ஆயுள் காப்பீடும் வருமானவரி சேமிப்பும்

SAVE INCOME TAX: Know where to invest better for you, read Expert's opinionமார்ச் 15 ஆச்சு, மார்ச் 31க்கு இன்னும் ரெண்டே வாரங்கள்தான் இருக்கு. நம்மாட்கள் வருமானவரியைப் பத்தி நினைக்க ஆரம்பிக்கும் நேரம் இது. இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் ரொம்பவும் ஆக்டிவா இருக்கும் காலமும் இதுவே.

ஏன் சார் வீணா வருமான வரி கட்டறீங்க? ஒரு லட்ச ரூபாய் ப்ரீமியத்துல ஒரு பாலிசி எடுத்தீங்கன்னா 20,000 ரூ வருமானவரி மிச்சம்னு வருவாங்க.. ஏமாந்தீங்கன்னா காலத்துக்கும் ஒன்றுக்கும் உபயோகமில்லாத ஏதோ ஒரு ஜீவன் டேஷ் பாலிசிக்கு பணம் கட்டிக்கிட்டு இருப்பீங்க.

வருமானவரிக்கு பயந்து எண்டொமெண்ட்டோ யூ எல் ஐ பிலயோ முதலீடு செய்வது கொதிக்கும் எண்ணெய்க்கு பயந்து நெருப்பில் குதிப்பதற்கு சமம். அவை காப்பீடாகவும் பிரயோசனப்படாதவை, நல்ல முதலீடும் இல்லை.

மூணு விதமான காப்பீடுகளின் தோராய ரிட்டர்ன்ஸ் இப்படத்தில் இருக்கு

முதலில் வெகு பாப்புலரான ஜீவன் ஆனந்த் எண்டோமெண்ட் பாலிசி – வெறும் 4 லட்ச ரூபாய் காப்பீடு ஆண்டு ப்ரீமியம் 50 ஆயிரம் ரூபாய். 10 ஆண்டுகள் முடிவில் கையில் 7,25,000 ரூ இருக்க வாய்ப்புள்ளது. அதாவது 6.6% ரிட்டர்ன்

ரெண்டாவது யூ எல் ஐ பி. இதில் 5 லட்ச ரூபாய் காப்பீடு, 50,000 ரூ ப்ரீமியம். இதில் 10% வளர்ச்சி வர வாய்ப்புண்டு. 10 ஆண்டு முடிவில் 9 லட்ச ரூபாய் கையில் இருக்க வாய்ப்புண்டு

கடைசியா டெர்ம் பாலிசி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட். 50 லட்ச ரூபாய் காப்பீடு வெறும் 7000ரூ ஆண்டு ப்ரீமியத்துக்கு கிடைக்கும். மிச்ச 43000 ருபாயை ICICI Prudential Value Discovery Fund போன்ற ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்தால், 10 வருட முடிவில் கையில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்க வாய்ப்புள்ளது. முக்கியமா பாலிசி காலத்தின் போது மற்ற இரண்டையும் விட 10 மடங்கு அதிக காப்பீடு, முதலீடாகவும் இதுவே சிறந்த தெரிவு.

உங்களுக்கு வருமானவரி விலக்கு முக்கியமாக இருந்தால் – இந்த ஆண்டே பெருந்தொகை முதலீடு செய்யணும்னா 5 ஆண்டுகள் வரிவிலக்கு வைப்பு நிதி அல்லது NSC யில் முதலீடு செய்யலாம். இனி வரும் காலங்களில் டெர்ம் பாலிசியும் இ எல் எஸ் எஸ் மியூச்சுவல் ஃபண்ட் (எஸ் ஐ பி முறையில்) காம்பினேசன் எடுக்கலாம்.

ஆகவே அனைத்து ராசி நேயர்களும் அடுத்த இரண்டு வாரங்கள் ஏஜெண்ட்களின் பேச்சைக் கேட்டு தேவையற்ற பாலிசிகள் பக்கம் கவனத்தை திருப்பாமல் இருப்பது நல்லது.

ஏன் வேண்டாம் எக்ஸ்ப்ரெஸ் பே? (express pay)

ஃபேஸ்புக் க்ரூப் ஒன்றில் டெர்ம் பாலிசி எடுக்கும் போது சீக்கிரமே ப்ரீமியம் கட்டி முடிக்கற ஆப்சன் எடுப்பது நல்லதான்னு கேட்டிருந்தார், அங்கு ஆங்கிலத்தில் நான் சொன்ன பதிலின் தமிழாக்கம் இங்கு

30 ஆண்டுகாலம் காப்பீடு எடுக்கும் போது ப்ரீமியத்தை எட்டே ஆண்டுகளில் கட்டினா செம லாபம் – ஆனா அந்த லாபம் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டுக்கும் நிறுவனத்துக்கும்தான் உங்களுக்கு அல்ல.

ஏன் வேண்டாம் எக்ஸ்ப்ரெஸ் பே?

1. 30 வயதாகும் நபர் 30 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீடு எடுக்கிறார். ஆண்டு தோறும் கட்டினால் 11,000 ரூபாய் கட்டினால் போதும் . எதுக்கு சார் 30 வருசம் கட்டறீங்க? எட்டே வருசத்தில் கட்டினால் மொத்த ப்ரீமியத்தில் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கும் சீக்கிரமும் கட்டி முடிச்சிடலாம் என்று ஏஜெண்ட்கள் மூளைச் சலவை செய்வர்.
30 ஆண்டுகள் *11000 = 3,30,000
8 ஆண்டுகள் * 28261= 2,26,088

மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் லாபமாகத் தோன்றும். ஆனால், அந்த எட்டு ஆண்டுகளும் நீங்கள் ஆண்டுக்கு 17,261 ரூபாய் அதிகமாகச் செலுத்துவீர்கள். இதையே மாதம் 1438 ரூபாயாக நல்ல மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்து வந்தால் 8 ஆண்டுகள் முடிவில் உங்களிடம் 2,10,000 ரூபாய்க்கு மேல் இருக்கும். அதாவது ஒரு லட்ச ரூபாய் லாபத்தைப் பெற 2 லட்சத்துக்கும் மேல் இழக்கிறீர்கள். அப்படி 8 ஆண்டுகள் முதலீசு செய்து 2 லட்சத்துக்கும் சேர்த்தால், அதற்கப்புறம் அதிலிருந்து வரும் வட்டி அல்லது வளர்ச்சியிலிருந்தே ஆண்டுக்கு 11,000 எடுத்து ப்ரீமியமாக கட்டலாம்.

2. இந்த எக்ஸ்ப்ரஸ் பே இன்னும் ஒரு விதத்தில் நஷ்டமே தருகிறது. பாலிசிதாரர் ரெகுலர் பே முறையில் ப்ரீமியம் செலுத்தி வரும் போதும் 9 ம் ஆண்டு இறந்தால் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும், அவர் செலுத்திய ப்ரீமியம் 8*11000 = 88,000 ரூபாய் மட்டுமே. அதே அவர் எக்ஸ்ப்ரஸ் பே தெரிவு செய்தாலும் குடும்பத்துக்கு கிடைக்கப் போவது என்னவோ அதே ஒரு கோடிதான் ஆனால் அவர் 2,26,000 ரூபாய் ப்ரீமியம் செலுத்தி முடித்திருப்பார்.

3. பாலிசிதாரர், 55 வயதில் சீக்கிரமே ரிட்டையர் ஆகும் முடிவு எடுத்தால், அப்போது டெர்ம் பாலிசியை கேன்சல் செய்து விடலாம், அதற்கப்புறம் 5 ஆண்டுகள் ப்ரீமியம் செலுத்த வேண்டியதில்லை, ஆனால் எக்ஸ்ப்ரஸ் பே முறையில் 8 ஆண்டுகளில் முழு ப்ரீமியத்தையும் செலுத்தியிருந்தால், தேவையற்ற போதும் கவரேஜ் தொடர்ந்து கொண்டிருக்கும்

4. வருமான வரி விலக்கு. 30-35 வயதில் இருக்கும் போது பெரும்பாலானோருக்கு வீட்டுக் கடன் இருக்கும். வீட்டுக் கடனுக்கான அசல், பி எஃப், இ எல் எஸ் எஸ் முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் சேத்து சுலபமா 1.5 லட்சம் வந்து விடும் பலருக்கும். இந்நிலையில் அதிக ப்ரீமியம் கட்டினாலும் அது 80சி யின் உச்ச வரம்புக்கு மேல் போய் வரி விலக்குக்கு உபயோகமில்லாமல் போய் விடும். 15-20 ஆண்டுகளில் வீட்டுக்கடன் முடிந்து விடும் – அப்போது இன்சூரன்ஸ் ப்ரீமியம் வருமானவரி விலக்கு பெற உபயோகமாக இருக்கும்.

எனவே ஏஜெண்ட்களின் சேல்ஸ் டாக்குக்கு மயங்காமல் பாலிசி காலம் முழுதும் ஒவ்வொரு ஆண்டும் ப்ரீமியம் கட்டும் முறையைத் தேர்ந்தெடுப்பதே நல்லது

சேமி.. அப்புறம் செலவழி

Image may contain: textவருமானத்தில் அடிப்படை செலவுகள் போக சேமிக்கும் விதம் குறித்து ரொம்ப சிம்பிளா விளக்கும் படம்

சேமிப்புக்கு அப்புறம்தான் செலவு போன்ற Utopian நிலை அனைவராலும் கடைபிடிக்கமுடியாது. குறைந்த பட்சம் அடிப்படைத் தேவைகளுக்கு அப்புறம் மிச்சமிருக்கும் பணத்தை இப்படி செலவு செய்யலாம்

1. மிக அதிக வட்டி கொடுக்கும் க்ரெடிட் கார்ட் , பர்சனல் லோன் போன்ற கடன்களை அடைக்கணும். 6 மாத செலவுக்கான எமெர்ஜென்சி ஃபண்ட் கையில் இல்லேன்னா அதுக்கு ஒதுக்கணும் மற்றும் ரிட்டையமெண்ட் சேமிப்புக்காக என்ன திட்டத்தில் சேமிக்கிறீர்களோ அதுக்கு ஒதுக்கணும்

2. இரண்டாம் கட்டமாக காப்பீடும் வீட்டுக் கடன் போன்ற நல்ல கடன்களுக்கான தொகையைக் கட்டுதல்

3. இதற்கப்புறம்தான் பிற சேமிப்புகளுக்கு நிதி ஒதுக்கணும்

4. இவை அனைத்தும் டார்கெட் லெவலில் செலவழித்த / சேமித்தபின்னரே அத்தியாவசியம் இல்லாத ஆனால் நீங்க விரும்பும் விசயங்களுக்குச் செலவு செய்யணும். சினிமா போறது, உல்லாசப் பயணம், புது மாடல் செல்போன் போன்றவை இதில் அடங்கும்.

ஓய்வு கால திட்டமிடாமல், வருமானத்தின் 20 மடங்கு ஆயுள் காப்பீடு எடுக்காமல், அவசரத் தேவைக்கு கையிருப்பு வைக்காமல் புதுமாடல் செல்போன் வாங்கிக் கொண்டேயிருந்தால் அந்த போனுக்கு ரீசார்ஜ் பண்ணக்கூட வழியில்லாமல் போகக்கூடும்

வருமானத்தில் அடிப்படை செலவுகள் போக சேமிக்கும் விதம் குறித்து ரொம்ப சிம்பிளா விளக்கும் படம்

சேமிப்புக்கு அப்புறம்தான் செலவு போன்ற Utopian நிலை அனைவராலும் கடைபிடிக்கமுடியாது. குறைந்த பட்சம் அடிப்படைத் தேவைகளுக்கு அப்புறம் மிச்சமிருக்கும் பணத்தை இப்படி செலவு செய்யலாம்

1. மிக அதிக வட்டி கொடுக்கும் க்ரெடிட் கார்ட் , பர்சனல் லோன் போன்ற கடன்களை அடைக்கணும். 6 மாத செலவுக்கான எமெர்ஜென்சி ஃபண்ட் கையில் இல்லேன்னா அதுக்கு ஒதுக்கணும் மற்றும் ரிட்டையமெண்ட் சேமிப்புக்காக என்ன திட்டத்தில் சேமிக்கிறீர்களோ அதுக்கு ஒதுக்கணும்

2. இரண்டாம் கட்டமாக காப்பீடும் வீட்டுக் கடன் போன்ற நல்ல கடன்களுக்கான தொகையைக் கட்டுதல்

3. இதற்கப்புறம்தான் பிற சேமிப்புகளுக்கு நிதி ஒதுக்கணும்

4. இவை அனைத்தும் டார்கெட் லெவலில் செலவழித்த / சேமித்தபின்னரே அத்தியாவசியம் இல்லாத ஆனால் நீங்க விரும்பும் விசயங்களுக்குச் செலவு செய்யணும். சினிமா போறது, உல்லாசப் பயணம், புது மாடல் செல்போன் போன்றவை இதில் அடங்கும்.

ஓய்வு கால திட்டமிடாமல், வருமானத்தின் 20 மடங்கு ஆயுள் காப்பீடு எடுக்காமல், அவசரத் தேவைக்கு கையிருப்பு வைக்காமல் புதுமாடல் செல்போன் வாங்கிக் கொண்டேயிருந்தால் அந்த போனுக்கு ரீசார்ஜ் பண்ணக்கூட வழியில்லாமல் போகக்கூடும்

பங்குச் சந்தை முதலீடு ரிஸ்க்கா? ரஸ்க்கா?

Risk text stacked upward on coins with cool image temperature as High Risk Business Conceptபங்குச் சந்தை முதலீடு ரிஸ்க் என்போருக்கு நான் சொல்வதும் இதுதான்.

ஒன்றல்ல, இரண்டு – மூன்றாண்டுகளுக்குள் தேவைப்படும் பணத்தை பங்குச் சந்தையில் போடாதீர்கள். பையன் 10 வகுப்பில் இருக்கான், இன்னும் இரண்டே வருசத்தில் காலேஜ் சேக்கத் தேவைப்படும் பணத்தை நேரடி பங்கிலோ ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டிலோ வைக்காதீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் நேரம் மார்க்கெட் இறக்கத்தில் இருக்கலாம்.

இதை விட பெரிய ரிஸ்க் என்ன தெரியுமா? 10 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படாத பணத்தை வைப்பு நிதியில் வைப்பதுதான். 40 வயதில் இருக்கும் ஒருவர் ரிட்டையர்மெண்ட்டுக்காக வைத்திருக்கும் பணத்தை 20 ஆண்டுகள் வைப்பு நிதியில் வைத்திருந்தால் பணம் தேய்ந்து போகும். எப்படி என்கிறீர்களா? வைப்பு நிதியில் 1 லட்சம் 20 ஆண்டுகள் கழித்து தோராயமாக 3 லட்ச ரூபாயக இருக்கும். இன்று 1 லட்ச ரூபாய்க்கு வாங்கக்கூடிய பொருள் அல்லது சேவையின் விலை 20 ஆண்டுகள் கழித்து 3 லட்சத்தைவிட அதிகமாக இருக்கும். அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்து இன்ஃப்ளேசனை விட அதிகமாக வளர்ச்சி காண வைப்பது புத்திசாலித்தனம்

வளமான வாழ்க்கைக்கு….யூ எல் ஐ பி திட்டங்கள்

வளமான வாழ்க்கைக்கு உதவும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் வழங்கு யூ எல் ஐ பி திட்டங்கள்

நண்பர் ஒருத்தர் எச் டி எஃப் சியின் ULIP (Unit Linked Insurance Policy) யில் “முதலீடு” செய்துள்ளார். அவருக்கு எச் டி எஃப் சி நிறுவனம் அனுப்பிய அரையாண்டு கட்டணம் குறித்த அறிக்கை இது.

நண்பர் “முதலீட்டு” திட்டத்தில் அவருக்கு 3.6 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடும், வானளாவிய வருமானமும் கிடைக்கும் என சொல்லியிருக்கின்றனர். அதற்கு அவர் கட்டிய தொகை ஆண்டுக்கு 36,000 ரூபாய்கள்

மாதத்துக்கு அவர் செலுத்தும் 3000 ரூபாய் எப்படி போகிறது என்று பாருங்கள்
ஒரு ஃபண்டுக்கு பாலிசி சார்ஜஸ் 132 ரூபாய் / மாதம்
அடுத்த ஃபண்டுக்கு பாலிசி சார்ஜ் 148 / மாதம்
மோர்ட்டாலிட்டி சார்ஜ் (ஆயுள் காப்பீடு) 90 ரூ
பாலிசி அட்மினிஸ்ட்ரேசன் சார்ஜ் 151 ரூ
ஆக மொத்தம் எச் டி எஃப் சி எடுத்தது மாதத்துக்கு 521 ரூபாய்.

எச் டி எஃப் சிக்கு போகலேன்னலும் வரி 37 ரூபாய்
ஆக மொத்தம் நண்பர் செலுத்தும் 3000 ரூபாயில் கிட்டத்தட்ட 560 ரூபாய் கோவிந்தா. கட்டும் பணத்தில் 18.5% போக மிச்சம் தான் உண்மையிலேயே மியூச்சுவல் ஃபண்டுக்கு போயிருக்கு.

இதுல இன்னோரு கொடுமை இருக்கு. அவருக்கு வழங்கப்படும் காப்பீடு வெறும் 3.6 லட்சம் மட்டுமே, அதற்கு அவர் தரும் விலை மாதம் 90 ரூபாய் அதாவது ஆண்டுக்கு 1080 ரூபாய். அதை அப்படியே ஒரு கோடிக்கு மாற்றினால் ஆண்டுக்கு 30,000. அதை விட குறைந்த தொகையில் அவர் 1 கோடிக்கு டெர்ம் பாலிசி எடுத்திருக்க முடியும்.

வெறும் 3.6 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீட்டை வச்சி குடும்பம் ஒராண்டு கூட ஓட்ட முடியாது. முதலீடாகப் பார்த்தாலும் இவ்வளவு கட்டணங்கள் போக மிச்சத்தை வச்சி பெரிய வளர்ச்சியும் இருக்காது. காப்பீட்டையும் முதலீட்டையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் டெர்ம் பாலிசி எடுத்து விட்டு முதலீட்டுக்கு நல்ல மியூச்சுவல் ஃபண்ட்களில் நேரடியாக முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்.

வளமான வாழ்க்கைக்கு யூ எல் ஐ பி என்று ஆரம்பத்தில் சொன்னேன், அங்க அதை உங்களுக்கு விற்கும் ஏஜெண்ட்டின் வளமான வாழ்க்கைக்கு என்று சொல்ல மறந்து விட்டேன்

அப்பார்ட்மெண்ட் எனும் மோசமான முதலீடு

Image result for images for do not invest in real estateஅப்பார்ட்மெண்ட் எனும் மோசமான முதலீடு

இந்தியர்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு தங்கத்தின் மேலும் வீட்டின் மீதும் தீராக் காதல் எப்போதும் உண்டு. ஒரு காலத்தில் இவை இரண்டும் சிறந்த முதலீடுகளாக இருந்தன. வீடு இன்னும் நல்ல முதலீடா?

எனக்கு ஓரளவுக்குப் பரிச்சயமான சென்னை ரியல் எஸ்டேட் மார்க்கெட்டை அடிப்படையாக வைத்து இதை எழுதுகிறேன்.

இது நீங்க வசிக்கும் Primary House பற்றியல்ல, சொந்த வீடு இருக்கும் போது வாடகைக்கு விட கடனில் ரெசிடெண்ட் இந்தியர்கள் வாங்கும் மற்றும் வெளிநாட்டில் சம்பாதிப்பதை எப்படி முதலீடு செய்வது என்று புரியாமல் சென்னையில் என் ஆர் ஐக்கள் அப்பார்டெமெண்ட் வாங்குவதையும் பற்றியது.

சொந்த வீடு என்பது எமோசன் சம்பந்தப்பட்டது. எமோசனும் முதலீடும் ஜன்மவிரோதிகள். வாடகை வீட்டில் இனி வசிக்க விருப்பமில்லை, சொந்த வீடு வேணும்னு நினைச்சா தாராளமா வாங்குங்க, ஆனா அதில் Return on Investment பாக்காதீங்க, இருக்காது.

சென்னையில் தனிவீடு வாங்குவதெல்லாம் இனி எட்டாக்கனி, பெரும்பாலானோர்களால் வாங்க முடிவது அப்பார்ட்மெண்ட்களே. நல்ல ரெசிடென்சியல் ஏரியாக்கள் என்று சொல்லப்படும் வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர் அல்லது ஓ எம் ஆர் சாலை போன்ற இடங்களில் 2 பெட்ரூம் அப்பார்மெண்ட்டின் தோராய விலை 40 லட்சரூபாய். இவ்வளவு விலை கொடுத்து ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி வாடகைக்கு விடுவது லாபகரமாக இருக்குமா? இந்த ஏரியாக்களில் 2 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட்கள் 10ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம், வெகு சில இடங்களில் 15 ஆயிரம் வரை வாடகைக்குப் போகிறது. என் அனுபவத்தில் 15 ஆயிரம் வாடகை பெறக்கூடிய அப்பார்ட்மெட்ன் 40 லட்சத்துக்கு கிடைக்காது. கணக்கிடுதலுக்கு 40 லட்சம் விலை மற்றும் அதிக பட்ச வாடகையான 12 ஆயிரத்தை கணக்கில் எடுக்கிறேன்.

கடன் வாங்கி முதலீடு செய்யும் போது

வீட்டின் விலை 40 லட்சம்
கையிலிருந்து கொடுக்க வேண்டியது 20% அதாவது 8 லட்சம்
வீட்டுக்கடன் 80% அதாவது 32 லட்சம்
வீட்டுக் கடனுக்கு மாதாந்திரத் தவணை ரூ 27,740
(8.5% வட்டி விகிதம், 20 ஆண்டுகாலம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டது)
வாடகை 12 ஆயிரம் போக, மாதாமாதம் 15,740 ரூபாய் நீங்க கையிலேருந்து போட்டு தவணை கட்டணும்.

வாடகை ஏறுமே என்று சிலர் கேட்கலாம். அது ஓரளவுக்கு உண்மையும் கூட.
அது போலவே வட்டியும் ஏறக்கூடும், வாடகைப் பணம் முழுமையாக வருமானவரிக்கு உட்பட்டது, பங்குச் சந்தை முதலீட்டுக்கு வரும் லாங் டேர்ம் கேபிடல் கெயின் வருமான வரியை விட கம்மியே. வாடகை வீட்டின் Occupancy Rate 100% இல்லாமல் போகக்கூடும், வீட்டுக்கு வரி கட்டணும், மராமத்து செலவுகள் வரக்கூடும். இப்படி பல காரணிகளை வைத்து துல்லியமாக கணக்கிடுதல் சாத்தியமில்லை. இவையனைத்தையும் கவனத்தில் கொண்டு மாதம் 15 ஆயிரத்துக்குப் பதில் 10 ஆயிரம் கையிலேருந்து போகும் என்று கணக்கிட்டேன்.

20 ஆண்டுகள் மாதம் 10,000 நல்ல வகையில் முதலீடு செய்தால் வெறும் 8% வளர்ச்சியில் அதன் மதிப்பு 59 லட்சமாக இருக்கும்
முதலில் போட்ட 8 லட்சம் வெறும் 8% வளர்ச்சியில் 20 ஆண்டுகள் கழித்து முப்பத்தி ஏழேகால் லட்சமாக இருக்கும். ஆக மொத்தம் வீடு வாங்காமல் இருந்திருந்தால் 20 ஆண்டுகள் கழித்து உங்க கையில் 97 லட்ச ரூபாய் இருக்கும். 9% வளர்ச்சி என்று கணக்கிட்டால் ஒரு கோடிக்கு மேல் வரும்

கடன் வாங்காமல் கையிருப்பு 40 லட்சம் போட்டு வீடு வாங்கினால்

இது ரொம்ப சிம்பிள். 20 ஆண்டு காலம் அந்த பணத்தை வேறு வகையில் முதலீடு செய்தால் வெறும் 8% கூட்டு வட்டியில் 20 ஆண்டுகள் கழித்து அது 1 கோடியே 86 லட்சமாக இருக்கும்.

இந்த அளவுக்கெல்லாம் இன்று 40 லட்சத்துக்கு வாங்கும் அப்பார்ட்மெண்ட் அப்ரிசியேட் ஆக வாய்ப்பில்லை என்று கருதுகிறேன்.

நிலம் தொடர்ந்து அப்ரிசியேட் ஆகக்கூடிய கமாடிட்டி, அப்பார்ட்மெண்ட் ஒரு டிப்ரிசியேட்டிங் கமாடிட்டி. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிடம் டிப்ரிசியேட் ஆகத் தொடங்கும். 20-25 ஆண்டுகள் ஆன பல அப்பார்ட்மெண்ட்கள் இப்போது இடித்து விட்டு மீண்டும் கட்டும் நிலையில் உள்ளன. அப்போதெல்லாம் 2400 சதுர அடி நிலத்தில் 3000 முதல் 3600 சதுர அடி கட்டிடம் கட்டப்பட்டது, இப்போது 4800 சதுர கட்ட அரசு அனுமதிக்கிறது. இதனால் நிறைய பில்டர்கள் பழைய அப்பார்ட்மெண்ட்களை இடித்து ஓனர்களுக்கு அதிக செலவில்லாமல் புது வீடு தர முடிகிறது. இப்போது கட்டப்படும் 4800 சதுர அடி கொண்ட கட்டிடங்கள் 20-25 ஆண்டுகள் கழித்து என்னவாகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

வாடகைக்கு விடும் எண்ணத்துடன் அப்பார்ட்மெண்ட்களில் முதலீடு செய்வது Is not Financially Prudent any longer.

Employee Provident Fund எனும் சேமநல நிதி

Related imageEmployee Provident Fund – ஊழியர்கள் சேம நல நிதி வட்டி விகிதம் 8.55% லிருந்து 8.65% ஆக உயருகிறது.

சென்ற ஆண்டு 8.55% ஆக இருந்த சேம நல நிதி வட்டி 8.65% ஆக உயருகிறது.

வங்கிகளின் வைப்புநிதி வட்டி 6-7% அளவில் இருக்கிறது. இருவாரங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை 25 பாயிண்ட்கள் குறித்திருக்கும் நிலையில் வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது பி எஃப் வட்டி விகித உயர்வு மாத வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

உங்க பி எஃப் அக்கவுண்டில் 10 லட்ச ரூபாய் இருந்தால் சென்ற ஆண்டை விட இவ்வாண்டு 1000 ரூபாய் அதிக வட்டி கிடைக்கும்.

சேம நல நிதி நிறுவனம் வரும் தொகையில் ஒரு பகுதியை பங்குச் சந்தை முதலீடுகளில் வைத்தாலும் முழுப்பணத்துக்கும் 8.65% வட்டி வழங்கும். இதை இன்னும் விரிவுபடுத்தி பயனர்கள் தம்முடைய பணத்தில் எத்தனை சதவீதம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்யும் வசதியை வழங்க இருக்கிறது.

சேமநல நிதியில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்

1. நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு அதாவது மாதாந்திர சம்பளத்திலிருந்து வரும் பங்களிப்புக்கு செக்சன் 80சி யின் கீழ் வருமானவரி விலக்கு உண்டு

2. வரும் வட்டிக்கும் வருமான வரி கிடையாது

3. பேசிக் பே எனும் அடிப்படை சம்பளத்தின் 12% நீங்கள் சேமித்தால் நீங்கள் வேலைசெய்யும் நிறுவனமும் 12% அளிக்க வேண்டும். நீங்க 12% மேல் சேமித்தாலும் நிறுவனம் 12% மட்டுமே அளிக்கும்

4. நிறுவனம் அளிக்கும் 12 % இல் 8.33% EPS – எம்ப்ளாயி பென்சன் திட்டத்துக்குப் போகும். இதிலிந்ந்து 58 வயதுக்கு அப்புறம் பென்சன் வழங்கப்படும்

5. நிறுவனம் வழங்கும் 12% லிருந்து 0.5% ஆயுள் காப்பீட்டுக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது, இதிலிந்து 2.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஆயுள் காப்பீடும் வழங்கப் படுகிறது

6. இ பி எஃப்பில் நீங்கள் செலுத்தும் பணம் வருமான வரி ஏதும் இல்லாமல் வளந்து கொண்டே வரும். இதனை நீங்க ரிட்டையர் ஆகும் போது பெற்றுக் கொள்ளலாம்

7. பிள்ளைகளின் கல்வி, திருமணம், வீட்டுக் கடன் போன்ற காரணங்களுக்காகத் தேவைப்படும் போது சேமநல நிதியிலிருந்து பணத்தை எடுக்க முடியும்

8. வேலையிழப்பு ஏற்பட்டால் இருக்கும் தொகையிலிந்து 75% வரை எடுக்க முடியும்

9. மத்திய அரசின் உத்தரவாதம் இருப்பதால் இது மற்ற எந்த முதலீட்டையும் விட அதிக பாதுகாப்பானது

கட்டும் பணத்துக்கும் வருமான வரி விலக்கு, அது தரும் வட்டிக்கும் வருமான வரி விலக்கு, 8.65% வட்டி, பாதுகாப்பானது, குறைந்த செலவில் ஆயுள் காப்பீடு எல்லாமே இதுல இருக்கு. பொதுவா காப்பீட்டு நிறுவனங்களின் எண்டோமெண்ட் பாலிகள் 5% அளவிலேயே ரிட்டர்ன் அளிக்கின்றன, அவற்றில் ஒரு போதும் பெரிய அளவு காப்பிடு (சம் அஸ்யூர்ட்) பெற முடியாது. அப்புறம் நான் என்னதுக்கு இந்த ஜீவன் டேஷ் பாலிசில பணம் போடணும்? அதுக்குப் பதிலா குறைந்த செலவில் கோடி ரூபாய்க்கு டெர்ம் பாலிசி எடுத்துட்டு முதலீட்டுக்கு மியூச்சுவல் ஃபண்டையோ அல்லது எம்ப்ளாயி ப்ராவிடெண்ட் ஃபண்டையோ அல்லது இரண்டையுமோ தேர்ந்தெடுக்கலாமேன்னு நினைக்கறீங்களா? அதைத்தான் நானும் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்.

வீட்டுக் கடனை சீக்கிரம் முடிக்கலாமா?

Image result for images for home loan preclosureசீக்கிரமே வீட்டுக் கடனை முடிச்சிடணும் என்பது தமிழகம் மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலகளாவிய அளவில் பெரும்பான்மை மக்களின் ஆசை.

வீட்டுக் கடனை சீக்கிரம் அடைத்தல் நல்லதா? அல்லது சர்ப்ளஸ் பணத்தை முதலீடு செய்வது நல்லதா என்பது நீண்ட விவாதத்துக்கு உரியது, அது இப்போது வேண்டாம். கடனை சீக்கிரம் முடிக்க நினைப்போருக்கான சிறு டிப் இது.

கையில் சில பல லட்சங்கள் சேர்ந்த பின் அடைக்கலாம் என்று காத்திருக்காமல் எப்படி சிறுகச் சிறுக அடைக்கலாம் என்று விளக்குகிறது இப்படம்

உதாரணத்துக்கு 50 லட்ச ரூபாய் வீட்டுக்கடன் 25 ஆண்டு காலத்துக்கு எடுத்திருக்கீங்கன்னு வச்சிக்குவோம்.

எவ்வித மாற்றமும் செய்யாமல் இ எம் ஐ மாதா மாதம் செலுத்தி வந்தால் 25 ஆண்டுகளில் கடன் முடியும்

11 மாதங்கள் குறிப்பிட்ட இ எம் ஐ மட்டும் செலுத்தி விட்டு ஒரே ஒரு மாதம் மட்டும் இரட்டிப்பாகக் கட்டினால் ( ஒரு மாதத் தவணை கூடுதல்) 19 ஆண்டுகள் 3 மாதத்தில் கடன் முடியும்

உங்க மாதத்தவனை 50 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். முதலாம் ஆண்டு முடிவில் கிடைக்கும் சம்பள உயர்வை முழுக்க செலவிடாமல் 2ம் ஆண்டு மாதத் தவணையை 5% உயர்த்தி 52,500 என்று அளவில் கட்ட வேண்டும், அடுத்த ஆண்டு அதிலேருந்து ஒரு 5% உயர்த்தி 55125 ரூபாய் இப்படியே உயர்த்தி வந்தால் 13 ஆண்டுகள் 3 மாதத்தில் கடன் முடிந்து விடும்

மேலே சொன்ன அதே முறையில் 5% க்கு பதில் ஒவ்வொரு ஆண்டும் 10% உயர்த்தி தவணையை கட்டி வந்தால் 25 ஆண்டுகால கடன் வெறும் 10 வருடம் 2 மாதங்களிலேயே முடிந்து விடும்.

ஒவ்வொரு ஆண்டும் தவணையை 10% உயர்த்துவது என்பது வெகு சிலரால் மட்டுமே முடியும், எல்லா ஆண்டும் உயர்த்த முடியாவிட்டாலும் பல ஆண்டுகள் சென்ற ஆண்டை விட 5% பலரால் உயர்த்த முடியும்.

இதில் எதுவுமே முடியாவிட்டாலும் ஆண்டுக்கொரு முறை போனஸிலிருந்தோ சில்லரை சேமிப்பிலிருந்தோ ஒரு மாதத் தவணையை அதிகமாக பெரும்பான்மை மக்களால் கட்ட முடியும்.

உங்க வங்கி மாதாந்திரத் தவணையை மாற்றி அமைக்க தயாராக இல்லையென்றால், அந்தப் பணத்தைச் சேர்த்து வைத்து ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறைகளோ அசலுக்கென தனியாக செலுத்தி வரலாம். 50 ஆயிரம் தவணையை 52500 ஆக உயர்த்த வங்கி ஒத்துக் கொள்ளாவிட்டால், 2500*12 = 30000 ரூபாயை தனியாக ஒருமுறை செலுத்தலாம்.

இது வெறும் கான்செப்ட்தான், உங்களால் எவ்வளவு முடியுமோ அதை அவ்வப்போது அசலுக்காக செலுத்தி வந்தால் நீங்கள் வங்கிக்குத் தரும் வட்டியும் கணிசமாகக் குறையும், வீடும் விரைவிலேயே உங்களுடையதாகும்.

கந்தனின் கவனம் கவட்டையில் என்பது போல் எங்க சுத்தினாலும் கவனம் காப்பீட்டிலேயே இருக்கும். வீட்டுக் கடன் முடியும் வரை கடன் தொகைக்கு ஈடாக ஒரு டெர்ம் பாலிசி எடுத்து வைங்க… குடும்பத் தலைவர் திடீரென இறக்க நேரிட்டால் குடும்பம் வீட்டை இழக்க நேரிடாமல் இருக்க அது உதவும்.

பிற்சேர்க்கை : எது எப்படி சாத்தியம்? நீங்க கட்டும் மாதாந்திரத் தவணையில் பெரும் பகுதி வட்டிக்கும் சிறு தொகை முதலுக்கும் போகும் (ஆரம்ப காலங்களில்), அதனால் முதல் அதிகம் குறையாது. அடிஷனல் பேமெண்ட் முழுக்க அசலுக்குப் போவதால், அசலும் குறையும் அதனால் வட்டியும் குறையும், கடனும் சீக்கிரம் முடியும். முதல் ஆண்டு 50 லட்சத்துக்கு வட்டி கட்டுவீங்க, ஆண்டு முடிவில் தோராயமா 49.5 லட்சம் இருக்குன்னு வைங்க, அதுக்கு வட்டி கேல்குலேட் செய்வாங்க, டிசம்பரில் 50000 அடிஷனல் பேமெண்ட் பண்றீங்கன்னு வைங்க, 2ம் ஆண்டு 49 லட்சத்துக்குத்தான் வட்டி வரும். இது இப்ப கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், சிஸ்டத்தில் கேல்குலேட் ஆகிக்கிட்டே இருக்கும் லோன் சீக்கிரம் முடிஞ்சிடும்

டெர்ம் பாலிசி – பொதுவான சந்தேகங்கள்

Related imageஆயுள் காப்பீட்டுக்கு டெர்ம் பாலிசி எடுக்கும் போது பொதுவா பயனர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்

1. எவ்வளவு காலத்துக்கு காப்பீடு எடுப்பது?

காப்பீடு என்னவோ பெருமாள் கோவில் பிரசாதம் போல எவ்வளவு நாள் கிடைக்குதோ அவ்வளவு நாள் எடுக்கலாம்னு நினைக்கறாங்க. தான் எப்போது இறந்தாலும் பணம் கிடைத்தால் லாபம் என்று நினைப்பது தவறு. இப்படி நினைக்கப் போயித்தான் பலரும் ஹோல் லைஃப் பாலிசி எடுத்து டெர்ம் பாலிசியை விட மிக அதிக ப்ரீமியம் கட்டிக்கிட்டு இருக்காங்க.
காப்பீடு என்பது Income Replacement என்று புரியும் போது ரிட்டையர் ஆகும் வயது வரை காப்பீடு எடுத்தால் போதுமானது என்ற தெளிவு பிறக்கும்.
ரிட்டையர் ஆனப்புறம் (வருமானம் ஈட்டாத நிலையில்) காப்பீட் வீண் செலவே.

30 வயதில் இருக்கும் ஒருவர் தன்னுடைய ரிட்டையர்மெண்ட் வயதான 65 வரை காப்பீடு வேண்டி 35 ஆண்டுகாலம் எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 60 வயதிலேயே அவருடைய பிள்ளைகள் படிப்பை முடிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டா, அப்போது அவர் காப்பீட்டுக்கு ப்ரீமியம் செலுத்துவதை நிறுத்தி விடலாம்.

2. ப்ரீமியம் செலுத்தும் ஃப்ரீக்வன்சி

காலாண்டுக்கு ஒருமுறையோ அரையாண்டுக்கு ஒரு முறையோ ப்ரீமியம் செலுத்துவதை விட ஆண்டுக்கொரு முறை ப்ரீமியம் செலுத்தும் போது ப்ரீமியத்தில் டிஸ்கவுண்ட் கிடைக்கும், அதைத் தெரிவு செய்வது நல்லது

3. எவ்வளவு காப்பீடு எடுப்பது?

பொதுவா ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு சிறந்த கவரேஜ், 10 மடங்கு அடிப்படைத் தேவை என்பது உலக வழக்கு.

காப்பீட்டின் அளவை முடிவு செய்வதற்கு முன்னால் இவற்றை கன்சிடர் செய்வது நலம்

கடன்கள் : ஒரே ஒரு வருமானத்தை நம்பி இருக்கும் குடும்பமாக இருக்கும் பட்சத்தில் குடும்பத்தலைவருக்கு எடுக்கும் காப்பீடு அவர் வைத்திருக்கும் அனைத்துக் கடன்களையும் கவர் செய்யும் வகையில் இருக்க வேண்டும்

கல்விச் செலவு : உங்க பிள்ளைகளின் வயது, அவர்கள் கல்லூரிப்படிப்பை முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளன, அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்

தற்போதைய லைஃப் ஸ்டைல் :
குடும்பத் தலைவர் தீடிரென இறக்க நேரிட்டாலும் குடும்பம் தற்போதைய லைஃப் ஸ்டைலை தொடர எவ்வளவு பணம் தேவைப்படும் என்று பாருங்கள்.

எதிர்காலத்தில் வரக்கூடிய மாற்றங்கள்

இது கொஞ்சம் கடினமான விசயம். தற்போது உங்க குடும்பத்தின் மாதாந்திர செலவு 25,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம், ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய் தேவை. நீண்ட காலத்துக்கு இன்ஃப்லேசனை கணிப்பது கடினம். விலைவாசி ஆண்டுக்கு 6 முதல் 8% வரை ஏறும் வைத்துக் கொள்ளலாம். சராசரியாக 7% விலைவாசி உயர்ந்து கொண்டே போனால் 20 ஆண்டுகள் கழித்து இதே லைஃப் ஸ்டைலுக்கு ஆண்டுக்கு 11 லட்சரூபாய்க்கு மேல் தேவை. பிள்ளைகளின் தற்போதைய வயது, அவர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பதையும் கணக்கிட்டு காப்பீட்டின் அளவை முடிவு செய்யுங்கள்.

கடன்கள் கம்மியாகவும், பிள்ளைகள் விரைவில் வேலைக்குப் போகும் சூழலும் இருப்போர் ஆண்டு வருமானத்தின் 10-15 மடங்கும் மற்றோர் ஆண்டு வருமானத்தின் 15-20 மடங்கும் காப்பீடு எடுப்பது நல்லது.

4. எந்த நிறுவனத்தில் எடுப்பது?

அரசு நிறுவனமான எல் ஐ சி யிலோ (இடெர்ம் பாலிசி) தனியார் நிறுவனங்களான ஆதித்ய பிர்லா, ஐசிஐசிஐ, எச் டி எஃப் சி, ஏகான் போன்ற நிறுவனம் ஒன்றிலோ எதில் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

5. Premium திரும்பக் கிடைக்கும் பாலிசிகள் எடுக்கலாமா?

வேண்டாம், அந்த மாதிரி பாலிசிகளின் ப்ரீமியம் அதிகமாக இருக்கும். உங்களுக்குத் தேவையான அளவு காப்பீடு (Sum Assured) குறைவாக எடுக்க நேரிடும், மேலும் உங்க காசை வாங்கி உங்களுக்கே திருப்பித் தருவாங்க. அதற்கு பதில் நல்ல முதலீடு செய்யலாம்

ELSS (Equity Linked Savings Scheme) அப்படின்னா என்ன?

Image may contain: textULIP, ELSS மற்றும் வருமானவரி சேமிப்பு

இந்தப்படம் சொல்லும் சில கருத்துகள்

1. யூ எல் ஐ பி திட்டம் மோசமானது.
2. அதை மியூச்சவல் ஃபண்ட் முதலீடு + இலவச காப்பீட்டு என்பது போல் சொல்லப்படுவதை நம்பி முதலீடு செய்யக்கூடாது
3. வங்கிக்குப் போனால் சேமிப்பு, கடன், லாக்கர் இவை குறித்து மட்டும் பேசி விட்டு வந்து விட வேண்டும். வங்கியில் யாராவது முதலீடு குறித்தோ காப்பீடு குறித்தோ பேசினால், காதிலேயே போட்டுக் கொள்ளாமல் ஓடி வந்து விட வேண்டும்.

சரி யூ எல் ஐ பி மோசம், அப்ப ELSS?

ELSS (Equity Linked Savings Scheme) அப்படின்னா என்ன? அதில் எல்லாரும் முதலீடு செய்யலாமா?

ELSS என்பது லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் போன்று மற்றொரு மியூச்சுவல் ஃபண்ட் வகை.
இவ்வகை ஃபண்ட்கள் பாண்ட் எனும் கடன் பத்திரங்களில் இல்லாமல் ஈக்விட்டி எனும் பங்குச் சந்தை முதலீட்டை அடிப்படையாகக் கொண்டவை (ஈக்விட்டி ஃபண்ட்ஸ்)

நெறய ஈக்விட்டி ஃபண்ட்ஸ் இருக்கே, இதிலென்ன வித்தியாசம்?
இரு முக்கிய வித்தியாசங்கள் உள்ளன – 1. இதில் செய்யும் முதலீட்டுக்கு செக்சன் 80சியின் கீழ் வரி விலக்கு உண்டு (மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்ட முதலீடுகளுக்கு கிடையாது) 2. இதில் செய்யும் முதலீட்டை 3 ஆண்டுகளுக்கு திரும்ப எடுக்க முடியாது. பொதுவா மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு இம்மாதிரி நிபந்தனை கிடையாது. ஓராண்டுக்குள் எடுத்தால் 1% கட்டணம் இருக்கக் கூடும் ஆனால் எடுக்கவே முடியாது என்று இருக்காது.

ELSS இன் சாதகங்கள் :
1. வருமான வரி விலக்கு : இதில் செய்யும் முதலீட்டுக்கு செக்சன் 80சி யில் விலக்கு உண்டு

2. மூன்றாண்டுகள் லாக் இன் இருப்பதால் ஃபண்ட் மேனேஜருக்கு சுதந்திரம் அதிகம். முதலீட்டாளர் எடுக்கக்கூடும் என்று எப்போதும் நிறைய கேஷ் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீண்ட நாள் முதலீட்டுக்கு உகந்த பங்குகளை அவர் வாங்க முடியும்.

ELSS இன் பாதகங்கள்:
1. மூன்றாண்டுகள் முதலீட்டை எடுக்க முடியாது

2. எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்யும் போது ஒவ்வொரு முதலீட்டுக்கும் முன்றாண்டு முடிந்த பின் தான் பணத்தை எடுக்க முடியும். உதாரணத்துக்கு வேறொரு ஃபண்டில் ஜனவரி 2016 முதல் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்த பணத்தை இப்போது மொத்தமாக எடுக்க முடியும், ஆனால் ELSS இல் ஜனவரி 2016 இல் முதலீடு செய்ததை மட்டுமே இப்போது எடுக்க முடியும் மார்ச் 2016 இல் முதலீடு செய்ததை ஏப்ரல் 2019இல் தான் எடுக்க முடியும்.

ELSS யாருக்கு ?
இது ஒரு நல்ல திட்டம் அதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் இது அனைவருக்குமானதல்ல

ஆண்டுக்கு 5 -6 லட்சரூபாய்க்கு அதிகமான வருமானம் இருந்து, செக்சன் 80சியில் 1.5 லட்சம் விலக்கு பெறும் அளவுக்கு பிற முதலீடுகள் இல்லாதவர்கள் இதில் முதலீடு செய்யலாம்

ஏற்கெனவே இன்சூரன்ஸ் ப்ரீமியம், சுகன்ய சம்ரிதி, பி பி எஃப் போன்றவற்றில் 1.5 லட்சம் முதலீடு செய்து விட்டிருந்தால் இதில் முதலீடு செய்வதன் மூலம் கூடுதல் வருமான வரி விலக்கு இருக்காது

80சி யில் இடம்பெறக்கூடிய முதலீடுகள் 1 லட்சம் இருந்தால் மிச்சம் 50 ஆயிரம் மட்டும் இதில் முதலீடு செய்யலாம்

வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள், 80சியின் முழுமைக்கும் வேறு முதலீடுகள் வைத்திருப்போர், ELSS இல் முதலீடு செய்யாமல் இருப்பது நலம். அதற்கு பதில் Flexibility கொண்ட மற்ற ஃபண்ட்களில் எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்யலாம்.

ELSS இல் ரிட்டர்ன்ஸ் நிச்சயம் என்றொரு தவறான நம்பிக்கை நிலவுகிறது. இது நிச்சயம் தவறு. மற்ற அனைத்து பங்குச் சந்தை முதலீடுகளைப் போல இதிலும் ரிஸ்க் உண்டு. உதாரணத்துக்கு ரிலையன்ஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் கடந்த ஆண்டு 24% வீழ்ச்சியடந்துள்ளது. 2017 இறுதியில் அக்கவுண்டில் இருந்த 10 லட்ச ரூபாய் 2018 இறுதியில் 7.6 லட்சமாக குறைந்திருக்கும். அது மீண்டு வர வாய்ப்புள்ளது என்றாலும், ELSS ஃபண்ட்கள் ஸ்திரமானவை என்பது வெறும் மாயையே.

இந்தக் கேட்டகரியில் எனக்குப் பிடித்த ஃபண்ட்கள் Axis Long Term Equity Fund – Direct Plan & Aditya Birla Sun Life Tax Relief 96 – Direct Plan – இதன் மூலம் நான் இவற்றைப் பரிந்துரைக்கவில்லை, எனக்குப் பிடித்தவை உங்களுக்கும் பிடித்திருந்தால், சுயமாக முடிவெடுத்து முதலீடு செய்யுங்கள்.