வங்கி வெல்த் மேனேஜர்ஸ்

http://www.http://www.finvin.in/wealth-managers-can-wealth-destroyers

நான் ஏற்கெனவே சொன்னதுதான், வங்கிக்குப் போக காரணங்கள் – சேமிப்புக்கணக்கு, வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் பர்சனல் லோன், லாக்கர் – இவற்றைத் தவிர வேறெதையும் வங்கியில் டிஸ்கஸ் செய்யாதீர்கள். இவற்றைத் தவிர வேறெதையும் ப்ரமோட் செய்வது வங்கியின் வேலையில்லை.

காப்பீடு, யூலிப், மியூச்சுவல் ஃபண்ட், இப்ப புதுசா பி எம் எஸ் (Portfolio Management Service)னு சொல்லிக்கிட்டு உங்களுக்கேயான ப்ரத்யேக Wealth Manager பேர்ல வருவாங்க – என் முதலீடுகள் எல்லாம் வெளில இருக்குங்க, வங்கியின் உதவி தேவையில்லை என்று சொல்லிவிடுங்கள். வங்கிச் சேவை தேவை என்று பேச்சைத் தொடர்ந்தால் தேவையில்லாத முதலீட்டில் பண விரயம் ஆகும்.

மெல்வின் ஜோசஃப் ஒரு நல்ல Fee only advisor, அவரைத் தொடருங்கள். ஆலோசகர் உதவி தேவைப்படுவோர் உங்க சொந்த முடிவில் அவரை நாடுங்கள் (எனக்கு அவரைத் தெரியும், அவருக்கு என்னைத் தெரியாது – இது விளம்பரப் பதிவு அல்ல)

கேன்சர் கவர் பாலிசி

எல் ஐ சியின் கேன்சர் கவர் பாலிசி

கேன்சர் எனும் கொடிய நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காரணங்களால் மட்டும் கேன்சர் வந்து கொண்டிருந்தது மாறி சுற்றுச்சூழல், பதப்படுத்தப்பட்ட உணவு, துரித உணவு போன்ற பல காரணங்களால் கேன்சரால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. கேன்சர் வந்தவர்களின் வாழ்க்கை தலைகீழாய் மாறிப் போவதை அன்றாடம் காண்கிறோம். இந்நோய் வந்தவர்களுக்கு பொதுவாக அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியேஷன் தெரபி, லேசர் சிகிச்சை மற்றும் அறிதாக ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை என பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப் படுகின்றன.

கேன்சரிலிருந்து முழுவதுமாக மீண்டு வருபவர்கள் சொற்பமே. மேற்கூரிய சிசிக்கைகள் மூலம் கேன்சர் நோயாளிகளின் வாழ்நாள் சில பல ஆண்டுகள் நீட்டிக்கப்படுகின்றன. கேன்சர் சிகிச்சைகள் அதிக பொருள் செலவு பிடிக்கக் கூடியவை.

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவில் மாரல் சப்போர்ட்டும் பொருள் உதவியும் தேவைப்படும். மாரல் சப்போர்ட்டுக்கு நண்பர்களையும், உற்றார் உறவினர்களையும் சேர்த்தாலும் கேன்சர் சிகிச்சைக்குத் தேவைப்படும் அளவுக்கு பணம் சேர்ப்பது கடினம். இப்பிரச்சனையைத் தீர்க்கும் அருமருந்தாக வந்திருப்பது எல் ஐ சியின் கேன்சர் கவர் பாலிசி. இத்திட்டம் கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இது ஒரு Non-linked, Regular premium payment Health Insurance Plan. இதில் 20 வயது முதல் 65 வயது வரை உள்ளோர் சேரலாம். குறைந்தபட்சமாக 10 லட்சரூபாயும் அதிகபட்சமாக 50 லட்சரூபாயும் காப்பீட்டின் அளவு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 
காப்பீட்டின் கால அளவு குறைந்த பட்சம் 10 வருடம் அதிக பட்சம் 30 வருடம் அதே நேரத்தில் காப்பீடு முடியும் காலம் 50 வயது முதல் 75 வயதுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் , அதாவது 20 வயதில் நீங்கள் இந்த பாலிசியை எடுத்தால் 30 ஆண்டு காலம் எடுக்க வேண்டும். ஒரு வேளை நீங்க இந்த பாலிசியை 50 வயதில் எடுத்தால் காப்பீடடு 25 வருடங்களுக்கு மட்டுமே வழங்கப் படும்

இந்த பாலிசியிம் ப்ரீமியம் ஆண்டுக்கொரு முறையோ அல்லது அரையாண்டுக்கொரு முறையோ செலுத்தப்பட வேண்டும். ஆயுள் காப்பிட்டுத் திட்டங்களைப் போல் காலாண்டுக்கொரு முறையோ மாதாமாதமோ செலுத்தும் வசதி தற்போது இல்லை. இந்தத் திட்டம் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. எல் ஐ சியின் பிற திட்டங்களைப் போல் இதில் என் ஆர் ஐக்கள் பங்கு பெற முடியாது.

எல் ஐ சி கேன்சர் கவரின் காப்பீட்டுத் தொகை (Sum Insured) பாலிசி காலம் முழுவது மாறாமல் இருக்குமாறும், பாலிசி ஆரம்பித்து ஒராண்டுக்குப் பிறது ஆண்டுக்கு 10% அதிகரிக்கவும் என இரண்டு ஆப்சன்களை எல் ஐ சி நிறுவனம் வழங்குகிறது. தற்போதைய வருமானத்தில் 40 லட்சரூபாய் காப்பீட்டுக்கு ப்ரீமியம் கட்ட முடியாது, ஆனால் வரும் ஆண்டுகளில் வருமானம் கூடும் அதிக ப்ரீமியம் செலுத்த முடியும் என நினைப்போர் இரண்டாவது ஆப்சனை தெரிவு செய்யலாம். அவர்கள் முதலில் 25 லட்ச ரூபாய்க்கு எடுக்கும் பாலிசி ஆண்டுக்கு 10% உயர்ந்து 5 ஆண்டுகளில் 40 லட்ச ரூபாய் அளவை எட்டும். 


பாலிசியின் பயன்கள் 


1. பயனருக்கு Early Stage Cancer இருப்பது உறுதி செய்யப் பட்டால், காப்பீட்டுத் தொகையில் 25% பணமாக வழங்கப் படும், மேலும் மூன்றாண்டுகளுக்கு ப்ரீமியம் கட்டுவதிலிருந்து விலக்கும் வழங்கப் படும்

2. பயனருக்கு Major Stage Cancer இருப்பது உறுதி செய்யப்பட்டால், முழு காப்பீட்டுத் தொகையும் உடனே வழங்கப்படும். ஒரு வேளை பயனருக்கு ஆரம்ப நிலை கேன்சர் கண்டறியப்பட்டு 25% தொகை வழங்கப்பட்டபின் கேன்சர் முற்றி மேஜர் ஸ்டேஜுக்குப் போனால் அப்போது 75% வழங்கப்படும். பாலிசியின் இரண்டாவது பயனாக பத்தாண்டுகளுக்கு காப்பீட்டு அளவின் 1% மாதாமாதம் வழங்கப்படும். 50 லட்சரூபாய் பாலிசி எடுத்த ஒருவருக்கு மேஜர் ஸ்டேஜ் கேன்சர் உறுதியானால், அவருக்கு உடனடியாக 50 லட்சரூபாயும் மேலும் அப்போதிலிருந்து பத்தாண்டுகளுக்கு மாதாமாதம் 50,000ரூபாய் பணமும் கிடைக்கும். இடையில் பயனர் இறக்க நேரிட்டாலும் அவருடைய வாரிசுக்கு பத்தாண்டு காலம் முழுவதும் இத்தொகை வழங்கப்படும். 


பாலிசியின் மூன்றாவது பயனாக மேஜர் ஸ்டேஜ் கேன்சர் உறுதியான பிறகு ப்ரீமியம் தொகை செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப் படுகிறது.

பிரிமியம் தொகை 
30 வயது ஆண், 50 லட்ச ரூபாய் காப்பீடு, 30 ஆண்டுகாலம் என்ற உதாரணத்துக்கு ப்ரீமியம் தொகை ஆண்டுக்கு ரூ 7254 மற்றும் ரூ 1306 வரி ஆக மொத்தம் ரூ 8560. உங்களுக்கான ப்ரீமியம் தொகையை எல் ஐ சியின் இணையதளமான www.licindia.in இங்கு காணலாம்.

தெரிந்து கொள்ள வேண்டிய பிற விவரங்கள் 
இந்த பாலிசியை எல் ஐ சியின் முகவர்களிடமும் பெறலாம் அல்லது எல் ஐ சியின் இணையதளத்தில் நேரடியாகவும் வாங்கலாம். இணைய தளம் மூலம் வாங்கும் போது ப்ரீமியம் தொகையில் 7% தள்ளுபடி பெறலாம்

கவரேஜ் பாலிசி வாங்கிய தினத்திலிருந்து 180 நாட்களுக்குப் பிறகே தொடங்கும்.

பொதுவாக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் திட்டகாலம் முழுவதும் ப்ரீமியம் தொகை மாறாது. கேன்சர் கவர் திட்டத்தில் ப்ரீமியம் தொகை ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே நிச்சயம். அதற்கப்புறம் நிர்ணயிக்கப்படும் ப்ரீமியத் தொகை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாறாமல் இருக்கும்.

இந்த பாலிசியையும் பிற மெடிகல் இன்சூரன்ஸ் பாலிசிக்களையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த பாலிசி எடுத்தாச்சு வேற மெடிகல் இன்சூரன்ஸ் தேவையில்லை என எண்ண வேண்டாம். இது கேன்சர் நோய்க்கு மட்டுமான பிரத்யேகமான பாலிசி

இந்த பாலிசியின் குறைகள் என்று பார்த்தால் பாலிசியின் அம்சங்களைத்தான் சொல்ல வேண்டும். அதிகபட்ச காப்பீட்டு அளவு 50 லட்ச ரூபாய்தான், வருங்காலத்தில் எல் ஐ சி இதை அதிகப்படுத்த வேண்டும். அதே போல அதிகபட்சமாக 30 ஆண்டுகாலம் மட்டுமே பாலிசி எடுக்க முடியும். ஆயுள் காப்பீடு சம்பாதிக்கும் காலம் வரை மட்டும் போதும் ஆனால் இது போன்ற பாலிசிகள் உயிருடன் இருக்கும் வரை தேவை. இந்த இரண்டு மாற்றங்களையும் எல் ஐ சி எதிர்காலத்தில் கொண்டு வந்தால் இந்த பாலிசி முழுமையடையும்.

கேன்சர் எனும் கொடிய நோய் யாருக்கும் வர வேண்டாம். அப்படி வந்துவிட்டால் குறைந்தபட்சம் மருத்துவச் செலவுக்கு என்ன செய்வது என்று யோசிக்காமல் இருக்க இந்த பாலிசி உதவும். ”கடவுளை நம்பு ஆனால் கதவை பூட்டு” என்ற சொலவடைக்கு ஏற்ப கேன்சர் உருவாக்கும் பொருட்களான புகையிலை, மது போன்றவற்றை தவிர்ப்போம் அதையும் மீறி கேன்சர் வந்தால் சிகிச்சை உதவிக்கு காப்பீட்டை நாடுவோம்

Related image

சொத்துக் காப்பீடு… லாப நஷ்டக் கணக்கு!

ரு லட்சம் ரூபாயை முதலீடு செய்ய மூன்று வாய்ப்புகள். முதலாவதில் ரூ.9,000 லாபம் நிச்சயம். இரண்டாவதில், ரூ.10,000 லாபமடைய 90% வாய்ப்பு; லாபமில்லாமல் போக 10% வாய்ப்பு – இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் முதலாவது வழியையே தேர்ந்தெடுக்கிறார்கள்.   

அதே ரூ.1 லட்ச ரூபாய் முதலீட்டில், ரூ.9,000  நஷ்டம் நிச்சயம் என்பது  ஒரு வாய்ப்பு. ரூ.10,000 நஷ்டம் அடைய 90% வாய்ப்பு. நஷ்டமே இல்லாமல் தப்பிக்க 10% வாய்ப்பு, இப்படி ஒரு நிலையில் பெரும்பான்மையானோர் தேர்ந்தெடுப்பது இரண்டாவது வழியை. 

இதிலிருந்து நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிகின்றன. லாபம் தரும் சந்தோஷத்தைவிட நஷ்டமே மனிதர்களை அதிகம் பாதிக்கிறது. பொதுவாக, நாம் லாபத்தை எதிர்நோக்கும்போது ரிஸ்க்கைத் தவிர்க்கவும், நஷ்டத்தை எதிர் நோக்கும்போது ரிஸ்க் எடுக்கவும் தயங்குவதில்லை. 

பொதுவாக, காப்பீட்டை அதிலும் குறிப்பாக ஜெனரல் இன்ஷூரன்ஸ் எனப்படும் பொருள் அல்லது சொத்துக்கான காப்பீட்டை லாப நஷ்ட நோக்கிலேயே மக்கள் எதிர்கொள்கின்றனர். 

காப்பீட்டின் அவசியம் ஏற்படும் வரை பலரும் அது குறித்து யோசிப்பதே கிடையாது. எப்போதோ ஒருமுறை நிகழக்கூடிய அல்லது நிகழாமலே போகக்கூடிய ஓர்  இயற்கை பேரிடருக்காகவோ, திருட்டுக்காகவோ செலுத்தும் காப்பீட்டுத் தொகையை நஷ்டம் என்றே கருதுகின்றனர்.  அதே நேரத்தில், பேரிடர் நிகழ வாய்ப்புண்டு என்று நினைத்தால், பிரீமியத்தைக் கவனிக்காமல் காப்பீட்டை எடுப்பதில் உள்ள சாதகங்களையே அதிகம் கவனிக்கிறது.  

வீடோ, தொழிற்சாலையோ, தீப்பற்றிய பிறகு அல்லது மழை வெள்ளம் புகுந்தபின்பு காப்பீட்டைப் பெற முடியாது. இதற்கு ஆங்கிலத்தில் எதிர்பார்ப்புக் கோட்பாடு (Prospect Theory) என்று பெயர். இதன்படி, ஒரே அளவு லாபம் தரக்கூடிய இருவேறு முதலீடுகளைப் பெரும்பாலான மக்கள் அவர்தம் எண்ணத்தில் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அலசுகிறது. உதாரணத்துக்கு, இரண்டு திட்டங்களில் கிடைக்கக்கூடிய லாபம் ஒரு லட்சம் ரூபாய்தான். முதலாவது திட்டத்தில், நேரடியாக ஒரு லட்சம் ரூபாய் லாபம்; இரண்டாவதில், இரண்டு லட்சம் ரூபாய் லாபம், அப்புறம் ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் கிடைக்கும் எனில், முதலாவது திட்டமே நம்மில் பலரின் விருப்பமாக இருக்கும். அதற்குக் காரணம், லாபம் தரும் சந்தோஷத்தைவிட நஷ்டம் தரும் துக்கம் அதிகம்.   

மனிதர்களின் மற்றொரு குணம், உண்டு / இல்லை என்கிற விதத்தில் ரிஸ்க்கினைப் பார்த்து, அதன்படி முடிவெடுப்பது. உதாரணத்துக்கு, சென்னைவாசிகளிடம் கேட்டால் வெள்ளம் வர வாய்ப்பு முழுமையாக இருப்பதாகவும், எனவே, வெள்ள நிவாரணக் காப்பீடு எடுக்க வேண்டும் என்பார்கள். ஆனால், நிலநடுக்கத்துக்கான காப்பீடு எடுக்கச் சொன்னால், அது எதுக்கு வீண் செலவு என்பார்கள். ஒரு நிறுவனம் தந்த புள்ளிவிவரங்களின்படி,  வெள்ளம் வந்த அடுத்த ஆண்டு காப்பீடு எடுத்தோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. அடுத்துவந்த ஆண்டுகளில் பெரிய வெள்ளம் ஏதும் வராத நிலையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் காப்பீட்டைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டார்கள்.

விபத்தோ, திருட்டோ ஏதும் நிகழாது என்ற நம்பிக்கையில், சில ஆயிரம் ரூபாய் பிரீமியம் தொகையைச் சேமிப்பதாக நினைத்து, ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்தினைக் காப்பீடு செய்ய மறுக்கிறோம். பிரீமியம் தொகையை நஷ்டம் எனக் கருதும் நாம், காப்பீடு வழங்கும் கவரேஜை லாபமாக  கருதாததே இதற்குக் காரணம். ஆனால், இயற்கைப் பேரிடர் நிகழும் காலத்தில் பிரீமியத்தை நஷ்டமாக நினைக்காமல் கவரேஜை லாபமாகப் பார்க்கிறோம்.

எதையெல்லாம் காப்பீடு செய்ய வேண்டும் என்பதைச் சுலபமாக முடிவு செய்யலாம். சேமிப்பில் கைவைக்காமல் வெறும் மாதாந்திரச் சம்பளத்தில் எதையெல்லாம் மாற்ற முடியாதோ, அதையெல்லாம் இன்ஷூரன்ஸ் செய்வது உத்தமம். 

காப்பீடு என்பது லாப நஷ்ட நோக்கில் பார்க்க வேண்டிய முதலீடல்ல. ‘Investing is to Achieve Certainty, while Insurance is Cover the Uncertainty’ என ஆங்கிலத்தில் அழகாகச் சொல்வார்கள். இனியாவது காப்பீட்டுக்குச் செலுத்தும் தொகையை நஷ்டமெனக் கருதாமல், அதை ஓர் அத்தியாவசியச் செலவாகக் கருதி மதிப்புமிக்க பொருள்கள்/சொத்துகளை இன்ஷூரன்ஸ் செய்யுங்கள். முதலில் உங்கள் குடும்ப உறுப்பினர் களைக் காக்க உங்கள் உயிருக்கு இன்ஷூரன்ஸ் எடுங்கள்!  

  • மே 2018,நாணயம் விகடன் இதழில் வெளியான கட்டுரை

வீட்டுக்கடன்

33 வயது ஷ்யாம் சென்னையில் ஒரு வீடு வாங்கினார், பதிவுச் செலவு உள்பட 1.35 கோடி மொத்தச் செலவு. வங்கியில் 75 லட்ச ரூபாய் வீட்டுக்கடன் சாங்க்சன் ஆகிவிட்டது. பத்திரப் பதிவுக்கு போறதுக்கு முன்ன வங்கிப் பிரதிநிதி அவரை லோன் ப்ரொடெக்சன் காப்பீடு எடுக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். அந்தக் காப்பீடு இல்லாமல் லோன் தரமுடியாது என்று அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் சாராம்சம் என்னன்னா, வீட்டுக்கடனை கட்டி அடைக்கும் முன் ஒரு வேளை ஷ்யாம் இறந்து விட்டால், வங்கி அந்த காப்பீட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை அவர் மனைவிக்கு சொந்தமாக்கிவிடும். வீட்டுக் கடன் எடுக்கும் ஒவ்வொருவரும் கடன் தொகைக்கு ஈடாக டெர்ம் பாலிசி எடுப்பதையும் வற்புறுத்தி வருகிறேன் (ஆண்டு வருமானத்தின் 10 மடங்குக்கு குறைவாக காப்பீடு இருப்பவற்களுக்கு) – ஆனால் இந்தக் காப்பீடு எடுக்கணுமான்னு கேட்டா இல்லேன்னுதான் சொல்வேன்

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது நல்ல விசயமாகத்தான் தெரியும். இது குறித்து முழுசா தெரிஞ்சிக்கிட்டாதான் ஏன் வேண்டாம்னு புரியும்

1. இது ஒரு சிங்கிள் பேமெண்ட் காப்பீடு – அதாவது ப்ரீமியம் மொத்தத்தையும் மொதல்லயே கட்டணும். சாதா டெர்ம் பாலிசியில் 20-30 ஆண்டுகள் சிறு தொகையை ஒவ்வொரு ஆண்டும் கட்டுவோம்

2. இந்தக் காப்பீடு Reducing Coverage Plan. மீதமிருக்கும் கடனுக்கு ஈடான காப்பீடு மட்டுமே. இன்று கடன் 75 லட்சம் காப்பீடும் அதே அளவு. 10 ஆண்டுகள் கழித்து கடன் தொகை 50 லட்சமாக இருக்கும் போது காப்பீட்டுத் தொகையும் 50 லட்சமாகிவிடும். Reducing Coverage Plan க்கு வங்கிகள் வாங்கும் ப்ரீமியம் முழு டெர்முக்கும் குறையாத டெர்ம் பாலிசியை விட மிக அதிகம்

3. கடன் தரும் வங்கியே இதையும் விற்பதால், அவங்களோட காப்பீட்டு நிறுவனத்தில்தான் வாங்கியாகவேண்டும். நாலு நிறுவனங்களில் ப்ரொபோசல் வாங்கிப்பார்த்து முடிவு செய்ய முடியாது

4. பொதுவா வீடு வாங்குபவர்கள் 20% புரட்டுவதற்கே கஷ்டப்படுவார்கள், அப்பாடா எப்படியோ புரட்டியாச்சு 80% வங்கி கொடுக்கும், வீடு வாங்கிடலாம்னு ஆசுவாசப்படும்போதுதான் இதைச் சொல்வார்கள், இதற்குக் கொடுக்க நம்மிடம் காசு இருக்காது. நமக்கு ஏதோ உதவி செய்வது போல், கவலை வேண்டாம் சார் இதையும் லோன்ல ரோல் பண்ணிடலாம் என்பார்கள். அதாவது ஷ்யாமோட லோன் 75 லட்சத்திலேருந்து 77.5 லட்சமாகிவிடும். ஏற்கெனவே சிங்கிள் ப்ரீமியம் பாலிசி இது – வீட்டுக் கடனுக்கு கொடுக்கும் 8.5% வட்டியை இதுக்கும் கொடுக்கணும். 20 ஆண்டுகள் கட்டி முடிக்கும் போது இந்த இன்சூரன்ஸூக்கு ஷ்யாம் கட்டிய தொகை 5,20,000 ரூபாய்

5. ஷ்யாமிடம் வங்கி இந்தக் காப்பீட்டுக்கு கேட்டது 2.5 லட்சம். லோன்ல சேத்து வட்டியோட 20 வருசம் கட்ட போவது 5.2 லட்சம். அதாவது ஆண்டுக்கு 26000 ரூபாய்க்கு மேல். அதுவும் குறைந்து வரும் கவரேஜுக்கு. அவர் 20 ஆண்டுகளும் குறையாத கவரேஜ் டெர்ம் பாலிசி எல் ஐ சியின் இடெர்ம் பாலிசியில் எடுத்தால் ப்ரீமியம் வெறும் 10,178 தான், தனியார் நிறுவனங்களில் இன்னும் கம்மியா இருக்கும்.

6. பெரும்பாலான இந்தியர்களின் கனவு வீட்டுக்கடனை சீக்கிரமே அடைத்து விட வேண்டும் என்பதுதான். நான் அடிக்கடி எதிர் கொள்ளும் கேள்வி, வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கட்டுமா அல்லது முதலீடு செய்யட்டுமா என்பதே. பெரும்பாலானோர் 20 ஆண்டுகள் கடன் வைத்துக் கொள்வதில்லை. கடனுக்காக என்று தனியே டெர்ம் பாலிசி எடுத்தால் கடனை அடைக்கும் ஆண்டுக்கப்புறம் டெர்ம் பாலிசி ப்ரீமியம் கட்டுவதை நிறுத்தி விடலாம், இந்த லோன் ப்ரொடக்சன் காப்பீட்டில் அந்த வசதி கிடையாது நீங்க ஒரு ஆண்டிலேயே கடனை அடைத்தாலும் முழு ப்ரீமியத்தையும் கட்டியே ஆகவேண்டும்.

வீட்டுக் கடனுக்கு அப்ளை செய்யும் போதே இது குறித்து கேளுங்கள், லோன் ப்ரொடெக்சன் இன்சூரன்ஸ் எடுக்க மாட்டேன் என்று சொல்லுங்கள், வேணும்னா லோன் தொகைக்கு டெர்ம் பாலிசி எடுத்துக்கறேன்னு சொல்லுங்க, அப்படியும் இதை உங்க தலையில் கட்டப் பார்த்தால் வேறு வங்கியை நாடுங்கள்

Image result for home loan insurance

வங்கிக்கடன் – ரிசர்வ் வங்கி

ஒத்த ரூவாயை வச்சிக்கிட்டு கள்ள நோட்டும் அடிக்காமல் ஒம்போது ரூபாயை உருவாக்குவது எப்படி?

உங்ககிட்ட நூறு ரூபாய் இருந்தா அந்த அளவுக்குத்தான் யாருக்காவது செக் எழுதித் தரமுடியும், 900 ருபாய்க்கு செக் எழுதிக் கொடுத்தா கேஸ் ஆகிறும், ஆனா இதையே வங்கிகள் சட்டப்பூர்வமா செய்கின்றன.

வங்கிகளின் வேலை வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கிக் கொண்டு அதை விட அதிக வட்டிக்கு வேறு வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பது. இந்தியாவில் இன்று தோரயமா 6.5 % வைப்பு நிதிக்கு வழங்குகின்றன. அவ்வாறு பெறப்படும் பணத்தை சுமார் 8.5% வட்டிக்கு வீட்டுக்கடனா வழங்குகின்றன. இதில் கிடைக்கும் 2% அதிக வட்டிதான் வங்கிக்கு லாபம். ஆயிரம் கோடி வாங்கி கடன் கொடுத்தாலும் வங்கிக்கு வெறும் 20 கோடிதான் லாபம் கிடைக்கும், அதிலும் சம்பளம் இன்னபிற செலவுகள் போக நிகரலாபம்னு பாத்தா ஒண்ணுமே நிக்காது. மேலும் சர்க்குலேசனில் வெறும் ஆயிரம் கோடி ரூபாய் பணம் மட்டுமே இருக்கும்.

வங்கிகள் அதிக லாபம் ஈட்டுவதற்காகவும் நோட்டு அடிக்காமல் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் கண்டுபிடிக்கப்பட்டதுதான் Fractional Reserve Lending or Fractional Reserve Banking

ஒரு வங்கியில் சுமாரா ஆயிரம் கோடி ருபாய் இருக்குன்னு வச்சிக்குவோம், அதில் 800 கோடி வைப்பு நிதியிலும் மிச்சம் 200 கோடி வங்கிக் கணக்கிலும் இருக்கு. வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை பெரும்பாலானோர் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் எடுப்பதில்லை, வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்போர் எல்லாரும் ஒரே நேரத்தில் பணம் கேட்டு வரப் போவதில்லை. எனவே அவ்வங்கி ஆயிரம் கோடியையும் எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டியதில்லை, அப்படி வைத்திருந்தால் பணம் போட்டவருக்கு வட்டி வழங்க முடியாது – வங்கி பாதுகாப்பா வைத்திருப்பதற்கு வாடிக்கையாளர்தான் சேவைக் கட்டணம் வழங்க வேண்டியிருக்கும். அதனால் வங்கிகள் தம்மிடம் இருக்கும் நிதியில் 10% மட்டும் கையிருப்பு வைத்துக் கொண்டு மிச்சத்தை கடனாக வழங்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான தீர்வாகவே தெரியும். இது எங்க போய் முடியுதுன்னு பாப்போம்

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மத்திய வங்கி இருக்கும். சில நாடுகளில் மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டிலும் சில நாடுகளில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இயங்கும் சுய அமைப்பாகவும் இருக்கும். இவையே நாட்டில் பணப்புழக்கத்தை கட்டுப் படுத்தும். பணப்புழக்கத்தை அதிகரிக்க நோட்டு அச்சடிப்பது, குறுகிய கால கடனுக்கான வட்டி விகித்தை மாற்றுவது போன்றவற்றால் நாட்டில் பணபுழக்கத்தை நிர்வகிக்கும்.
உதாரணத்துக்கு அமெரிக்காவின் நோட்டு அச்சடிக்கும் உரிமை பெற்றது ஃபெடரல் ரிசர்வ் வங்கி. இவ்வங்கி நோட்டடித்து வினியோகிக்க வங்கிகளுக்கு கடனாக வழங்கும். பெரும்பாலான நேரங்களில் சந்தையில் இருக்கும் அரசு கடன் பத்திரங்களை வாங்குவதன் மூலம் பணத்தை வினியோகிக்கும்.

வங்கி மில்லியன் டாலருக்கு கடன் பத்திரங்கள் வாங்கினால், அதை விற்றவர் கையில் அந்த மில்லியன் டாலர் இருக்கும். அவர் சிட்டி வங்கியில் அதை டெபாசிட் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம், இப்ப சிடி வங்கியில் அந்த மில்லியன் டாலர் வைப்பு நிதியாக இருக்கிறது. சிடி வங்கி லட்சம் டாலரை கையிருப்பாக வைத்துக்கொண்டு 900,000 $ கடனாக வழங்கும். அதை விட்டுக்கடனாக வாங்குபவர் விற்பவருக்கு அதை வழங்குவார். அவர் பேங்க் ஆஃப் அமெரிக்காவில் அதை டெபாசிட் செய்கிறார், பேங்க் ஆஃப் அமெரிக்கா 90,000 கையிருப்பாக வைத்து மிச்சம் 810,000 $ கடனாக வழங்க முடியும் – அது டெபாசிட்டாக போகும் வங்கி 81000த்தை வச்சிக்கிட்டு மிச்சத்தை கடனாக வழங்க முடியும்… இது இப்படியே தொடர்ந்து கடைசீல கடனாக வழங்கப் பட்ட தொகை 9 மில்லியன்$ ஆக இருக்கும்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது ஃபெடரல் ரிசர்வ் புழக்கத்தில் விட்ட புதிய பணம் வெறும் மில்லியன் டாலர்கள்தான் ஆனா வழங்கப்பட்ட கடனோ 9 மில்லியன் டாலர்கள் – மிச்ச எட்டு மில்லியன் டாலர்கள் செயற்கயாக உருவாக்கப்பட்டவை. நாட்டில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த நினைத்தால் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கையில் இருக்கும் அரசு கடன் பத்திரங்களை விறக ஆரம்பிக்கும். இப்படித்தான் மத்திய வங்கிகள் நாட்டில் பணப்புழக்கத்தை நிர்வகிக்கின்றன.

இஸ்லாமிய சட்டப்படி நிர்வகிக்கப்படும் நாடுகள் தவிர்த்து உலகின் பெரும்பாலான நாடுகள் Fractional Reserve Banking முறையையே பின்பற்றுகின்றன. உதாரணத்துக்கு இந்தியாவில் உள்ள வங்கிகள் ஒரு கோடி ரூபாயை 6.5% வட்டிக்கு பெறுகின்றன – செலவு 65 லட்சம். கடன் கொடுப்பதோ ஒன்பது கோடி 8.5% வட்டியில் வரவு 76,50,000. ஆனாலும் வங்கிகள் நட்டத்தில் இயங்குகின்றன.

Fractional Reserve Banking சரியா தவறா என்று பல கோணங்களில் விவாதிக்கலாம், இக்கட்டுரையின் நோக்கம் இது சரி என்றோ தவறு என்றோ நிரூபிக்க அல்ல, இது செயல்படும் முறை குறித்து விருப்பம் உள்ளோர் அறிந்து கொள்ள மட்டுமே. சரியோ தவறோ இதுவே இன்று உலகின் பெரும்பான்மை நாடுகளில் பின்பற்றப்படுவது. இது மாடர்ன் பொருளாதாரத்தில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

Image result for Fractional Reserve Banking

நல்ல கடன் – கெட்ட கடன்

ஏப்ரல் மாத மல்லிகை மகள் இதழில் வந்த என் கட்டுரை. 

Image may contain: 1 person

நல்ல கடன் – கெட்ட கடன்

பொதுவாக சிக்கனமாகச் செலவு செய்வதிலும் திட்டமிட்டு சேமிப்பதிலும் ஆண்களை விட பெண்கள் திறமையானவர்கள். இன்றைய சூழலில் குடும்பத்துக்காக கடன் வாங்கும் முடிவிலும் பெண்களின் பங்களிப்பு அதிகம். எனவே பெண்கள் கடனும் கடன் சார்ந்த விசயங்களும் குறித்து தெளிவு பெற வேண்டியது அவசியம். 
”கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்பது இதிகாச காலத்துக்கு வேணா சரியா இருந்திருக்கலாம், இன்றிருக்கும் மாடர்ன் எக்கானமியில் கடன் இல்லாத மனிதரைப் பார்ப்பது கடினம். தனிமனித வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கும் தொழில் அபிவிருத்திகும் கடன் அவசியமாகிறது. அத்தியாவசத்திற்கு கடன் வாங்கும் பழக்கம் மெல்ல மெல்ல ஆடம்பரத் தேவைகளுக்கு வாங்கும் போது அதுவே பல பிரச்சனைகளுக்கு அடிப்படையாகிறது.

கடனில் நல்ல கடன் கெட்ட கடன் என எப்படி பிரிப்பது? 
எந்த நோக்கத்துக்காக கடன் வாங்கறோமோ அது உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதாக இருந்தால் அது நல்ல கடன் 
கடன் வாங்கி நீங்க வாங்கும் பொருள் மதிப்பில் உயரும் தன்மையுடையதாக இருந்தால் அது நல்ல கடன் (Appreciation)
உங்க வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ ஒரு பொருள் அவசியமாகத் தேவைப்படுகிறது ஆனால் அதை வாங்க உங்களிடம் மொத்தமாகப் பணமில்லை, அதே நேரத்தில் அதற்கான தவணைத் தொகையை சுலபமாக உங்களால் செலுத்த முடியும் என்று வரும் போது அதற்காக வாங்குவதும் நல்ல கடனே
உதாரணத்துக்கு, விற்பனைத் துறையில் இருக்கும் ஒருவருக்கு இரு சக்கர வாகனம் அவசியம். வண்டியிருந்தால்தான் அவரது வேலையில் நீடிக்க முடியும், வருவாயைப் பெருக்க முடியும் என்கிற நிலையில் வாங்கும் வாகனக் கடன் நல்ல கடன்
கடன் இல்லாமல் வீடு வாங்குவது இன்று 99% பேருக்குச் சாத்தியமில்லை. வீட்டு வாடகை மிச்சமாகிறது, அடிக்கடி வீடு மாற்ற வேண்டிய பிரச்சனையில்லை, வாங்கிய வீட்டின் மதிப்பு உயரும் வாய்ப்பு இருக்கும், திருப்பிச் செலுத்தும் வட்டிக்கும் அசலுக்கும் வருமான வரி விலக்கு உண்டு (அசலுக்கான வரிவிலக்கு Section 80 C யின் கீழ் வரும்). இது சந்தேகமேயில்லாமல் நல்ல கடன்

உங்களுக்கோ உங்க பிள்ளைகளுக்கோ கல்விக்காக வாங்கும் கடனும் நல்ல கடனே. பணம் இல்லைன்னு படிப்பை நிறுத்தாமல் கடன் வாங்கியாவது படிப்பைத் தொடர்வது நல்ல எதிர்காலத்தை உறுதி செய்யும். அடிப்படைக் கல்வி, உயர் கல்வி, Certification போன்றவற்றுக்காக கடன் வாங்குவதில் தவறேயில்லை.

லோயர் மிடில் க்ளாஸ் குடும்பத்தில் திடீரென சமையல் அடுப்போ, கிரைண்டரோ, ஃபிரிட்ஜோ பழுதாகி புதிதாக வாங்க வேண்டிய நிலையில் மொத்தப்பணம் கொடுத்து வாங்க முடியலேன்னா தவணை முறையில் வாங்கித்தான் ஆகவேண்டும். வீட்டு உபயோகப் பொருட்கள் இல்லையென்றால் நிம்மதியாக வாழ முடியாதப்போ அது நல்ல கடனா இல்லையா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது

இவற்றைத் தவிர கிட்டத்தட்ட மற்ற அனைத்துமே கெட்ட கடன்கள்தான் 
ஏற்கெனவே வருமானம் முழுமைக்கும் செலவும் பல கடன்களும் வைத்திருக்கும் ஒரு நடுத்தர குடும்பம் காருக்காக கடன் வாங்குவது ஆடம்பரம். அது அநாவசியம் 
சுற்றுலாவுக்கோ வேறு தேவையற்ற செலவுக்கோ பர்சனல் லோன் வாங்குவது கெட்ட கடன். வங்கிகள் பர்சனல் லோனுக்கு பொதுவா 14 முதல் 18 % வரை வட்டி வாங்குகின்றன. டாக்குமெண்டேசன், ப்ராசஸிங்னு தனியா 2% வேற வாங்குறங்க. நீங்க வாங்கும் ஒரு லட்ச ரூபாய் பர்சனல் லோனுக்கு 5 வருசத்தில் 1.5 லட்சரூபாய் திருப்பிச் செலுத்துவீங்க. லோனுக்கு கட்டும் 2500 ரூபாயை நல்ல முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் மூணே வருசத்தில் உங்க கிட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும், அப்ப நீங்க வாங்க நினைச்சதை முழுப்பணம் தர்றேன்னு பேரம் பேசி வாங்கலாம். இப்படி செய்யும் போது உங்களோட ரெண்டு வருட சேமிப்பு மிச்சமாகிறது.

இதே போல 0% வட்டின்னு வரும் விளம்பரங்களை நம்பி தேவையற்ற / அத்தியாவசிமற்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதும் கெட்ட கடனே. 
வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜோ வாஷிங் மெசினோ நல்லா வேலை செய்யும் போது புது மாடல் வருது, வட்டியில்லாமல் கிடைக்குது என்று வாங்குவது தேவையற்ற செலவு. பழைய பொருள் இன்னும் மூணு வருசம் வேலை செய்யும், இந்த நேரத்தில் மாசம் 500 ரூபாயை தொடர் முதலீடு செய்து வந்தால் அப்பொருளை கண்டிப்பாக மாற்ற வேண்டிய நேரத்தில் முழுப்பணம் கொடுத்தே வாங்கலாம். 
பரவி வரும் மற்றொரு மோசமான பழக்கம் ஆண்டுக்கொருமுறை செல்போனை மாற்றுவது அதுவும் மாதத்தவணையில். செல்போன்களை சுலபமாக 5 ஆண்டுகள் உபயோகிக்கலாம். ஆண்டுக்கொருமுறை செல் போன் மாற்றுவதே தவறு, அதையும் கடனில் வாங்குவது மிக ஆபத்தான போக்கு

0% வட்டி என்பது பெருமாலான நேரங்களில் ஏமாற்று வேலையே. கன்ஸ்யூமர் லோன்களுக்கான வட்டி 18%க்கும் மேல் இருக்கும். அது உங்களுக்குத் தெரியாத வகையில் பெறப்படும். ஒரு நிறுவனம் ஒரு பொருளை 15,000 ரூபாய் என்றும் மாதம் 500 வீதம் 30 மாதங்கள் செலுத்தலாம் என்றும் விளம்பரம் செய்யும். அதே பொருளை வேறு டீலரிடமோ அமேசானிலோ நீங்கள் 10,000 ரூபாய்க்கு ரொக்கத்துக்கு வாங்க முடியும். சொல்வது 0% செலுத்துவது 18% ஆக இருக்கும்.

இவற்றையெல்லாம் விட மோசமான கடன் என்றால் அது க்ரெடிட் கார்ட் வழங்கும் ரிவால்விங் க்ரெடிட்தான். க்ரெடிட் கார்ட் கடனுக்கு வட்டி எவ்வளவு தெரியுமா? 36%. ரிவால்விங் க்ரெடிட் எனும் சூழலில் சிக்கிச் சீரந்தழிந்தவர்கள் ஏராளம்.

கடன் வாங்குவதற்கு முன்னால் ஒரு விசயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். தவணை முறையில் பொருள் வாங்குவதன் மூலம் உங்க எதிர்கால வருமானத்தை இன்றே செலவு செய்கிறீர்கள். அதற்கு கடன் வாங்குவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டு உழைப்பையும் சேமிப்பையும் வங்கிக்கு தாரை வார்க்கிறீர்கள். கடன் வாங்கும் முன் கடன்பட்டாவது வாங்க வேண்டிய அளவுக்கு அந்தப் பொருள் தகுதியானதா என்று சிந்தித்துப்பாருங்கள். 
கடன் வாங்குவதற்கு முன்னால், மாதத்தவணையை கட்டும் அளவுக்கு உங்க வருமானமும் செலவுகளும் உள்ளனவா என்பதையும் பணத்தைத் திருப்பிக் கட்டத் தெளிவான திட்டம் இருப்பதையும் உறுதிசெய்யுங்கள். கடனை சீக்கிரமே திருப்பிக் கட்டினால் பெனால்டி உள்ளதா என்று கேளுங்கள். Pre Closure Penalty இல்லாத கடனை மட்டுமே வாங்கி அதையும் சீக்கிரமே அடைத்து வட்டியை மிச்சப்படுத்துங்கள்.

கெட்ட கடன் தவிர்த்து நல்ல கடன் நாடி வளமான எதிர்காலத்துக்கு திட்டமிட்டு சேமியுங்கள்

சேமிப்பின் பத்து விதிகள்

Status

1. இலக்கை நிர்ணயுங்கள் – இலக்கில்லா சேமிப்பு அர்த்தமில்லாதது. உங்களுக்கான இலக்கை முதலில் முடிவு செய்யுங்கள்

2. பட்ஜெட் அத்தியாவசியம் – இலக்கை முடிவு செய்தபின் வருமானத்தின் 70-80 %க்குள் உங்க செலவுகளைத் திட்டமிடுங்கள். பட்ஜெட்டை எப்போதும் மீறாதீர்கள்

3. சேமிப்பை சீக்கிரமே ஆரம்பியுங்கள் – சம்பாதிக்க ஆரம்பித்ததும் சேமிக்க ஆரம்பியுங்கள். இப்பத்தான் வேலைக்குப் போயிருக்கேன், சேமிப்பெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்னு விடாதீங்க. மாசம் 10,000 ரூபாய் 20 வருசம் முதலீடு செய்துவந்தால் இறுதியில் 76 லட்சரூபாய் இருக்கும். அதையே 30 வருசம் முதலீடு செய்து வந்தால் இறுதில் 2.3 கோடி ரூபாய் இருக்கும். அதுதான் கூட்டு வட்டியின் மகிமை

4. வருமானம் உயரும் போது சேமிப்பையும் உயர்த்துங்கள் – ஊதிய உயர்வு வரும் போது சேமிப்பின் அளவும் உயர வேண்டும். 10% அதிக ஊதியம் வந்தால் சேமிப்பும் குறைந்தபட்சம் 10% உயரமாறு பார்த்துக் கொள்ளுங்கள்

5. நல்ல ஆலோசகரை கண்டறியுங்கள் – முதலீட்டின் முதல் எதிரி எமோசனல் முடிவுகள். உங்க பணத்தை நீங்களே முதலீடு செய்யும் போது அதில் உங்க எமோசனை வைப்பது இயல்பு, அதையே ஒரு ஆலோசகர் செய்யும் போது முடிவுகள் ரேசனலாக இருக்கும். ஆலோசகருக்கு கட்டணம் தர வேண்டியிருக்கலாம், ஆனால் அது நீண்ட காலத்தில் பயன் தரும்

6. கற்பதை நிறுத்தாதீர்கள் – ஆலோசகர் இருந்தாலும் நீங்களும் தொடர்ந்து கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். முதலீட்டு வாய்ப்புகள், வரி – வரி விலக்கு, சந்தையின் போக்கு போன்றவை குறித்து படிப்பதை நிறுத்தாதீங்க

7. பங்குச் சந்தை இறக்கத்தை எப்போதும் எதிர்பாருங்கள் – நீண்ட காலம் முதலீடு செய்யும் போது சந்தை இறக்கம் வந்தே தீரும். அது நாளையே நடக்கும் என்று எப்போதும் எண்ணுங்கள். அப்படி இறக்கம் வந்தால் என்ன செய்வது என்று முடிவு செய்தவர்களுக்கு அது ஆப்பர்ச்சுனிட்டி. சந்தை இறக்க நேரத்தில் பணத்தை எடுக்காமல் இருக்க, அவசரகால நிதி எப்போதும் கையிருப்பு இருக்கட்டும். எவ்வளவு மோசமாக வீழ்ந்தாலும் மூன்றாண்டுகளுக்கும் மீண்டு வந்தது என்பது வரலாறு. இரண்டு ஆண்டுகளுக்குள் தேவைப்படும் பணத்தை சந்தை முதலீட்டில் வைக்கமல் இருந்தால் எந்த வீழ்ச்சி குறித்தும் கவலைப்படத் தேவையில்லை

8. முதலீட்டை பரவலாக்குங்கள் – எப்பேர்பட்ட முதலீடா இருந்தாலும் மொத்த சேமிப்பையும் ஒரே திட்டத்தில் போடாதீங்க
சேமிப்பை மூன்றாக பிரித்துக் கொள்ளுங்கள். ஈக்விட்டி, பாண்ட் / Debt மற்றும் அவசரத்தேவைக்கு கையிருப்பு

9. ஆண்டுக்கொரு முறை முதலீட்டை சரிபாருங்கள் – பார்த்து தேவையான மாறுதல்களைச் செய்யுங்கள்

10. ஆயுள் காப்பீடு எடுங்கள் – எவ்வளவுதான் பாசிடிவான ஆளாக இருந்தாலும் காப்பீடு விசயத்தில் மட்டும் பெசிமிஸ்ட்டாக இருங்கள். நாளை நாம் இல்லேன்னா? என்ற கேள்வி எப்போதும் இருக்கட்டும். நீங்க இருக்கும் போது குடும்பத்துக்கு வழங்கிய லைஃப்ஸ்டைலை நீங்க இல்லேன்னாலும் அவர்களுக்கு வழங்க வேண்டியது உங்க கடமை. அதை டெர்ம் பாலிசியால் மட்டுமே தர முடியும். ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை டெர்ம் பாலிசி எடுத்து வையுங்கள்.


மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் மாதாமாதம் முதலீடு செய்வோருக்கு இலவச ஆயுள் காப்பீடு

The following is purely my personal opinion. This is NOT to sell or recommend Any specific mutual fund. Consider your current financial situation, your financial goals and consult a financial advisor before making any investments

ஆயுள் காப்பீடு, நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு இவற்றின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து சொல்லிக்கிட்டு வர்றேன்.

இன்சூரன்ஸ் கம்பெனிகள் வழங்கும் யூலிப் பாலிசிகள் இவை இரண்டையும் வழங்கறோம்னு சொல்லிக்கிட்டு உங்க பணத்தை சுரண்டுகின்றன. இதற்கு நேர்மாறாய் – மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் மாதாமாதம் முதலீடு செய்வோருக்கு இலவச ஆயுள் காப்பீடு வழங்குகின்றன இரு நிறுவனங்கள்

ரிலையன்ஸ் மற்றும் ஆதித்ய பிர்லா நிறுவனங்கள் எஸ் ஐ பி சந்தாதாரர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு வழங்குகின்றன.

இரண்டு திட்டங்களையும் படித்துப் பார்த்ததில் எனக்கு பிர்லா நிறுவனத்தின் திட்டம் பெட்டராகப் படுகிறது.

ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்வோருக்கு முதலாம் ஆண்டு மாதச் சந்தாவின் பத்து மடங்கும், இரண்டாம் ஆண்டு 50 மடங்கும் மூன்றாம் ஆண்டிலிருந்து 100 மடங்கும் இலவச ஆயுள் காப்பீடு வழங்குகிறது. 
அதாவது மாதம் 10,000 ரூ நீங்கள் முதலீடு செய்து வந்தால் மூன்றாம் ஆண்டிலிருந்து 10 லட்ச ரூபாய் இலவச ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

There is no free Lunch என்கிற சொலவடைக்கு ஏற்ப, இதிலும் சில கண்டிசன்கள் இருக்கின்றன, ஆனால் அவை முதலீட்டாளரை டிசிப்ளின் செய்யவே உதவும். இந்த செஞ்சுரி எஸ் ஐ பியில் மூன்றாடுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்யணும், ஓராண்டுக்குள் பணத்தை எடுத்தால் 2% கட்டணமும், ஓராண்டு முதல் மூன்றாண்டுக்குள் எடுத்தால் 1% கட்டணும் வசூலிக்கப்படும், மூன்றாண்டுகளுக்குப் பிறகு பணம் எடுத்தால் கட்டணம் கிடையாது. மூன்றாண்டுக்குள் முதலீட்டை நிறுத்தினால் காப்பீடும் நின்றுவிடும்.
மூன்றாண்டுகள் பணம் செலுத்தியபின், தொடர்ந்து பணம் செலுத்தா விட்டாலும், பணத்தை எடுக்காத வரையும் முதலீட்டாளருக்கு 55 வயது ஆகும் வரையும் காப்பீடு தொடரும்.

முதல் 45 நாட்களுக்கு விபத்தினால் நிகமும் மரணம் மட்டுமே காப்பீட்டால் கவர் செய்யப் படுகிறது, அதற்கப்புறம் அனைத்து வித மரணங்களும் கவர் செய்யப் படுகின்றன. காப்பீடு வழங்கப்படும் முன் உங்களுக்கு இருக்கும் நோயினால் மரணம் நேர்ந்தாலும் காப்பீட்டு பணம் கிடைக்காது.

இப்படி சில பல கண்டிசன்கள் இருந்தாலும், இலவசமாக கிடைக்கும் கூடுதல் ஆயுள் காப்பீடு நல்ல விசயமே.

இதையும் உங்களுக்குத் தேவையான ஆயுள் காப்பீட்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு ஆயுள் காப்பீடு அனைவருக்கும் அவசியம். ஒரு வேளை வருமானம் ஈட்டுபவர் இறக்க நேரிட்டால், இது கொஞ்சம் கூடுதல் தொகையை குடும்பத்துக்கு வழங்கும். வருமான வரி சேமிப்புக்காக மட்டும் இன்சூரன்ஸ் வாங்குவதை விட முட்டாள்தனாமனது இலவச காப்பீட்டுக்காக மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது. ஒரே மாதிரி இருக்கும் இரு ஃபண்ட்களில் எதை தெரிவு செய்வது என்ற குழப்பம் இருந்தால், இலவச காப்பீட்டை ஒரு காரணியாக எடுக்கலாம். மத்தபடி நீங்க எப்ப வேணா முதலீட்டை நிறுத்தலாம் அல்லது மாத்தலாம் – அப்ப காப்பீடும் போய்விடும் என்பதை மறந்து விட வேண்டாம்.

குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு அவசியமா?

Image result for children insurance policy images

குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு எடுப்பது Conceptual ஆ தவறு. வருமானம் ஈட்டாத யாருக்குமே ஆயுள் காப்பீடு தேவையில்லை, குழந்தைகளுக்குத் தேவையேயில்லை. புள்ள செத்தா பணம் வரட்டும்னு எந்தப் பெற்றோரும் நினைப்பதில்லை. அதனால எந்த இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டும் குழந்தைகளுக்கு பாலிசி விக்கும் போது சம் அஸ்யூர்ட் பத்தி பேசவே மாட்டாங்க. பசங்க காலேஜ் போகும் போது ஃபீஸ் கட்ட உதவும் என்பதை மட்டுமே சொல்லி விப்பாங்க. அதாவது முதலீடாக மட்டுமே சொல்லி விற்கப்படும் இன்சூரன்ஸ் பாலிசி. சரி முதலீடாக அத்தகைய பாலிசிகள் தேறுகின்றனவான்னு பாத்தா, நீங்கள் செய்யக் கூடிய முதலீடுகளிலேயே மட்டமான முதலீடாக இருக்கிறது.

எல் ஐ சி வழங்கும் சில்ரன்ஸ் மணி பேக் பாலிசி எடுத்துக் கொள்வோம். 
அஞ்சு வயசு குழந்தைக்கு 1 லட்ச ரூபாய் சம் அஸ்யூர்ட், 20 ஆண்டு காலம் எடுத்தால், வரியோட சேத்து ப்ரீமியம் ரூ 5838. 13, 15, 17 வருடங்களின் முடிவில் ரூ 20,000 மற்றும் 20 வருட முடிவில் 40,000 மற்றும் கேரண்டீடா 14,000 ஆக மொத்தம் 54 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வெறும் 20,000 ரூபாய் அதுவும் 13 வருசம் கழித்து கிடைக்கும் போது அதை செலவுதான் செய்வோம், முதலீடு செய்யும் வாய்ப்பு கம்மி – அப்படியே முதலீடு செய்வதாக வைத்து கால்குலேட் செய்தேன்.

13 ஆண்டு முடிவில் கிடைக்கும் 20,000 ரூ 8% அளவில் வளர்ந்து 20 ஆண்டு முடிவில் 34,276 ஆக இருக்கும் 
15 ஆண்டு முடிவில் கிடைக்கும் 20,000 ரூ 8% அளவில் வளர்ந்து 20 ஆண்டு முடிவில் 29,386 ஆக இருக்கும் 
17 ஆண்டு முடிவில் கிடைக்கும் 20,000 ரூ 8% அளவில் வளர்ந்து 20 ஆண்டு முடிவில் 25,194 ஆக இருக்கும் 
இறுதியில் கிடைக்கும் 54,000ம் சேர்ந்து மொத்த கையிறுப்பு 1,42,857 ஆக இருக்கும். நீங்க செலுத்திய தொகை ரூ 116,760.

இந்தத் தொகையை வேறு எதிலாவது முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம்
மாதம் ரூ 486.5, இருபது வருட காலம் – வெறும் 2% வளர்ச்சி இருந்தால் கையிறுப்பு எவ்வளவு இருக்கும் தெரியுமா? ரூ 1,43,418. அதாவது சில்ரன்ஸ் மணி பேக் தரும் ரிட்டர்ன் 2 சதவீதத்துக்கும் குறைவு.

மீடியம் ரிஸ்க் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் போட்டு வெறும் 8% வளர்ச்சி கண்டால் 2,86,000 ரூ இருக்கும். அது கூட வேண்டாம் வங்கி ரெக்கரிங் டெபாசிட்டிலோ ரிஸ்க் ரொம்பவே கம்மியான பாண்ட் ஃபண்ட்களிலோ பணம் போட்டு வந்தாலே இதை விட அதிக கையிருப்பு நம்மிடமிருக்கும்.

இன்சூரன்ஸ் தரும் ரிட்டர்ன்ஸ் இன்ஃப்ளேசனுக்கு கூட காணாது. அதாவது நீங்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு ஈடாக இன்று கிடைக்கக் கூடிய பொருளைக்கூட 20 வருசம் கழித்து இன்சூரன்ஸ் தரும் பணத்தைக் கொண்டு அன்றைய விலையில் வாங்க முடியாது. இந்த பாலிசியை விட ஜி ஆர் டி தங்க மாளிகை மாதச்சீட்டு கூட பெட்டர் என்பேன்.

கால்குலேட் செய்த விவரம் இணைக்கப் பட்டுள்ளது.

No photo description available.

டிஸ்கி : மேலே கூறப்பட்டது என் தனிப்பட்ட கருத்து. இதை முதலீட்டு ஆலோசனையாக கருதுவது உங்கள் விருப்பம் மற்றும் முடிவு மட்டுமே. காப்பீடு / முதலீட்டுத் திட்டங்களில் பணம் போடும் முன்னர் கற்றறிந்த முதலீட்டு ஆலோசகரை கலந்தாலாசிக்கவும்

Mutual Fund முதலீடு

மியூச்சுவல் முதலீடு ஆரம்பிச்சிட்டீங்க, இனிமே நீங்க செய்யவேண்டியவை

1. ஒழுங்கா மாதா மாதம் தவறாமல் முதலீடு செய்யுங்க

2. தெனமும் மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்டில் லாகின் பண்ணி பேலன்ஸ் ஏறியிருக்கா இறங்கியிருக்கான்னு பாத்துக்கிட்டே இருக்காதீங்க

3. ஒரு ஃபண்ட் மேனேஜரை நம்பி பணம் போட்டுட்டீங்க, மார்க்கெட் ஏற்ற இறக்கங்களில் அவர் நல்லா செயல்படுவார்னு நம்பி கொஞ்ச காலமாவது வெயிட் பண்ணுங்க

4. ஆறு மாசத்துக்கு ஒரு முறை ஃபண்ட் எப்படி செயல் படுதுன்னு பாருங்க, அதே கேட்டகரியில் மத்த ஃபண்ட்களின் வளர்ச்சியையும் பாருங்க, 1-2% வித்தியாசம் இருந்தால் ஒண்ணும் செய்ய வேண்டாம், அதுக்கு மேல இருந்தா ஃபண்ட் ஸ்விட்ச் செய்வது குறித்து யோசிக்கலாம்

5. ஆண்டுக்கு ஒரு முறை ரீபேலன்சிங் செய்யுங்க. அதாவது லார்ஜ் கேப் 50% மிட் கேப் 30% பாண்ட் 20% என்று முடிவு செஞ்சிருக்கீங்கன்னு வச்சிப்போம். மாசம் 10,000 முதலீடு – ஓராண்டு முடிவில் 1.2 லட்சம் முதலீடு 1.5 லட்சமாக இருக்கும். அதில் 50% 75,000 அதுக்கு மேல லார்ஜ் கேப்பில் இருப்பதை எதில் கம்மியா இருக்கோ அதுக்கு மாத்துங்க… அதிக லாபம் கொடுத்துக் கொண்டு இருக்கும் ஃபண்டில் இருந்து கம்மி லாபம் கொடுக்கும் பாண்டில் ஏன் போடணும்னு நீங்க கேக்கலாம். மார்க்கெட் பெருசா விழும் போது அதுதான் உங்களை தாங்கிப் பிடிக்கும்.

6. மார்க்கெட் ஏறும் போது முதலீடு செய்வது எளிது, மார்க்கெட் விழும் போது எடுத்துக்கிட்டு ஓடி வந்து விடக்கூடாது. மார்க்கெட் கீழ வரும் போது அதை மேலும் வாங்க ஆப்பர்ச்சுனிட்டியாகத்தான் பார்க்க வேண்டும். வீழ்ந்த மார்க்கெட் மேல எழுந்து தான் ஆக வேண்டும் அதுதான் நியதி, அப்படி எழும் போது நீங்க கம்மி விலைக்கு வாங்கின யூனிட்கள் அதிக லாபம் தரும்

7. தொடர்ந்து சந்தை, முதலீடுகள் குறித்து படித்துக் கொண்டே இருங்கள், புதிதாய் வரும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதித்து முதலீடு செய்யுங்கள்

மிக மிக முக்கியமான பாயிண்ட் – முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. ஒரு வேளை பணம் இழக்க நேரிட்டால் என்னைத் தேடி வந்து உதைக்காதீர்கள்