ஆண்டுக்கொரு முறை

Image result for annual financial checkup

காலண்டரின் பக்கங்கள் தீர்ந்து போகும் ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் வருமானம் ஈட்டும் ஆண்டுகளில் ஒன்று குறைகிறது.

ஆண்டுக்கொருமுறை உடல்நலத்தை சரிபார்க்க மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் நேரத்தையும் பணத்தையும் செலவிடும் நம்மில் எத்தனை பேர் நம்முடைய பொருளாதார நலத்தை ஆண்டுக்கொருமுறை சோதிக்கிறோம்? 
பள்ளிகளில் தரும் ரிப்போர்ட் கார்டும், அலுவலங்களில் நடக்கும் அப்ரைசலும் அர்த்தம் பொதிந்தவை. நாம் எந்த விசயங்களில் வலுவாக இருக்கிறோம், எந்தெந்த விசயங்களில் வீக்காக இருக்கிறோம் – அந்த விசயங்களையும் வலுவானவை லிஸ்ட்டில் சேர்க்க அடுத்தாண்டுக்கான “ஆக்சன் ப்ளான்” என்ன என்பதையெல்லாம் தெளிவாக அவை விளக்கும். அதே போல் நம் பொருளாதார நிலைமையையும் Self Appraise செய்ய சரியான தருணம் புத்தாண்டு தினம். இதில் நாம் பார்க்க வேண்டியவை

1. *ஆயுள் காப்பீடு*
நீங்கள் இதுவரை வைத்திருக்கும் ஆயுள் காப்பீடுகளை ஒரு முறை எடுத்துப் பாருங்கள். தொடரலாமா அல்லது விட்டொழிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் எண்டோமெண்ட் / மணி பேக் / யூலிப் பாலிசிகளை உடனடியாக தலை முழுகுங்கள். ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு டெர்ம் பாலிசி ஐடியல், 10 மடங்காவது அத்தியாவசியம். அதற்கும் கீழே இன்சூர் செய்திருந்தால், மேலும் ஒரு பாலிசி எடுப்பதன் மூலமோ அல்லது பழைய பாலிசியை நிறுத்தி விட்டு மொத்த அமவுண்ட்டுக்கு வேறு பாலிசியையோ எடுங்கள். இந்தாண்டு உங்க சம்பளம் கூடியிருந்தால் காப்பீட்டின் அளவும் கூட வேண்டும். சென்ற ஆண்டில் ஏதேனும் Life Changing நிகழ்வுகள் நடந்திருக்கலாம். பணி புரியும் கணவன் மனைவி மட்டும் இருக்கும் போது குறிப்பிட்ட அளவு காப்பீடு எடுத்திருப்பீர்கள். குழந்தை பிறப்பு அதை மாற்றி விடும், இப்ப அதிக காப்பீடு தேவை என்று உணர்ந்தால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக காப்பீட்டின் அளவை அதிகரியுங்கள். 
காப்பீட்டுக்கு ப்ரீமியம் கட்டும் தேதியை முக்கியமான இடத்தில் குறித்து வையுங்கள். இறுதி தேதி வரை காத்திராமல் சீக்கிரமே செலுத்துங்கள்

2. *ஹெல்த் இன்சூரன்ஸ்*
ஆயுள் காப்பீட்டுக்குச் சொன்னவை அனைத்தும் இதற்கும் பொருந்தும். ஏற்கெனவே இருக்கும் காப்பீட்டின் அளவை ரீவிசிட் செய்யுங்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கின்றன எனத் தோன்றினால் கூடுதல் காப்பீடு எடுங்கள். ப்ரீமியம் கட்ட வேண்டிய தேதியை குறித்து வைத்து சீக்கிரமே கட்டி விடுங்கள். இரு காப்பீடுகளிலும் லாப்ஸ் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

3. *அவசரத்தேவைக்கான கையிருப்பு*
சேமிப்பு நீண்ட காலத்துக்கானது, அதைத் தவிர எப்போதும் 6 மாத செலவுக்கான பணம் கையிருப்பில் இருப்பது அவசியம். இந்த ஆண்டு குடும்பச் செலவு கூடியிருக்கலாம் அல்லது எமர்ஜென்சி ஃபண்டிலிருந்து எடுத்து செலவு செய்ய நேரிட்டிருக்கலாம். அதைச் சரி பார்த்து மீண்டும் அதை 6 மாத செலவு அளவுக்கு கொண்டு வர செலவைக் கட்டுப்படுத்துவது / நீண்ட கால சேமிப்பைக் குறைப்பது என திட்டம் தீட்டி அதை செயல்படுத்துங்கள்.

4. *சிபில் ஸ்கோரை சரி பாருங்கள்*
அனைத்து நிதி நிறுவனங்களும் உங்க நம்பகத்தன்மையை சரி பார்க்க சிபில் ஸ்கோரையே உபயோகிக்கின்றன. அதை ஆண்டுக்கொரு முறையாவது (ஆறு மாதத்திற்கு ஒரு முறை பார்ப்பது இன்னும் நல்லது) பாருங்கள். நீங்கள் வாங்காத கடன், க்ரெடிட் கார்ட் அதில் இருந்தாலோ நீங்க சரியான நேரத்தில் செலுத்திய கடன் சரியாக ரிப்போர்ட் செய்யப்படாமல் இருந்தாலோ உரிய புகார் அளித்து அதைச் சரி செய்யுங்கள்

5. *வருமான வரி விலக்கு வாய்ப்புகளை சரி பாருங்கள்* 
நீங்கள் வருமானவரி கட்டுபவராக இருந்தால், வரி விலக்கு வாய்ப்புகள் அனைத்தையும் உபயோக்கிறீர்களா என சரி பாருங்கள். ஒரு சில செக்சன்களில் வரி விலக்கு பெறாமல் இருந்தால் அவற்றைப் பெற என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். இந்த சப்ஜெக்ட் முழுசாத் தெரியலேன்னா ஒரு நல்ல சார்டெட் அக்கவுண்டண்ட் உதவியை நாடுங்கள். சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சம்பாதிக்கும் ரூபாயைவிட மதிப்பு மிக்கது என உணருங்கள் .

6. எஸ் ஐ பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட்களில் சேமிப்பைத் துவக்குங்கள். 
இதற்கு உதவி தேவைப்பட்டால் நல்ல முதலீட்டு ஆலோசகரை நாடுங்கள்

7. *போர்ட்ஃபோலியோ ரிபேலன்சிங்*
ஆண்டுக்கொரு முறை உங்க போர்ட்ஃபோலியோவை சரி பார்த்தல் மிக மிக அவசியம். முதலீடு செய்திருக்கும் ஃபண்ட்களின் செயல்பாட்டைப் பாருங்கள். திருப்திகரமாக செயல்படாத ஃபண்ட்களில் இருந்து முதலீட்டை மாற்றுங்கள். வயது ஏற ஏற ஈக்விட்டி முதலீட்டைக் குறைத்து கடன் பத்திரங்களில் முதலீட்டை அதிகரித்தல் அவசியம். அதன் படி 40,50,60 வயதை எட்டியவர்கள் உங்க குறிக்கோள் படி முதலீடுகளை மாற்றி அமையுங்கள். 
உங்க போர்ட்ஃபோலியோவில் லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால் கேப் ஃபண்ட்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கியிருப்பீர்கள். ஆண்டு இறுதியில் அவை பெரும்பாலும் அந்த சதவீதத்தில் இருக்காது. அதிலும் குறிப்பா மிட்கேப் பங்குகள் வீழ்ந்த இந்தாண்டு இறுதியில் போர்ட்ஃபோலியோவின் நிலவரம் கலவரமாக இருக்கும். கலங்காமல் அவற்றை ரீபேலன்ஸ் செய்து மீண்டும் நீங்க முடிவு செய்த சதவீதத்திற்கு கொண்டு வாங்க. என்னடா இவன் நல்ல போயிட்டு இருக்கும் பண்ட்லேருந்து எடுத்து வீழ்ந்திருக்கும் ஃபண்ட்ல போடச் சொல்றானேன்னு நினைக்காதீங்க. அது ஆப்பர்ச்சுனிட்டி, இன்னிக்கு வீழ்ந்திருக்கும் ஃபண்ட்களின் NAV கம்மியா இருக்கும், உங்க பணத்திற்கு அதிக யூனிட்கள் கிடைக்கும், நாளைக்கே அவை மீண்டு வரும் போது அதிக லாபம் கிடைக்கும். அடுத்த ஆண்டு இறுதியில் மிட்கேப்லேருந்து எடுத்து லார்ஜ் கேப் போடும் நிலைமை வரும்

8. க்ரெடிட் கார்ட் பேலன்ஸ் மற்றும் பர்சனல் லோன் இருந்தால் அவற்றை முடிக்க தீர்க்கமான திட்டம் தீட்டுங்கள். இவை இரண்டும் உங்க பொருளாதார நிலைக்கும் கேடு விளைவிக்ககூடியவை. க்ரெடிட் கார்ட் பேலன்ஸை உடனடியாக தீர்க்கவும். அதைத் தீர்க்கும் வரை அந்தக் கார்டை வீட்டில் வைத்து விட்டு வெளியே செல்ல முடிவு செய்யுங்கள். ரிவால்விங் க்ரெடிட் சுழலில் மாட்டி வெளியே வந்தவர்கள் சொற்பமே. 
பர்சனல் லோன் அதிகம் இருந்தால் 2019 இல் அதை முடிக்க திட்டமிடுங்கள். எந்தச் செலவையெல்லாம் தவிர்க்கலாம் என்று பாருங்கள். அதிக வட்டி கட்டும் பர்சனல் லோனை முடிக்க எமெர்ஜென்சி ஃபண்டிலும் கை வைக்கலாம், சேமிப்பையும் தற்காலிகமாக நிறுத்தலாம்.

9. நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கியிருந்தால், அவர்கள் கேட்கும் வரை காத்திருக்காதீர்கள். ஜனவரி 1 அன்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு இந்த ஆண்டு கடனைத் திருப்பித்தர ஒரு Schedule சொல்லுங்கள். அதை உறுதியாக கடைபிடியுங்கள்.

10. *வரவு செலவு கணக்கைச் சரிபாருங்கள்*

பட்ஜெட் போடுபவராக இருந்தால் அதை ஒரு முறை சரி பாருங்கள். எந்தச் செலவுகளை தவிர்க்க முடியும் , எதையெல்லாம் குறைக்க முடியும் என்று பாருங்கள். இதுவரை பட்ஜெட் போட்டதில்லையென்றால், அடுத்த ஆண்டு முதல் பட்ஜெட் போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்

இதுக்கெல்லாம் மேல ஒண்ணு இருக்கு. ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தைக் குறைக்கப் பாருங்கள். அதற்கு பதிலாக வேலையிலோ, தொழிலிலோ அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு தேவையானதைப் படியுங்கள். எதுவுமே இல்லேன்னா, தனி நபர் சேமிப்பு குறித்து தேடிப் படியுங்கள். இப்ப இங்க வந்து எவனோ ஒருத்தன் வேலையத்துப் போய் எழுதி வச்சிருக்கும் ஆலோசனைகளை படிக்கும் நிலையிலிருந்து பிறருக்கு ஆலோசனை சொல்லும் நிலைக்கு உங்களை உயர்த்துங்கள்

டெர்ம் பாலிசியில் மறக்கக்கூடாதவை

ஆயுள் காப்பீடு எடுக்கறதுக்கு ஆயிரம் தடவை யோசிக்கும் பலரும் ஒரு வேளை க்ளெயிம் செய்ய வேண்டியிருந்தால், அதற்கானவற்றை செய்யத் தவறி விடுகிறோம். ஆயுள் காப்பீடு எடுப்போர் செய்ய வேண்டிய டாப் 10

1. டெர்ம் பாலிசி தவிர வேறு எதையும் வாங்க வேண்டாம்

2. நேத்து கூட ஒருத்தர் 86 வயது வரை டெர்ம் பாலிசி எடுக்கலாம்னு இருக்கேன் என்றார் – ஆயுள் காப்பீடு என்பதே திடீர் வருமான இழப்பை ஈடுசெய்வதற்குத்தான். வருமானம் ஈட்டும்வரைதான் இன்சூரன்ஸ் தேவை, நீங்க வருமானம் ஈட்டுவதை நிறுத்தியபின், உங்க மரணம் குடும்பத்தை பொருளாதார ரீதியாக பாதிக்காது – அப்போது உங்களுக்கு காப்பீடு தேவையில்லை. முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இருப்போர் ரிட்டையர்மெண்ட் தேதி வரை டெர்ம் பாலிசியில்ன் காலம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள், ரிட்டையர்மெண்ட்க்கு தனியே சேமிக்கத் தொடங்குங்கள். உங்க ரிட்டையர்மெண்ட் கோலை அடைந்ததும் டெர்ம் பாலிசியை நிறுத்திவிடலாம்.

3. டெர்ம் பாலிசி எடுக்கும் போது தெளிவாக ஒருவரை நாமினியாகப் போடுங்கள். மகனையோ மகளையோ நாமினியாக்கி உங்க மனைவியை அவர்கள் தயவில் விடாமல், மனைவி / கணவனை நாமினி ஆக்குங்கள்

4. நாமினியின் லீகல் பேரை முழுமையாக விண்ணப்பத்தில் குறிப்பிடுங்கள். அந்தப் பேர் உங்கள் திருமணச் சான்றிதழ், ரேசன் கார்ட் போன்ற ஆதாரங்களில் உள்ளபடி இருப்பது அவசியம்.

5. பாலிசி குறித்த ஆலோசனையின் போதும், பாலிசி கையெழுத்திடும் போதும் நாமினி உடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் – விண்ணப்பத்தில் கொடுக்கும் தகவல்களை அவரையும் ஒருமுறை சரி பார்க்கச் சொல்லுங்கள்.

6. பாலிசி கைக்கு வந்ததும், அதை யாருக்கும் தெரியாமல் உங்களிடம் வைத்துக் கொள்ளாமல், நாமினியின் பொறுப்பில் வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள், க்ளெயிம் செய்யப் போவது நீங்கள் இல்லை.

7. ஒரு வேளை க்ளெயிம் செய்ய நேரிட்டால், பாலிசி டாக்குமெண்ட், நாமினி தன்னை நிரூபிக்க ஒர் ஆவணம், அவருக்கும் உங்களுக்குமான உறவை நிரூபிக்க ஒர் ஆவணம் இவற்றுடன் எங்கு யாரை அணுக வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்லி வைக்கவும்

8. ஒரு வேளை நீங்க இறக்கும் முன் நாமினி இறந்து விட்டால், உடனே வேறு ஒருவரை நாமினியாக நியமிக்கவும்

9. மறக்காமல் பாலிசி ப்ரீமியத்தை உரிய காலத்தில் செலுத்தவும்.

10. பாயிண்ட் நம்பர் ஒன்றை மீண்டும் ஒருமுறை படிக்கவும்

ஓய்வுக்காக உழைத்திடு

Image may contain: sky, outdoor and nature

The Most Beautiful View comes after the Hardest Climb

It takes years of preparation, many encounters with smaller mountains, Tonnes of training, Lot of Planning and 4 weeks acclimatization before anyone could even attempt the Mt. Everest. Obviously, one has to go through the hardest climb to get the Most beautiful view from the top of the world

This applies your RETIREMENT too, if you like to get a nice view after retirement, you got to work hard for years to get that. If you believe a passive investment with an Insurance company (Endowment policies like those Jeevan Dashes), you are grossly mistaken. They do not suffice any need – Insurance or Investment.

Save for a Safe Retirement

முதலீட்டில் டாம், டிக் மற்றும் ஹாரி

1

கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்யும் ரீட்டெயில் இன்வெஸ்டர்கள் எஸ் ஐ பி மாதாந்திர முதலீட்டை நிறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்று எக்கனாமிக் டைம்ஸ் கட்டுரை சொல்கிறது.

நீங்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால், முதலீட்டைத் தொடர்வதும், நிறுத்துவதும், இருக்குற பணத்தை எடுத்துக்கிட்டு வருவதும் உங்க விருப்பம், ஆனா இதை விட மிகப் பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியில் என்ன நடந்தது என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.

அக்டோபர் 2008 முதல் மார்ச் 2009 வரை (5 மாதங்கள்), அமெரிக்கப் பங்குச் சந்தை பெறும் வீழ்ச்சியடந்தது. 9 அக்டோபர் 2008 இல் 14,164 புள்ளிகளாக இருந்த டௌ ஜோன்ஸ் குறியீடு 9 மார்ச் 2009 அன்று வெறும் 6504 புள்ளிகளாக ஆகிவிட்டது. 5 மாதங்களில் 54% வீழ்ச்சி. அதாவது அக்டோபர் அன்று உங்க கணக்கில் இருந்த ஒரு கோடி ரூபாய் நீங்க எதுவுமே பண்ணாம 5 மாசம் கழிச்சு 56 லட்சமாக குறைந்திருக்கும். இப்போது இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சிறிய வீழ்ச்சிக்கே பயப்படுவோர் 54% குறைந்திருந்தா என்ன பண்ணியிருப்பாங்க?

இந்தியாவில் எப்படியோ தெரியல, அமெரிக்க முதலீட்டாளர்கள் மூவர் என்ன பண்ணாங்கன்னு பாக்கலாம்.

டாம், டிக் & ஹாரி மூவரும் நெருங்கிய நண்பர்கள், மூவரும் ஒரு ஆலோசகர் துணையுடன் ஒரே மாதிரி பங்குச் சந்தை முதலீடுகளை செய்து வந்தனர். 2008இல் சந்தை வீழ்ச்சியடையும் போது மூவரின் கணக்கிலும் ஒரு மில்லியன் டாலர்கள் இருந்தது. ஒரே மாதிரி முதலீடு செய்து வந்தாலும் 5 மாத தொடர் வீழ்ச்சியின் போது மூவரும் வெவ்வேறு மாதிரி சிந்திக்கத் தொடங்கினர். ஹாரியைத் தவிர மற்ற இருவரும் ஆலோசகர் பேச்சைக் கேட்பதையும் நிறுத்தி விட்டனர்

டாம் 54% மதிப்பு இறக்கத்தைக் கண்டதும் ரொம்பவே பயந்துவிட்டார். இன்னமும் சந்தையில் பணத்தை வைத்திருந்தால், மொத்தவும் போய்விடும் என்று 10 மார்ச் 2009 அன்று 460,000 டாலர்களையும் எடுத்து வங்கியில் போட்டுவிட்டார். அமெரிக்க வங்கிகள் சேமிப்புக்கணக்குக்கு வெறும் 0.5% மட்டுமே வட்டி கிடைக்கும் அதற்கும் வருமான வரி உண்டு, ஆக மொத்தம் பணம் அப்படியே இருக்கும். ஆனால் 2009 முதல் இன்று வரை அமெரிக்காவில் விலைவாசி 15% உயர்ந்துள்ளது. அதாவது 2009 இல் 400,000 டாலருக்கு கிடைத்த பொருளுக்கு இன்று 460,000 கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது 54%ஐ பங்குச் சந்தையில் இழந்த டாம் இன்னொரு 15%ஐ இன்ஃப்ளேசனில் இழந்து விட்டார்.

டிக் கொஞ்சம் மிதவாதி. டாம் 2009 இல் தன் முதலீட்டை எடுக்கப்போறேன்னு சொன்னதும் இவரும் கொஞ்சம் பயந்து விட்டார். டிக் அதற்கு மேலும் எவ்வித முதலீடும் செய்யவில்லை ஆனால் ஏற்கெனவே வைத்திருந்த ஒரு மில்லியன் டாலரைத் தொடவில்லை. இன்று அதன் மதிப்பு 1.9 மில்லியன் டாலர்கள். இன்று டௌ ஜோன்ஸ் குறியீடு 26,627 புள்ளிகள் அதாவது நஷ்டத்தையும் ஈடு செய்து, ஒரிஜினல் முதலீட்டின் இரு மடங்காகவும் ஆகியுள்ளது.

இருப்பதிலேயே ஹாரிதான் புத்திசாலி மற்றும் அதிர்ஷ்டசாலி. டாமையும் டிக்கையும் பங்குச் சந்தையில் நீண்டகாலம் நிலைத்திருப்பதை வலியுறுத்தினார், ஒருவர் பாதி கேட்டார் மற்றொருவர் சுத்தமா கேக்கல. 
பங்குச் சந்தையில் நீண்ட காலம் முதலீடு செய்து வந்தால் கண்டிப்பாக வளர்ச்சி இருக்கும் என்று நம்பிய ஹாரி 10 மார்ச் 2009, ஏற்கெனவே இருந்த முதலீட்டை தொடவில்லை, அது மட்டுமில்லாமல் தன்னிடமிருந்த வேறு சில முதலீடுகளிலிருந்து எடுத்து இன்னொரு மில்லியன் டாலரை 6504 புள்ளிகளில் டௌ ஜோன்ஸ் இருந்த போது சல்லிசா கிடைத்த நல்ல பங்குகளில் முதலீடு செய்தார். ஆக அவரோட மொத்த முதலீடு 2 மில்லியன் டாலர்கள். 54% வீழ்ந்த முதல் மில்லியனின் இன்றைய மதிப்பு 1.9மில்லியன், வீழ்ச்சியடந்த மார்க்கெட்டில் முதலீடு செய்த மில்லியனின் இன்றைய மதிப்பு 4.1 மில்லியன் டாலர்கள். ஆக மொத்தம் 6 மில்லியன் டாலர்கள்.

https://economictimes.indiatimes.com/mf/analysis/mutual-fund-investors-stop-their-sips-as-market-turns-volatile/articleshow/66049916.cms?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=ETFBMF&fbclid=IwAR20K923Mzca2y3fRIX1DaRcRX62AWgCQHIWEeLAHwd1MdyLCZi9vONFOvsடாம், டிக் & ஹாரி – இந்த மூவரில் நீங்க யார் மாதிரி என்று நீங்களே முடிவு செய்யுங்கள். ஆஃப்டர் ஆல் உங்க பணம் – உங்க முடிவு

எந்த டெர்ம் பாலிடி சிறந்தது?

எந்த நிறுவனத்தில் டெர்ம் பாலிசி எடுக்கணும்? 
எல் ஐ சியின் டெர்ம் பாலிசி ப்ரீமியம் அதிகமா இருக்கு, நான் தனியார் நிறுவனத்தில் எடுக்கலாமா?

இவையே பொதுவா டெர்ம் பாலிசி எடுக்க நினைப்போரின் கேள்விகளாக இருக்கின்றன. இவற்றுக்கு இங்கு பதில் அளிக்க முயல்கிறேன்

1. டெர்ம் பாலிசி என்பது “No Frills” வகை. இதில் பெரும்பாலும் அம்சங்கள் (Features) என்று ஏதும் இல்லை. பயனர் இறந்தால் குடும்பத்துக்கு இழப்பீடு, காப்பீட்டுக் காலம் முடியும் வரை பயனர் இறக்கலேன்னா யாருக்கும் எதுவும் கிடைக்காது. என்னைப் பொருத்த வரை ரைடர்கள் எதுவும் தேவையில்லை. ஆக கம்பேர் பண்ணி பாக்க அம்சங்கள் ஏதும் இல்லை

2. எந்த நிறுவனத்தில் வேணா எடுக்கலாம். ஓப்பீட்டுப் பார்ப்பதற்கு சில காரணிகளை உபயோக்கலாம்

அ. நிலைத்தன்மை / நம்பிக்கை : நிறுவனம் எவ்வளவு நாளா இருக்கு, இன்னும் முப்பது நாப்பது வருசம் இருக்குமா அல்லது கை மாறுமா அல்லது திவாலாகுமா? இதை அப்ஜெக்டிவாக அணுகுவது கொஞ்சம் கஷ்டம், சப்ஜெக்டிவாக எந்த கம்பெனி நீண்ட நாள் நிலைக்கும்னு பாக்கலாம். எல் ஐ சி அரசு நிறுவனம், டாடா பிர்லா நிறுவனங்கள் இந்தியாவில் நீண்ட நாட்களாக தொழில் செய்து வருகின்றன, அவை இணைந்திருக்கும் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களும் நீண்ட வரலாறு கொண்டவை. எச் டி எஃப் சியும் ஐ சி ஐ சி யும் இந்தியாவில் செயல்படும் லாபகரமான வங்கிகள் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்

ஆ. கஸ்டமர் சர்வீஸ் : எண்டோமெண்ட் பாலிசி விக்க மல்லு கட்டிட்டு அது முடியாம போனப்புறம் டெர்ம் பாலிசி கொடுக்க மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ண வங்கி மேனேஜர், பாலிசி இஷ்யூ ஆக விடாம அழிச்சாட்டியம் பண்ணது எல்லாம் பார்த்திருக்கேன். கஸ்டமர் சர்வீஸில் சேவை பெற்ற நண்பரின் கருத்துக்களைக் கேட்டு இதை முடிவு செய்யுங்க

இ. க்ளெயிம் செட்டில்மெண்ட் ரேஷியோ : நிறுவனம் வருகின்ற க்ளெயிம்களில் எத்தனை சதவீதம் செட்டில் செய்கிறது என்பதை குறிப்பது இது. ஒவ்வொரு ஆண்டும் ஐ ஆர் டி ஏ எல்லா நிறுவனங்களில் ரேஷியோவை வெளியிடும். 
விண்ணப்பத்தை ஒழுங்காக பூர்த்தி செய்தால் க்ளெயிம் ஏற்பட்டால் இழப்பீடு பெறுவது கடினமாக இருக்காது. இருக்கும் உடல் உபாதைகள், இதுவரை செய்த அறுவை சிகிச்சைகள், நம்மிடம் இருக்கும் மற்ற பாலிசி விவரங்கள் ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிடுங்கள். பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், பாலிசி கைக்கு வந்ததும் அதையும் மூணு முறை படிச்சுப் பாருங்க. பேர், பிறந்த தேதி, விலாசம், நாமினி பேர், உறவு, பிறந்த தேதி இவையனத்தும் சரியா இருக்கான்னு பாருங்க. டையாபட்டிஸை மறைப்பது, அறுவை சிகிச்சையை சொல்லாமல் இருப்பது, தெரியவா போகுதுன்னு வச்சிருக்கும் 50 லட்ச ரூபாய் பாலிசி விவரத்தை விடுவது, மனைவின் சர்ட்டிஃபிக்கேட் பேரை எழுதாமல் கண்ணம்மா குட்டிமான்னு எதையாவது நாமினி இடத்தில் எழுதுவது – இவற்றில் எதையும் செய்யாமல் இருந்தால் க்ளெயிம் ரிஜக்ட் ஆவதற்கு வாய்ப்புகள் கம்மி

இன்னிக்கு படிச்சேன். காலில் செய்த அறுவை சிகிச்சையை மறைத்தவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போயிருக்கார், காப்பிட்டு நிறுவனம் க்ளெய்மை மறுத்து விட்டது, குடும்பத்தார் Ombudsman போய் பணம் வாங்கியிருக்காங்க. உடனே இந்த கம்பெனி மோசம் என்று எண்ண வேண்டாம், க்ளெயிம் ரிஜெக்ட் செய்தபின்னர் Ombudsman குட்டியதும் க்ளெயிம் ரிலீஸ் செய்யாத கம்பெனி இந்தியாவில் ஒன்று கூட இல்லை.

3. எல் ஐ சியின் டெர்ம் இன்சூரன்ஸ் ப்ரீமியம் இருப்பதிலேயே அதிகம். 
ஆமாம், எல் ஐ சி யின் ப்ரீமியம் அதிகம்தான், ஆனா எல் ஐ சியின் நிலைத்தன்மையும் க்ளெயிம் ரேஷியூவும் Unmatched. Claim Raitio விவரங்கள் பொது வெளியில் கிடைக்கும் நீங்க தேடிப்பார்க்கலாம்

எல்லா நிறுவனங்களும் ஏன் அரசுகளும் கூட திவால் ஆகக்கூடியவைதான். இந்திய அரசும் ஏன் அமெரிக்க அரசும் கூட திவால் ஆக Theoritical Possibilities உண்டு. ஆனா ப்ராக்டிகலாக எல் ஐ சி திவால் ஆகும் வாய்ப்புகள் குறைவு ஏன்னா

அ. எல் ஐ சியிடம் இரண்டரை கோடி லட்ச ரூபாய்கள் கையிருப்பு இருக்கிறது. அதில் ஒரு பாதி அரசு கடன் பத்திரங்களில் சேஃபாக உள்ளது, மிச்சம் பங்குச் சந்தையில் லாபம் ஈட்டித் தருகிறது

ஆ. எல் ஐ சி நாட்டின் அனைத்து நகரங்களின் முக்கிய இடங்களில் சொந்தக் கட்டிடங்கள் வைத்துள்ளது. எல் ஐ சியின் புக்கில் இவை வாங்கிய விலையிலேயே உள்ளன, இன்றைய மார்க்கெட் மதிப்புக்கு அவற்றை புக்கில் மாற்றினால் ஓவர் நைட் எல் ஐ சி உலகின் அதிக மதிப்புள்ள காப்பீடு நிறுவனமாக மாறும். அந்த அளவுக்கு எல் ஐ சியிடம் சொத்து உள்ளது

இ. இன்னமும் ஏஜெண்ட்கள் எண்டோமெண்ட் பாலிசியும் மணி பேக்கையும் பெருமளவு விற்றுக்கொண்டிருக்கின்றனர். இவற்றில் சிறிய சம் அஷ்யூர்டுக்கு அதிக அளவு ப்ரீமியம் எல் ஐ சிக்கு கிடைக்கிறது. பெரும்பாலான பாலிசிகளில் சம் அஷ்யூர்ட் மட்டுமே கேரன்டீட், போனஸ் எல்லாம் எல் ஐ சி லாபத்தில் இயங்கினால் மட்டுமே தரப்படும். இப்பாலிசிகளின் மூலம் தொடர்ந்து பணம் வந்து கொண்டேயிருக்கும் நிலையில் டெர்ம் பாலிசி க்ளெயிம் செட்டில் செய்வதில் பிரச்சனை இருக்காது

4. எல் ஐ சி அரசு நிறுவனம், அது திவால் ஆக இந்திய அரசு விடாது, இந்திய அரசு திவால் ஆனால் மட்டுமே எல் ஐ சி திவால் ஆகும் என நான் நம்புகிறேன்

எல்லா சேஃப்டி ஃபீச்சர்ஸும் கொண்ட கார் விலை அதிகமாகத்தான் இருக்கும் அந்த காரில் போனால் விபத்து நிகழாது என்பதும் உத்திரவாதமில்லை, அவ்வம்சம்கள் குறைவாக இருக்கும் காரில் போனால் இறப்போம் என்பதும் நிச்சயமில்லை, ஆனாலும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமுள்ள கார் விலை அதிகமாகத்தான் இருக்கும்

இந்தியாவில் செயல்படும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஐ ஆர் டி ஏவின் கண்காப்பில் செயல்படுகின்றன, எல்லா விதமான பொருளாதாரப் பாதுகாப்பு அரண்களும் கொண்டிருக்கின்றன. உங்களுக்கான காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது உங்க உரிமை

ஆயுள் காப்பீட்டில் நாம் செய்யும் தவறுகள்

Image result for life insurance images

1. ஆயுள் காப்பீடு எடுக்காமல் காலம் தாழ்த்துவது

மக்கள் செய்யும் தவறுகளில் மிக முக்கியமானது இது. இப்ப என்ன அவசரம் என்று காப்பீடு எடுக்காமல் இருந்து விடுகின்றனர். சம்பாதிக்க ஆரம்பித்த ஒவ்வொருவரும் ஆயுள் காப்பீடு எடுக்கணும். இளம் வயதில் எடுத்தால் ப்ரீமியம் கம்மியாக இருக்கும். வயதாக வயதாக ப்ரீமியம் கூடிக்கொண்டே போகும். அப்புறம் நீரழிவு, இதய நோய் போன்றவை வரும் முன்னரே காப்பீடு எடுத்து விட வேண்டும். இது போன்ற நோய்கள் வந்தப்புறம் இன்சூரன்ஸ் கிடைப்பதே கடினம்

2. தவறான பாலிசிகளை வாங்குவது

டெர்ம் பாலிசி தவிர வேறு எதையும் வாங்குவது பண விரயம். எந்த எண்டோமெண்ட் / யூலிப் / மணி பேக் பாலிசிகளாலும் உங்களுக்குத் தேவையான அளவு காப்பீட்டை பெற முடியாது

3. தேவை இல்லாதோருக்கு காப்பீடு வாங்குவது

சார், மேடம் பேர்ல ஒரு பாலிசியும் பாப்பா பேர்ல ஒரு பாலிசியும் போட்டுடலாம் என்று சொல்கிற இன்சூரன்ஸ் ஏஜெண்ட் பேச்சில் மயங்காமல், சரிங்க அப்படியே போட்டுடலாம் ரெண்டு பேருக்கும் தலா ஒரு கோடிக்கு டெர்ம் பாலிசி போடுங்கன்னு சொல்லுங்க, அவர் தெரிச்சி ஓடிடுவார். வருமானம் இல்லாதோருக்கு டெர்ம் பாலிசி தர மாட்டாங்க ஏன்னா இன்சூரன்ஸ் என்பதே வருமான இழப்பை ஈடுகட்டத்தான் என்பது காப்பீடு நிறுவனங்களின் நிலை. அப்ப எண்டோமெண்ட் மட்டும் ஏன் கொடுக்கறீங்கன்னு கேளுங்க. வருமானம் ஈட்டாதோருக்கு குறிப்பா குழந்தைகள் பேரில் ஆயுள் காப்பீடு போடாதீங்க. அவர்களுக்கு முதலீடு வேணும்னா அதுக்கு பல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன

4. க்ரூப் பாலிசி இருக்குன்னு காப்பீடு எடுக்காமல் இருப்பது

அலுவலகத்தில் தரும் க்ரூப் பாலிசியை மட்டும் நம்பி இருக்காதீர்கள். அதில் உங்களுக்குத் தேவைப்படும் ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு காப்பீடு இருக்காது. நீங்க அதே கம்பெனியில் ரிட்டையர்மெண்ட் வரை வேலை செய்வீங்கன்னு நிச்சயமில்லை, அடுத்த கம்பெனியிலும் க்ரூப் பாலிசி இருக்கும் என நிச்சயமில்லை. இருக்கும் கம்பெனி வழங்கும் க்ரூப் பாலிசியிலும் மாற்றங்கள் வரலாம். இப்ப விட்டுட்டு அப்புறம் தேவையை உணரும் போது உங்களுக்கு நீரழிவு நோய் வந்து காப்பீடு எடுக்க முடியாமலே போகலாம்

5. தேவைக்கு குறைவாக காப்பீடு செய்வது

ஒருவரின் ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு காப்பீடு ஐடியல், குறைந்த பட்சம் 10 மடங்காவது இருக்க வேண்டியது அவசியம். இப்ப நீங்க ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் சம்பாதிக்கறீங்க. உங்க குடும்பம் அதுக்கு ஏத்த லைஃப்ஸ்டைலுக்கு பழகிடுவாங்க. நீங்க திடீர்னு இறந்தா 2 கோடி ருபாய் இருந்தால்தான் அதை முதலீடு செய்து ஆண்டுக்கு 12-14 லட்சம் பெற முடியும். அப்போதுதான் விலைவாசி உயர்ந்தாலும் உங்க குடும்பத்தாரால் சமாளிக்க முடியும். ஒரு கோடி கிடைத்தால் அதிலிருந்து வரும் 7 லட்சம் வச்சி செலவுகளை கட்டுப் படுத்தி சமாளிக்கலாம். அதற்கும் குறைவாக காப்பீட்டுத் தொகை கிடைத்தால் அது சில ஆண்டுகளிலேயே கரைந்து விடும்

6. தேவைக்கு அதிகமாக காப்பீடு செய்வது

எப்படி தேவைக்கு குறைவாக காப்பீடு செய்வது தவறோ அது போல தேவைக்கு அதிகமாக காப்பீடு செய்வதும் தவறு. நிறுவனங்கள் பொதுவா உங்க தேவைக்கு அதிகமா காப்பீடு தர மாட்டாங்க., அப்படியே கிடைத்தாலும் உதாரணத்துக்கு வருமானத்தின் 40- 50 மடங்கு காப்பீடு எடுப்பது வீண் (மிக இளம் வயதில் இருப்போர் விதிவிலக்கு). 20 மடங்கு காப்பீட்டுக்கு ஆகும் ப்ரீமியத்துக்கும் மேல் செலவழிக்கும் பணத்தை முதலீடு செய்யும் வாய்ப்பை இழப்பீர்கள். 
அதே போல ரிட்டையர்மெண்ட் முதலீட்டு குறிக்கோளை அடைந்த பின் காப்பீட்டை நிறுத்தி விடலாம். இன்று நாம் இறந்தால் குடும்பம் இதே லைஃப்ஸ்டைலை தொடர முடியும் என்ற நிலை வந்தபின் கட்டும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் வீண் செலவு

7. ப்ரீமியத்தை மட்டும் வைத்து முடிவு செய்வது

டெர்ம் பாலிசி எடுக்கும் போது ப்ரீமியத்தை மட்டும் வைத்து முடிவு செய்யாதீர்கள். காப்பீட்டு நிறுவனத்தின் க்ளெயிம் ரேசியோ, கஸ்டமர் சர்வீஸ் பற்றிய ரிவ்யூஸ், கம்பெனி இன்னும் 30-40 ஆண்டுகள் நிலைத்திருக்குமா என்பதையெல்லாம் பார்த்து ஆராய்ந்து முடிவெடுங்கள்.

எப்ப எடுக்கறது, எந்த பாலிசி எடுக்கறது, எந்த நிறுவனத்தில் எடுக்கறதுன்னு குழம்புவோர் இவற்றை விலக்கிவிட்டால் மிச்சமிருப்பதே சரியா முடிவாக இருக்கும்

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

Image may contain: 2 people, people smiling

புதிய தலைமுறை இதழில் வந்த கட்டுரை

ஒரு பொருளின் விலை அதன் உற்பத்தி & தேவையைப் பொருத்து அமையும் (Supply Vs Demand), கையிருப்பு அல்லது விளைச்சல் கம்மியாகவும் நுகர்வோரின் தேவை அதிகமாகவும் இருந்தால் விலை அதிகரிக்கும், மாறி இருக்கும் போது விலை குறையும். 
அதே போல முதலீட்டில், ஒரு பங்கின் விலை நிறைய முதலீட்டாளர்கள் வாங்க முற்படும் போது ஏறும், விற்க முயலும் போது இறங்கும். 
தங்கமும் வெள்ளியும் கமாடிட்டியாகவும் விற்பனையாகின்றன அதே நேரத்தில் முதலீடாகவும் இருக்கின்றன.

தங்கம் விலை எப்ப ஏறும்? சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையும் போது பெரும் முதலீட்டாளர்கள் கையிருப்பை தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். அபோது தங்கத்தின் விலை ஏறும். பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது பொதுவாக தங்கத்தின் விலை குறையும் அல்லது பெரிய மாற்றமில்லாமல் இருக்கும். கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகள் Volatile ஆக இருப்பதால் தங்கத்தின் விலை கொஞ்சம் ஏறியுள்ளது. ஆனால் இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையை விட அதிக ஏற்றம் கண்டுள்ளது.

தங்கத்தின் விலை இந்தியாவில் நிர்ணயிக்கப்படுவது இல்லை, சர்வதேச விலை, அதுவும் $ இல் நிர்ணயிக்கப்படுது. ஆயில் விலை சர்வதேச சந்தையில் குறையுதுன்னு வைங்க, அதே நேரம் $ மதிப்பு ஏறுது, அப்ப இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறுமா இல்லையா அது போன்ற ஒரு விலை ஏற்றம் தான் இது

ஆறு மாத விலை விவரங்களை எடுத்தால், ஏப்ரல் 11 அன்று 1356 $க்கு விற்ற ஒரு அவுன்ஸ் தங்கம் (ஒரு ட்ராய் அவுன்ஸ் என்பது 31.21 கிராம், ஆகஸ்ட் 16 ம் தேதி 1176$ அளவுக்கு வீழ்ந்தது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏறி இன்று 1230 $ அளவில் இருக்கு. ஆகஸ்ட்லேருந்து இப்ப வரை 60$ அவுன்ஸுக்கு (31 கிராம்) ஏறியிருக்கு அதாவது 5% அல்லது கிராமுக்கு 2$ அளவு ஏறியிருக்கு, ஆனா இதே காலகட்டத்தில் இந்தியாவில் தங்கத்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 9% ஏறி 3058 ரூபாய் அளவில் உள்ளது. ஒரே நேரத்தில் $ மதிப்பும் தங்க விலையும் உயர்ந்ததே இதற்குக் காரணம்.

ஒரு பங்கில் முதலீடு செய்தால் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளும், அப்பங்கு லிஸ்ட் ஆகியிருக்கும் சந்தையின் போக்கும் மட்டுமே அதன் விலையை நிர்ணயக்கும். தங்கத்தில் செய்யப்படும் முதலீட்டை, தங்க விலை, டாலர் மதிப்பு ரெண்டுமே பாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு முதலீடு செய்யவேண்டும்.

ஒரு நல்ல போர்ட்ஃபோலியோவில் 5 முதல் 10% வரை தங்கம், வெள்ளி போன்ற Precisous Metals இருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து. தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் அணிவதற்கு வாங்கும் தங்கம் முதலீடு அல்ல செலவு என்பதைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வாங்கும் போது செய்கூலி, சேதாரம், ஜி எஸ் டி செலுத்த வேண்டும், விற்கும் போதும் தேய்மானம் அனைத்தும் போய்விடும். தங்கத்தில் முதலீடு செய்யணும்னா கட்டிகளாக வாங்கலாம் அல்லது Gold ETF அல்லது மத்திய அரசின் Sovereign Gold Bond இல் முதலீடு செய்யலாம். Sovereign Gold Bond திட்டத்தில் தங்கத்தின் விலை உயர்வு தரும் லாபத்தோடு ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கும்.

கடந்த 5 ஆண்டுகளில் மிகக் குறைந்த விலை கிராமுக்கு 2300 ரூபாய், அதிக பட்ச விலை 3060 ரூபாய். விலையேற்ற இறக்கத்தை கணிக்க முயலாமல் மியூச்சுவல் ஃபண்ட் எஸ் ஐ பி போல தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு சில கிராம்கள் வாங்கலாம்.

இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குச் சந்தை முதலீடு

No photo description available.

இப்படம் சொல்ல வர்றது என்னன்னா, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் (பொதுக் காப்பீடு வழங்கும் நிறுவனம்) செப்டம்பர் வரையிலான அரையாண்டில் ஈட்டிய நிகர லாபம் 96,382 லட்சம், இதே அரையாண்டில் இந்நிறுவனம் அதன் முதலீடுகளின் மூலம் பெற்ற லாபம் 1,97,225 லட்சம். இது பங்குச் சந்தை முதலீடுகளில் கிடைத்த லாபம். நிறுவனத்தின் பிசினஸ் காப்பீடு வழங்கி அதில் லாபம் பார்ப்பது, ஆனால் நடப்பதோ முதலீட்டில் லாபம் பார்ப்பது, இன்னும் சொல்லப் போனால், பங்குச் சந்தை முதலீடு மட்டும் இல்லாமல் போனால் இந்நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.

இன்சூரன்ஸ் கம்பெனிகள் நம்மிடமிருந்து வசூலித்த ப்ரீமியம் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து பெரும் லாபம் சம்பாதிக்கட்டும், நாம் வழக்கம் போல, ஷேர் மார்க்கெட் எல்லாம் ரிஸ்க் & சூதாட்டம்னு சொல்லிட்டு அனைத்து ஜீவன் டேஷ்களிலும் “முதலீடு” செய்வோம்.

யாருக்கு ஆயுள் காப்பீடு தேவையில்லை?

டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு தேவையில்லை, அதை வாங்காதீர்கள்

என்னடா ஆச்சு இவனுக்கு? இவன் பேச்சைக் கேட்டு டெர்ம் பாலிசி எடுத்தப்புறம் இப்படி சொல்றானேன்னு திட்ட ஆரம்பிச்சிட்டீங்களா?

இப்பதிவு யார் யாருக்கெல்லாம் ஆயுள் காப்பீடு தேவையில்லை என்பது குறித்து

1. குழந்தைகள் : கண்டிப்பா ஆயுள் காப்பீடு தேவைப்படாதவர்கள் லிஸ்டில் முதலிடம் பெறுபவர்கள் குழந்தைகள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கிறேன் பேர்வழி என்று காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். சேமிப்பிற்கு பல்வேறு நல்ல வழிகள் இருக்கின்றன

2. ஓய்வு பெற்றவர்கள் : வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் காப்பீடு தேவையில்லை. காப்பீடு என்பதே திடீர் மரணத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பைச் சரிகட்டுவதற்குத்தான். வருமானம் இல்லாத போது காப்பீடு அவசியல்லாதது மட்டுமல்ல அது ஒரு அநாவசிய செலவு

3. இறந்தாலும் வருமான இழப்பு இல்லதோர் : சில பேரோட வருமானம் மொத்தமும் வீட்டு வாடகையில் மூலம் இருக்கும். அவர்கள் இறந்து போனாலும் வருமானம் சற்றும் குறைவில்லாமல் வந்து கொண்டிருக்கும். இவர்களைப் போன்றோருக்கும் ஆயுள் காப்பீடு தேவையில்லை

4. செய்யும் தொழிலில் குடும்பத்தாரை ஈடுபடுத்துவோர் : உதாரணத்துக்கு சரவணா செல்வரத்தினம் அண்ணாச்சி அவர் உயிருடன் இருக்கும் போதே பிள்ளைகளை ஆளுக்கொரு கடையை நிர்வகிக்க வைத்து விட்டார், அவர் இறந்தபின்னும் கடைகள் தொடர்ந்து இயங்கி வந்தன. அவர் இறப்பால் குடும்பத்தாருக்கு பொருளாதார இழப்பு இருந்திருக்காது என நினைக்கிறேன். இது போன்று தம் கடையிலோ, தொழிலிலோ குடும்பத்தாரை ஈடுபடுத்தி முழுமையாக தொழிலை நடத்தும் அளவுக்கு வைத்திருப்போருக்கும் பெரிய அளவில் ஆயுள் காப்பீடு தேவையில்லை

5. ஒரு குடும்பத் தலைவர் தான் இருக்கும் போதே மனைவி மற்றும் பிள்ளைகளுக்குத் தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டால் அதற்குப் பின் ஆயுள் காப்பீட்டுக்கு அவசியமில்லை

6. உங்க பெற்றோர் உங்க வருமானத்தை நம்பி வாழவில்லை, நீங்க திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளோர் – அதாவது பொருளாதார ரீதியில் உங்களை நம்பி யாரும் இல்லை, இருக்கப் போவதுமில்லை என்று உறுதியாக நம்புவோருக்கும் ஆயுள் காப்பீடு அவசியமற்றது.

7. அமெரிக்காவில் இருக்கும் அமிஷ் சமூகம் போல முழுக்க முழுக்க சுயசார்பு வாழ்க்கை முறையை பின்பற்றுபவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கும் ஆயுள் காப்பீடு தேவையில்லை.

8. நீங்க “மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்” கேட்டகரி ஆளாக இருந்து, உங்க மரணத்துக்குப்பின் உங்க குடும்பத்தை கடவுள் பொருளாதார சீரழிவிலிருந்து காப்பார் என்று நீங்க நம்பினால் – தேவை எனினும் நீங்களும் ஆயுள் காப்பீடு இல்லாமல் வாழலாம். “In God, We Trust” என்று அமெரிக்கா அச்சிடுவதும் பணத்தில்தான் என்பதை மட்டும் நினைவில் நிறுத்துங்கள்

வாழ்க்கையின் எந்த எட்டில் நீங்கள் இருந்தாலும் இந்த எட்டில் இல்லாவிட்டால் ஆயுள் காப்பீடு உங்களுக்கு அவசியம். உங்க வருமானத்தை நம்பி ஏதேனும் ஒரு ஜீவன் இருந்தால், நீங்க வருமானம் ஈட்டும் வரையும், அந்த ஜீவன் பொருளாதார ரீதியில் உங்களைச் சார்ந்து இருக்கும் வரையும் உங்களுக்கு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு அத்தியாவசியம்

என் ஆர் ஐ களுக்கு இந்தியாவில் டெர்ம் பாலிசி

இப்பதிவை எழுதியவர் : கேசவன் சிதம்பரம்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் (NRI’s) அடிக்கடி சந்தேகமாக கேட்கும் கேள்வி நாங்கள் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கமுடியுமா? அப்படி எடுத்து வெளிநாட்டில் இருக்கும்போது எதிர்பாராமல் இறந்துபோனால் கிளைம் கிடைக்குமா என்பதுதான்.

நான் பணிபுரிந்துவரும் ஆதித்யாபிர்லா கேப்பிடல் நிறுவனம் கனடாவைசேர்ந்த சன்லைப் நிறுவனத்துடன் இணைந்து 2000 ஆண்டுமுதல் இங்கு இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கிவருகிறது.

இன்சூரன்ஸ் பாலிசிகளி்ல் அடிப்படையான திட்டம் (Basic Plan) இந்த டேர்ம் இன்சூரன்ஸ் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த டேர்ம் இன்சூரன்ஸ் பிளானை வெளிநாடுவாழ் இந்தியர்களும் தாராளமாக எடுக்கலாம் சில நிபந்தனைகளுடன்.

என்ன நிபந்தனை?

ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனமும் வெளிநாடுகளை அங்குள்ள சூழலுக்கேற்ப இரண்டுவகையாக பிரித்துவைத்திருக்கின்றன. ஒன்று பாதுகாப்பான நாடு மற்றொன்று பாதுகாப்பு குறைவான நாடு. (Standard Living Country and Non Standard Living Country) இதில் பாதுகாப்பான நாடுகளில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போது விண்ணப்பிப்பவர் இங்கு இந்தியாவில் இருக்கவேண்டும். மருத்துவ பரிசோதனைகள் இங்கு இருக்கும்போது செய்யவேண்டும். மருத்துவ பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையில் பாலிசி வழங்கப்படும்.

பாலிசியுன் இணைந்து வழங்கப்படும் ரைடர்களை பெறமுடியாது.

இந்தியாவில் பணிபரியும்போது எடுக்கப்பட்ட டேர்ம் இன்சூரன்ஸ் பணிநிமித்தம் எந்த நாட்டுக்கு பணியாற்ற சென்றாலும் செல்லுபடியாகும். அது பாதுகாப்பு குறைவாகஉள்ள(Non Standard Living Country) நாடுகள் பட்டியலில் இருந்தாலும். அதேபோல பாதுகாப்பான நாடுகளில் பணிபுரியும்போது எடுக்கப்பட்ட டேர்ம் இன்சூரன்ஸ் பின்னர் பணிமாற்றலாகி பாதுகாப்பற்ற நாடுகளுக்கு பணிபுரியசென்றாலும் செல்லுபடியாகும். விண்ணப்பிக்கும்போது உள்ள சூழலைமட்டுமே காப்பீட்டு நிறுவனம் கருத்தில்கொள்ளும்.

எங்களது ஆதித்யாபிர்லா கேப்பிடல் நிறுவனம் குறைந்தசெலவில் டேர்ம்இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கிவருகிறது. உதாரணத்துக்கு

1. 35 வயதுடைய ஆண் தனது 65 வயதுவரை 30 ஆண்டுகளுக்கு பாலிசி எடுத்தால் ஆண்டுக்கு வரிகள்உட்பட ரூபாய் 13,582/_பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது.

2. 45 வயதுடைய ஆண் தனது 65 வயதுவரை ஒருகோடி ரூபாய்க்கு பாலிசி எடுத்தால் ரூபாய் 23,819/_ செலவாகிறது.

3. 40 வயதுடைய ஆண் மற்றும் 35 வயதுடைய அவரது மனைவி இருவரும் இணைந்து கணவருக்கு ஒருகோடி ரூபாய்க்கும் மனைவிக்கு ஐம்பதுலட்ச ரூபாய்க்குமாக ஒரே பாலிசியாக எடுத்தால் ரூபாய் 23,443/_ செலவாகிறது. 
மேலே சொன்னது புகைபழக்கம் இல்லாதவர்களுக்கானது. இதில் முதிர்வுதொகை (Maturity benefit)என்று எதுவும் கிடையாது. பிரீமியத்தில் இங்குள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்ற பேதமில்லை. அனைவருக்கும் ஒரே பிரீமியம்தான்.

தற்போது பல்வேறு விருப்பதேர்வுகளுடன் டேர்ம் இன்சூரன்ஸ் கிடைக்கிறது. செலுத்திய கட்டணம் திருப்பெற வழியிருக்கிறது. கணவன் மனைவி இருவரும் இணைந்து ஒரேபாலிசியாக எடுக்க வழியிருக்கிறது. பணவீக்கத்தை எதிர்கொள்ளும்வகையில் ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டுதொகையை அதிகப்படுத்த வழியிருக்கிறது, மேலும் பல வசதிகள் இருக்கிறது.

டேர்ம் இன்சூரன்ஸ் என்பதை செலவுஎன்று எண்ணாமல் குடும்பதலைவரின் கடமைஎன்று எண்ணி வாங்கவேண்டுகிறேன்.