக இருக்கும் அதே ஆட்கள் ஈக்விட்டியில் மட்டும் அவசரப்படுகின்றனர். பணம் போட்ட அடுத்த ஆண்டே ரெட்டிப்பாகணும் என்று எதிர்பார்க்கின்றனர் அல்லது ஆகும் என்று நம்பவைக்கப்பட்டிருக்கின்றனர்.

பங்குச் சந்தை முதலீடு மந்திரத்தில் மாங்காய் வரவைக்கும் வேலை அல்ல, ஓ எம் ஆர் தாண்டி இன்னிக்கு 10 லட்ச ரூபாய்க்கு இடம் வாங்கிப் போட்டா பிற்காலத்தில் ஒரு கோடி போகும் என்று எதிர்பார்க்கிறோம் அல்லவா? அதே போல ஏபிசி கம்பெனி குறிப்பிட்ட தொழிலில் இருக்கு, அதுக்கு டிமாண்ட் இருக்கு அந்த டிமாண்ட் மேலும் கூடும் அப்ப அக்கம்பெனிக்கு லாபம் அதிகரிக்கும் அதன் பங்கு விலை கூடும் அதுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம்னு கணிச்சு செய்யறதுதான் பங்குச் சந்தை முதலீடு. இதை நம்மால் தொடர்ந்து கண்காணிக்க முடியாது என்பதாலும் சிறு தொகையில் பெரிய நிறுவனங்களின் பங்குகளை வாங்க முடியாது என்பதாலும், மாதா மாதம் சிறு தொகை முதலீடு செய்வது ப்ராக்டிகலா ஒத்து வராது என்பதாலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறோம். குறுகிய கால (மூன்றாண்டுகளுக்குள்) தேவையோ இலக்கோ இருந்தால் அதற்கான சேமிப்பை பங்குச் சந்தைக்குள் கொண்டு வராதீர்கள். Wealth Creation / Retirement Planning போன்ற நீண்டகாலத் திட்டங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் போன்று பலன் தரக்கூடியது வேறில்லை என் கருத்தில். ஆனா அதுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வரவேண்டும், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் நம்மை பாதிக்க அனுமதிக்ககூடாது,

அப்புறம் தேர்தல் வரப்போகுது, ரிசஷன் வரப்போகுது மார்க்கெட் வீழும், அதனால இப்ப பணத்தை எடுக்கறேன் அப்புறம் மீண்டும் போடறேன் என்பதெல்லாம் நீண்டகால் முதலீட்டின் பயனை அடையமுடியாமல் ஆக்கிவிடும். பங்குச் சந்தையின் போக்கை ஓரளவுக்கு கணிக்ககூடியவர்கள் வாரன் பஃபெட் போன்ற வெகுசிலரே, துல்லியமாக கணிக்ககூடியவர்கள் யாருமேயில்லை, அப்படியிருக்கையில் பங்குச் சந்தை முதலீட்டில் “உள்ளே -வெளியே” விளையாடுவோரின் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து முதலீடு செய்துவருவோரின் போர்ட்ஃபோலியோ சிறப்பாக இருக்கும்.

ஆண்டுக்கொரு முறையாவது ரீபேலன்ஸ் செய்வது அவசியம், போர்ட்ஃபோலியோவை சரிபார்த்து நாம் முடிவு செய்திருக்கும் ஈக்விட்டி – ஃபிக்ஸ்ட் இன்கம் ரேஷியோவுக்கு மறுபடி கொண்டு வரணும் அது வேற, இந்த மாசம் ஈக்விட்டிலேருந்து முழுசா பாண்டுக்கு மாத்தறேன், ரெண்டு மாசம் கழிச்சு மறுபடியும் ஈக்விட்டிக்கு மாத்தறேன்னு போன நஷ்டமே மிஞ்சும். அந்த அளவுக்கெல்லாம் சரியா மார்க்கெட்டை டைம் செய்யக்கூடியவராக இருந்தால் உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே தேவையில்லை. அப்படிப்பட்டவர் ஃபியூச்சர் & ஆப்சனில் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்

அப்புறம் இன்னோரு விசயம் – ஆயுள் காப்பீடு எடுத்தாச்சு, மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி ஒரு வருசமா போடற அனுபவம் கிடைச்சாச்சு, அடுத்து என்ன – நேரடி பங்குகளில் முதலீடு செய்வது என்று பலரும் நினைக்கின்றனர். இது மிகவும் தவறு. 
It is not a natural progression to move from MF to Direct Equity – it is completely different ball game. while it is not impossible to learn what is needed to invest in direct equity, it is a lot to learn and it is ongoing learning. it takes a lot of time and efforts to master “Stock Picking” – yet, Direct equity investing will not cover market volatility like SIP in MF does.

I am not a big fan of DIY direct equity, as a matter of fact, I don’t do it at all.

எந்தப் பங்கை எப்போது வாங்கணும் என்று முடிவு செய்வது கடினம், வாங்கின பங்கை எப்போது விற்கணும் என்று முடிவு செய்வது அதை விடக் கடினம். பங்கின் விலை ஏறிக்கொண்டே இருந்தாலும் விற்க விடாது இறங்கிக் கொண்டேயிருந்தாலும் விற்கவிடாது நம் மனம், அதற்குக் காரணம் நம் பணத்தின் மீது நாம் வைத்திருக்கும் எமோசனல் அட்டாச்மெண்ட். அது இல்லாத காரணத்தால் ஒரு ஃபண்ட் மேனேஜரால் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க முடிகிறது.

எனக்கு நேரடி பங்கு வர்த்தகம் குறித்த அனுபவமோ அறிவோ இல்லை, அவற்றைப் பெற படிக்க நேரமுமில்லை ஆனாலும் நேரடி பங்குகள் வாங்கணும் என்று நினைக்கிறீகளா? உங்களுக்கு PMS (portfolio management services) சரியா இருக்கும். 1.5 -2% கட்டணத்துக்கு உங்க பணத்தை “மேனேஜ்” செய்வதற்கு நிறுவனங்கள் உள்ளன. 2% கட்டணம் போனாலும் இறுதியில் சொந்தமா செய்யும் முதலீட்டை விட இது அதிக லாபம் தரும். பி எம் எஸ் கொடுப்பதற்கு குறைந்தபட்சம் உங்களிடம் 25 லட்ச ரூபாய் இருக்க வேண்டும், பெரும்பாலான நிறுவனங்கள் 50 லட்சரூபாய்க்கு குறைந்து பி எம் எஸ் செய்வதில்லை.

அவ்வளவு ரூபாய் சேரும்வரை என்ன செய்வது என்கிறீர்களா? உள்ளே வெளியே விளையாடமால் Keep Investing and Stay Invested in Mutual Funds. Amen

டெர்ம் பாலிசியில் தேவையற்ற செலவுகள்

எண்டோமெண்ட் பாலிசிகளில் அதிக லாபம் பார்த்த காப்பீட்டு நிறுவனங்கள் மக்கள் டெர்ம் பாலிசியின் பக்கம் கவனத்தைத் திருப்பியதும் அதிலும் தேவையற்ற விசயங்களைப்புகுத்தி பணம் சம்பாதிக்க முயல்கின்றன. அதில் முக்கியமானது “ரிட்டர்ன் ஆஃப் ப்ரீமியம்” ரைடர். இதில் பயனர் காப்பீட்டு காலத்தில் இறக்காவிட்டால் அவர் கட்டிய ப்ரீமியம் தொகை திரும்பக் கிடைக்கும்

30 வயது ஆகும் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு ஒரு கோடி டெர்ம் பாலிசி எடுத்தால் அவரோட ப்ரீமியம் ஆண்டுக்கு தோரயமாக 10,000 ரூபாய் வரும் அதுவே அவர் ப்ரீமியம் திரும்பக் கிடைக்கும் பாலிசி எடுத்தால் ப்ரீமியம் ஆண்டுக்கு 25,000 ரூபாய். அதாவது ஆண்டுக்கு 15,000 ரூபாய்.

பாலிசி முடிவில் அவர் இறக்கா விட்டால் அவருக்கு கிடைக்கும் தொகை 25000*30 = 7,50,000 ரூபாய். அதற்கு பதிலாக அவர் ப்யூர் டெர்ம் பாலிசி 10,000 ரூபாய்க்கு எடுத்துவிட்டு மிச்ச 15,000த்தை மாதம் 1250 ரூபாய் வீதம் ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்தால் 10% வளர்ச்சியில் 30 ஆண்டுகால முடிவில் அவருக்கு 28,25,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். 30 ஆண்டு என்பது மிக நீண்ட காலம் 10% வளர்ச்சி காண சாத்தியம் மிக அதிகம். வெறும் 6% வளர்ச்சி கண்டாலே அவரிடம் 12,55,000 ரூபாய்க்கு மேல் இருக்கும்.

காப்பீட்டுக்கு கட்டிய பணம் திரும்பக் கிடைக்கணும் என்கிற மனநிலையில் இருந்து வெளியே வந்து சிந்தித்தால் யாரும் இதைத் தெரிவு செய்ய மாட்டார்கள்.

தேவையற்ற இரண்டாவது எக்ஸ்ப்ரஸ் பே. 30 வயதாகும் நபர் 30 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீடு எடுக்கிறார். ஆண்டு தோறும் கட்டினால் 11,000 ரூபாய் கட்டினால் போதும் (இது வேறு நிறுவனம்). எதுக்கு சார் 30 வருசம் கட்டறீங்க? எட்டே வருசத்தில் கட்டினால் மொத்த ப்ரீமியத்தில் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கும் சீக்கிரமும் கட்டி முடிச்சிடலாம் என்று ஏஜெண்ட்கள் மூளைச் சலவை செய்வர். 
30 ஆண்டுகள் *11000 = 3,30,000
8 ஆண்டுகள் * 28261= 2,26,088 
மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் லாபமாகத் தோன்றும். ஆனால், அந்த எட்டு ஆண்டுகளும் நீங்கள் ஆண்டுக்கு 17,261 ரூபாய் அதிகமாகச் செலுத்துவீர்கள். இதையே மாதம் 1438 ரூபாயாக நல்ல மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்து வந்தால் 8 ஆண்டுகள் முடிவில் உங்களிடம் 2,10,000 ரூபாய்க்கு மேல் இருக்கும். அதாவது ஒரு லட்ச ரூபாய் லாபத்தைப் பெற 2 லட்சத்துக்கும் மேல் இழக்கிறீர்கள். அப்படி 8 ஆண்டுகள் முதலீசு செய்து 2 லட்சத்துக்கும் சேர்த்தால், அதற்கப்புறம் அதிலிருந்து வரும் வட்டி அல்லது வளர்ச்சியிலிருந்தே ஆண்டுக்கு 11,000 எடுத்து ப்ரீமியமாக கட்டலாம்.

இந்த எக்ஸ்ப்ரஸ் பே இன்னும் ஒரு விதத்தில் நஷ்டமே தருகிறது. பாலிசிதாரர் ரெகுலர் பே முறையில் ப்ரீமியம் செலுத்தி வரும் போதும் 9 ம் ஆண்டு இறந்தால் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும், அவர் செலுத்திய ப்ரீமியம் 8*11000 = 88,000 ரூபாய் மட்டுமே. அதே அவர் எக்ஸ்ப்ரஸ் பே தெரிவு செய்தாலும் குடும்பத்துக்கு கிடைக்கப் போவது என்னவோ அதே ஒரு கோடிதான் ஆனால் அவர் 2,26,000 ரூபாய் ப்ரீமியம் செலுத்தி முடித்திருப்பார்.

பாலிசிதாரர், 55 வயதில் சீக்கிரமே ரிட்டையர் ஆகும் முடிவு எடுத்தால், அப்போது டெர்ம் பாலிசியை கேன்சல் செய்து விடலாம், அதற்கப்புறம் 5 ஆண்டுகள் ப்ரீமியம் செலுத்த வேண்டியதில்லை, ஆனால் எக்ஸ்ப்ரஸ் பே முறையில் 8 ஆண்டுகளில் முழு ப்ரீமியத்தையும் செலுத்தியிருந்தால், தேவையற்ற போதும் கவரேஜ் தொடர்ந்து கொண்டிருக்கும்

தேவையற்ற மூன்றாவது ரைடர் இரண்டாவது ரைடரைப் போன்றது ஒரு சிறிய வித்தியாசம் மட்டுமே. 30 வயது ஆகும் நபர் 30 ஆண்டுகளுக்கு டெர்ம் பாலிசி எடுக்க விரும்புகிறார். அவருக்கு சொல்லப்படுவது – உங்களால் 30 ஆண்டுகள் ப்ரீமியம் கட்ட முடியும், 50 ஆண்டுகளுக்கு கவரேஜ் தர்றோம், நீங்க 30 ஆண்டுகள் ப்ரீமியம் கட்டினால் போதும் என்று. 30 ஆண்டுகள் பணம் கட்டி 50 ஆண்டுகள் கவரேஜ் பெருவது லாபம் என்று நினைத்துவிடாதீர்கள் – கம்பெனிகள் செய்வது மேலே கூறியது போன்றே – 50 ஆண்டுகளுக்கான ப்ரீமியத்தை உங்களிடமிருந்து 30 ஆண்டுகளில் வசூலித்து விடுவார்கள் – இதை வேண்டாம் என்று சொல்லக் காரணம் வேறு. எக்ஸ்ப்ரஸ் பே முறையில் பண நஷ்டம் மட்டுமே ஆனால் இந்த பாலிசி அடிப்படையிலேயே தவறு. ரிட்டையர் ஆன, வருமானம் ஈட்டாத யாருக்கும் ஆயுள் காப்பீடு தேவையில்லை – 60 வயது முதல் 80 வயது வரை தேவையே படாத காப்பீட்டுக்கு 30 ஆண்டுகாலம் ப்ரீமியம் கட்டிக் கொண்டு இருப்பீர்கள்.

காப்பீடு என்பது செலவு, அது முதலீடு அல்ல, காப்பீட்டுக்கு கட்டிய பணம் திரும்ப வரவேண்டும். ரிட்டையர் ஆன பின்பும் 80-90 வயதில் இறந்தாலும் பணம் கிடைக்கணும் போன்ற எண்ணங்களை விட்டொழித்தால், தேவைப்படும் காலத்தில் தேவையான அளவு காப்பீடு பெறலாம்

Investment is Individualistic

Image result for one size does not fit all

ஒரு நண்பர் லாபம் தரக்கூடிய SIP Scheme ரெண்டு சொல்லுங்கன்னு கேட்டிருந்தார். போற போக்கில் சொல்லிட்டுப் போக அது ஒன்றும் ஃபாஸ்ட் புட் ஆர்டர் அல்ல. ரொம்ப நாளைக்கு முன்ன எழுதிய போஸ்ட்டிலிருந்து ஒரு பகுதியை மறுபடி எழுதறேன்

முதலீடு அப்படிங்கறது “one size fits all” ரெடிமேட் சட்டையல்ல எல்லாரும் ஒரே சட்டையை வாங்கி போட்டுக் கொள்ள. Retirement Planning / Wealth Creation என்பது வீடு கட்டுவது போல. இடம், டிசைன், வீட்டின் அளவு, எத்தனை பெட்ரூம் எல்லாம் முடிவு பண்ணி அப்புறம் நல்ல தரமான பொருட்கள் வாங்கி கட்டணும். டிசைன் செய்யவும் கட்டவும் அதற்காக படித்த அல்லது அனுபவம் உள்ள ஆட்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் கொடுத்து கட்டணும். அப்பப்போ செக் பண்ணி தேவையான திருத்தங்கள் செஞ்சு வீட்டை கட்டி முடிக்கணும்

அது போல, முதலீடு செய்ய ஆரம்பிக்கும் முன் (1) எதுக்காக முதலீடு செய்யறோம் (Purpose), (2) நம்முடைய இலக்கு என்ன (Goal) (3) நம்முடைய risk tolerance என்ன? (4) மாதம் எவ்வளவு சேமிக்க முடியும் (5) எவ்வளவு நாள் தொடர்ந்து சேமிக்க முடியும் இதையெல்லாம் முடிவு செய்யணும். 
உதாரணத்துக்கு.. ஒருவருக்கு 30 வயது ஆகிறது. அவருக்கான பதில்கள் இப்படி இருக்கலாம். ரிட்டையர்மெண்ட்டுக்காக சேமிக்கணும், ரிட்டையர் ஆகும் போது 5 கோடி ரூபாய் இருக்கணும், மாதம் பத்தாயிரம் சேமிக்க முடியும், அடுத்த 35 வருசம் சேமிக்க முடியும் , நடுவில் பணம் எடுக்க வேண்டிய சாத்தியங்கள் கம்மி – இப்படி தெளிவாகச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன சரியா வரும்னு சொல்ல முடியும். இப்ப கையில் 25 லட்ச ரூபாய் இருக்கு அடுத்த ஆண்டே பிள்ளைகளின் படிப்புக்கோ திருமணத்துக்கோ தேவைப்படும் என்று இருந்தால் அவர் பங்குச் சந்தைக்குள் பணத்தை போடாமல் இருப்பதே நல்லது. குறுகிய காலத் திட்டம் பங்குச் சந்தைக்கு உகந்ததல்ல.

கேள்விக்கெலலாம் பதில் தயார் செஞ்சாச்சு, அடுத்து என்ன செய்யலாம். பங்குச் சந்தை குறித்து போதுமான அறிவு இருந்தால் நேரடியாக நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம். அப்படி இல்லாதோர் ம்யூச்சுவல் ஃபண்ட்களை நாடுவதே நலம்.

அப்படி ம்யூச்சுவல் ஃபண்ட்களில் போட முடிவு செய்தாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும் ஃபண்ட்களில் எதில் போடுவது என்று முடிவு செய்வது கடினம்.

ஈக்விட் ஃபண்ட், பாண்ட் ஃபண்ட், பேலன்ஸ்ட் ஃபண்ட், ஸ்பெசாலிட்டி ஃபண்ட், செக்டார் ஃபண்ட், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் என்று நிறைய இருக்கு. ஈக்விடிக்குள் லார்ஸ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என்று கேட்டாலே தலையை சுத்தும் நிறைய பேருக்கு.

நேரடி பங்குச் சந்தை முதலீடோ அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடோ எதுவா இருந்தாலும் செய்ய வேண்டியவை

0. இதை ஏன் சீரோன்னு சொல்றேன்னா, அது சேமிப்புக்கு முன்னர் செய்ய வேண்டியது. ஆண்டு வருமானத்துக்கு 10 மடங்கு ப்யூர் லைஃப் இன்சூரன்ஸ் வாங்குங்க. 
1. மேலே சொன்ன Purpose, Goal etc முடிவு செய்யுங்க
2. முதலீடு, பங்குச் சந்தை, ம்யூச்சுவல் ஃபண்ட், ரிஸ்க் இவை குறித்து படிங்க
3. கையில் இருக்கும் பணம் மொத்தத்தையும் ஒரே நேரத்தில் சந்தையில் போடாதீங்க. குறிப்பிட்ட கால இடைவெளியில் 10 முறையோ 20 முறையோ முதலீடு செய்யுங்க
4. எப்பேர்பட்ட முதலீடா இருந்தாலும் மொத்த சேமிப்பையும் ஒரே திட்டத்தில் போடாதீங்க
5. சேமிப்பை மூன்றாக பிரித்துக் கொள்ளுங்கள். ஈக்விட்டி, பாண்ட் / Debt மற்றும் அவசரத்தேவைக்கு கையிருப்பு 
6. அவசரத்தேவைக்கு மாச சம்பளத்தின் 3-6 மடங்கு இருக்கட்டும்
7. ஈக்விட்டி / பாண்ட் பிரிப்பதற்கு வழிமுறை ஒன்றைச் சொல்வாங்க – நூறிலிருந்து உங்க வயசைக் கழிச்சா வரும் விடை ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டிய சதவீதம், மிச்சம் பாண்ட். 30 வயசானவர் 70% ஈக்விட்டியிலும் 30 % பாண்டிலும் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். வயசு ஆக ஆக ஈக்விட்டியை குறைத்து பாண்டை அதிமாக்கணும். ரிட்டையர் ஆகும் போது அதிக ரிஸ்க் எடுக்க முடியாது, அப்புறம் நெறைய பாண்ட் போன்ற relatively safe முதலீட்டிலும் கம்மியா ஈக்விட்டியிலும் வைக்கணும்
8. குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரீபேலன்சிங் செய்யணும்
9. பங்குச் சந்தை குறித்து போதிய அறிவும் சந்தையில் செலவிட நேரமும் இல்லாதவர்கள் முதலீட்டு ஆலோசர்கள் துணையைப் பெருவது நல்லது.

நானோ யாராவது ஒருவரோ இப்ப நாலு ஃபண்ட் பேரைச் சொல்லிட்டுப் போயிடலாம், அவை தொடர்ந்து நல்லா செயல் படும் என்று சொல்ல முடியாது, அதுக்குத்தான் ஆண்டுக்கு ஒருமுறை எல்லாத்தையும் பாத்து ரீபேலன்சிங் செய்யணும் என்று சொல்றது. இதைத் தொடர்ந்து செய்ய கட்டணம் வாங்கும் ஆலோசகரால்தான் முடியும். இலவசமாக சொல்லும் என் போன்றோர் உங்களுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது.

மருத்துவம் போல் முதலீட்டு ஆலோசனையும் ஒரு ஸ்பெசாலிட்டி ப்ரொஃபசன், அத்துறையில் நிறைய வல்லுனர்கள் இருக்காங்க, அவர்களில் நல்லவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் உதவியுடன் முதலீடு செய்யுங்க

5% Rule and Retirement Corpus

ஓய்வு கால சேமிப்பு குறித்த தலைப்பில் எவர் க்ரீன் கேள்வி ரிட்டையர்மெண்ட்டுக்கு எவ்வளவு சேக்கணும் என்பதே. அதிலும் நாற்பதைத் தொட்டவர்களின் மனதில் வியாபித்திருப்பது இது, நண்பர் Murali Kannan அவர்கள் கூட சமீபத்தில் நாற்பதைத் தொட்டவர்களின் ரிட்டையர்மெண்ட் கவலை குறித்து எழுதியிருந்தார்.

முந்தைய தலைமுறை போல நமக்கு பென்சன் எனும் லக்சரி கிடையாது. பிள்ளைகள் கையை எதிர்பார்த்து நிற்கவும் முடியாது. நம் ஓய்வு காலத்துக்கு நாமே சேமித்தால்தான் உண்டு. இதையும் 5% விதியையும் விளக்கவே இப்பதிவு.

ரிட்டையர்மெண்ட்டுக்குத் தேவைப்படும் தொகையை துல்லியமாக யாராலும் கணிக்க முடியாது – மருத்துவம் போன்ற எதிர்பாரா செலவுகள் அதிகரிக்கக்கூடும், இன்ஃப்ளேசன் அடுத்த 20- 30 ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது – ஆனால் இன்றிருக்கும் தகவல்களைக் கொண்டு தோராயமாக இதைக் கணிக்க முயல்கிறேன்.

40 வயதாகும் ஒருவர் 60 வயதில் ஓய்வு பெற விரும்புகிறார். ரிட்டையர் ஆகும் அன்னிக்கு கடனில்லாத வீடு இருக்கணும், பிள்ளைகளின் படிப்புச் செலவு முடிந்திருக்கணும். இவற்றைச் செய்து முடிக்காமல் ரிட்டையர் ஆவது கடினம். 
இன்றைய உங்க குடும்பச் செலவுக் கணக்கை எடுங்க, அதில் வீட்டுக்கடன், பிள்ளைகள் படிப்புச் செலவு, பிள்ளைகளின் பிற செலவுகளை நீக்கிடுங்க – மிச்சமிருப்பதுதான் நீங்களும் உங்க மனைவியும் வாழத்தேவையான பணம். 
2019 ஜனவரி மாதம் உங்க வயசு 40 ஆக இருக்கும் போது இத்தொகை 25000 ரூபாய் / ஆண்டுக்கு 3 லட்ச ரூபா என்று வைத்துக் கொள்வோம்.

இந்தியாவின் இன்ஃப்ளேசன் தோரயமா 6% அதாவது இந்த ஆண்டு 100 ருபாய் இருக்கும் பொருளோ சேவையோ அடுத்த ஆண்டு 106 ரூபாயாக இருக்கும். இப்படியே கணக்குப் போட்டால் உங்களுக்கு 60 வயது ஆகும் போது இன்றிருக்கும் இதே லைஃப் ஸ்டைல் மெயிண்டெயின் செய்ய உங்களுக்கு ஆகும் செலவு 9,62,141 – ஒன்பது லட்சத்து அறுபத்து இரண்டாயிரம் ரூபாய். அதற்கப்புறமும் இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும். இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படத்தில் 85 வயது வரை எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டிருக்கிறேன். இன்று ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய் தரும் லைஃப் ஸ்டைல் மெயிண்டெயின் செய்ய 85வது வயதில் ஆண்டுக்கு 41 லட்சத்து 29 ஆயிரத்து 383 ரூபாகள் ஆகும்.

அது என்ன 5% விதி இது ஆக்சுவலா விதி அல்ல, பொருளாதார / சேமிப்பு வல்லுனர்கள் ரிட்டையர்மெண்ட் சேமிப்பிலிருந்து ஆண்டுக்கு 5% மட்டுமே உருவி செலவு செய்யலாம் என அறிவுரை சொல்கின்றனர். அதற்கு மேல் எடுத்து செலவு செய்தால் நீங்க சேர்த்து வைத்திருக்கும் தொகை உங்க வாழ் நாள் முழுமைக்கும் வராமல் போகலாம், கடைசி காலத்தில் செலவுக்கு காசில்லாமல் நீங்கள் நிற்கும் நிலை வரலாம் என்கிறனர்.

முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இருப்போர் தம் சேமிப்பை பங்குச் சந்தை முதலீடு போன்ற ரிஸ்கான வழிகளில் முதலீடு செய்யலாம், இதையே ரிட்டையர் ஆன ஒருவர் செய்ய முடியாது – ரிட்டையர்மெண்ட் தொகையை வங்கி வைப்பு நிதி, அரசு கடன் பத்திரங்கள் போன்ற சேஃபான வழிகளில் மட்டுமே முதலீடு செய்வது நலம். ரிஸ்க் இல்லாத / கம்மியான முதலீடுகளின் ரிட்டர்னும் கம்மியாவே இருக்கும். இன்னும் 20 ஆண்டுகள் கழித்து இத்தகைய முதலீடுகளின் ரிட்டர்ன் 5% க்கு மேல் இருக்க வாய்ப்புகள் குறைவு.

அதாவது உங்க சேமிப்பு ஆண்டுக்கு 5 % ரிட்டர்ன் கொடுக்கும் அதே சமயம் உங்க செலவோ ஆண்டுக்கு 6% அதிகரித்துக்கொண்டேயிருக்கும். அப்ப நீங்க வட்டி மட்டுமல்லாது அசலில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் எடுத்து செலவு செய்ய வேண்டியிருக்கும். இதை சமாளிக்க நீங்க செய்ய வேண்டியது உங்களுக்கு 60 வயது ஆகும் போது இருக்கக் கூடிய ஆண்டு செலவின் 30 மடங்கை சேமிப்பு இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். இது இன்று 40 வயது ஆகும் ஒருவரின் தற்போதைய செலவின் 100 மடங்கு.

40 வயது ஆகும் ஒருவரின் குடும்பச் செலவு ஆண்டுக்கு 3 லட்சம் (வீட்டுக்கடன், பிள்ளைகள் செலவு சேர்க்காமல்) 60 வயதில் இதே லைஃப் ஸ்டைல் மெயிண்டெயின் செய்யத் தேவை ரூ9,62,141. அங்கிருந்து ஆரம்பித்து 85 வயது ஆகும் போது வாழத் தேவையான சேமிப்புத் தொகை 2 கோடியே 88 லட்சத்து 64 ஆயிரத்து 219 ரூபாய்கள்.

இப்போது எக்செல் ஷீட்டை ஒரு முறை பாருங்கள். அந்நபர் ரிட்டையர் ஆகும் அன்று இத்தொகையை சேமித்து வைத்திருக்கிறார். கணக்கு எளிதாகப் புரிவதற்கு ஜனவரி 1 அன்றே அந்த ஆண்டுக்கான செலவு 962141 மொத்ததையும் கழித்து விட்டு மிச்சம் 2,79,02079க்கு மட்டும் 5% வளர்ச்சி போட்டு அந்த ஆண்டு இறுதியில் 2929783 ரூபாய் அவரிடம் இருக்கும். அடுத்த ஆண்டு 6% விலைவாசி உயர்வில் செலவு 1019869 ஆக இருக்கும். அது போக மிச்சமிருக்கும் 2,82,77,313 ரூபாய் 5% வளர்ச்சி பெற்று 29691179 ஆக இருக்கும். வளர்ச்சி 5% லேயே நிற்கும் ஆனால் செலவோ அதிகரித்துக் கொண்டேயிருகும். 2 கோடியே 88 லட்சத்தில் ஆரம்பித்த சேமிப்பு 10 ஆண்டுகள் அதிகரித்து 70 வயதில் மூணு கோடியைத்தாண்டும் ஆனா அதற்கப்புறம் செலவு அதிகரித்து அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். 74 வயது ஆகும் போது 60 வயதில் ஆரம்பித்ததை விட கம்மியாகும்… அது மேலும் குறைந்து கொண்டே வந்து 85ம் வயது முடிவில் வெறும் 2 லட்ச ரூபாய் மட்டுமே கையிருப்பு இருக்கும்.

வளரும் பிள்ளைகளின் பெற்றோர் அவர்களை வளர்த்து ஆளாக்கும் வரை உயிரோடு இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள், அதே ரிட்டையர் ஆனப்புறம் சேமிப்பு கரைந்தபின்பும் உயிரோடு இருக்கக் கூடாது என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள். 85 வயது வரை கணக்கிட்டு சேமித்து அதற்கு முன்னர் இறந்தால் பிள்ளைகள் சந்தோசமாக மிச்சப் பணத்தை எடுத்துக் கொள்வார்கள், அதே பெற்றோரின் சேமிப்பு 70 வயதில் கரைந்து விட்டால் அதற்கப்புறம் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பிள்ளைகள் குறைவே.

சரி இத்தனை பணத்தை எப்படி எங்கு சேமிப்பது? மாதம் 20,000 ரூபாயை நல்ல மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் 20 ஆண்டுகள் சேமித்தால் 3 கோடி ரூபாயை எட்டி விடலாம். எந்த ஃபண்ட்களில் முதலீடு செய்வது என்பதை ஒரு நல்ல ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதுவரை எல்லைக் கோட்டை நிர்ணயிக்காமல் சேமித்தவர்களும் சேமிப்பே இல்லாதவர்களும் இனியாவது சரியான பாதையில் சேமிக்கத் தொடங்குங்கள்

No photo description available.