முதலீட்டில் Asset Allocation ஏன் அதிமுக்கியமானது?

No photo description available.முதலீட்டில் Asset Allocation ஏன் அதிமுக்கியமானது என்று நாள் முழுக்க பாடம் எடுக்கலாம் அல்லது மிக மிக எளிதாக இப்படி ஒரு படத்திலேயே விளக்கி விட்டுப் போகலாம்.

Franklin Templeton நிறுவனம் வெளியிட்ட இப்படத்தில் 1994ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் ஓவ்வொரு ஆண்டும் அமெரிக்க பங்குச் சந்தையில் எவ்வகைப் பங்குகள் (லார்ஜ் கேப், ஸ்மால் கேப், பாண்ட், பிற நாடுகளின் ஈக்விட்டி இன்ன பிற) முதலிடம் பெற்றன விளக்கப்பட்டிருக்கிறது.

94ம் ஆண்டு நம்பர் 1ஆக இருந்த லார்ஜ் கேப் அடுத்த ஆண்டே 4 வது இடத்துக்கு போய்விட்டது, அதை விட்ட முக்கியம் 94ம் ஆண்டு அதள பாதாளத்தில் இருந்த BRIC Equities அடுத்த ஆண்டே நம்பர் 1 இடத்துக்கு வந்திருக்கு. அது மட்டுமல்ல 20 ஆண்டுகளில் நான்கு முறை அமெரிக்க கடன் பத்திரங்கள் (பாண்ட்) முதலிடத்தில் வந்திருக்கின்றன, க்ளோபல் பாண்ட் ஒரு முறை முதலிடம். அதாவது 20 ஆண்டுகளில் 5 முறை (25%) பாண்ட்கள் ஈக்விட்டியை விட அதிக ரிட்டர்ன் கொடுத்திருக்கின்றன.

லார்ஜ் கேப்ல போட்டா அதிக ரிட்டர்ன் வராது ஆனா முதலுக்கு நஷ்டம் வராது ( 3 முறை டாப், 3 முறை நெகடிவ் ரிட்டர்ன்ஸ்) ஸ்மால் கேப்ல எப்போதும் 20% க்கு மேல ரிட்டர்ன்ஸ் வரும் (ஒரே ஒரு முறைதான் டாப்ல வந்திருக்கு, 3 முறை நெகடிவ் ரிட்டர்னும் கொடுத்திருக்கு) பாண்ட்கள் எப்போதும் பாதுகாப்பானவை – இவை போன்ற Myth களை இப்படம் உடைக்கிறது

முதலீட்டாளர்கள் செய்யவேண்டியது அவர்தம் வயது, முதலீட்டின் காலம், Risk Appetite இவற்றைக் கணக்கில் எடுத்து ஒரு Balanced Portfolio உருவாக்கி தொடர்ந்து முதலீடு செய்வதே.

லார்ஜ் கேப், மிட் கேப், மல்ட்டி கேப், பாண்ட் அல்லது ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் கொண்ட ஒரு முதலீட்டுத் தொகுப்பு (போர்ட்ஃபோலியோ) என்னைப் பொருத்தவரை ஒரு நல்ல போர்ட்ஃபோலியோ. இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குள் தேவைப்படும் பணத்தை ஈக்விட்டியில் வைக்காமல் இருப்பது நல்லது. அப்பணத்தை 4% வட்டி தரும் வங்கிக் கணக்கில் வைக்காமல் குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட்களிலோ Fixed Maturity Plan களிலோ முதலீடு செய்து வைக்கலாம்.

Equity Linked Savings Plan (ELSS Mutual Funds) வருமானவரி விலக்கு தேவைப்படுவோருக்கு மட்டுனாது. தேவைப்படுவோர் மேலே சொன்ன ஃபண்ட்களில் ஈக்விட்டி ஃபண்ட் ஒன்றிற்கு பதிலாகவோ அல்லது ஐந்தாவது ஃபண்டாகவோ இதைத் தெரிவு செய்யலாம். வருமானவரி விலக்கு குறிக்கோளாக இல்லாதோர் இதை விலக்குதல் நலம். ELSS Mutual Funds பற்றி அடுத்த போஸ்ட் ஓரிரு நாட்களில்….

புதிய தலைமுறையில் கேள்வி பதில்

Image may contain: 2 people, people smilingஎனக்கு நாற்பது வயது வரை கல்யாணப் பத்திரிக்கை தவிர வேறு எந்தப் பத்திரிக்கையிலும் பேர் வந்ததில்லை. சின்ன வயதில் கேள்வி பதில் பகுதிக்கு அனுப்பின எந்தக் கேள்வியும் பிரசுரமானதில்லை.

ஆயுள் காப்பீடு குறித்து புதிய தலைமுறை பத்திரிக்கைக்கு வந்த கேள்வி இது. அதுக்கு என் கிட்ட பதில் கிடைக்கும்னும் எப்படி நண்பர் Justin Durai நம்பினார்னு தெரியல. கேள்வி கூட பிரசுரம் ஆகாத எனக்கு பதில் சொல்லும் வாய்ப்பளித்த நண்பருக்கு நன்றி.

கேள்வி : எனக்கு வயது 40. இதுவரை இரண்டு மூன்று முறை வெவ்வேறு இன்ஸ்யூரன்ஸ் எடுத்தும் அதை தொடர முடியாமல் பாதியில் விட்டு அந்த பணம் வீணாகிவிட்டது. மூன்று வருடம் தொடர்ந்து கட்டாவிட்டால் பணம் திரும்ப கிடைக்காது என்று சொல்லிவிட்டார்கள். இப்போது எந்த இன்ஸ்யூரன்ஸும் என்னிடம் இல்லை. இனிமேல் எடுப்பது பயன் தருமா? அப்படியெனில் எந்த மாதிரியான இன்ஸ்யூரன்ஸ் (எண்டோன்மெண்ட், டேர்ம்) எடுப்பது? அல்லது சேமிப்பு, முதலீடு என்று யோசிப்பது நல்லதா? ஆலோசனை தாருங்கள்.

க. ராஜேஸ்வரி, சென்னை

என்னுடைய பதில்

அன்புள்ள ராஜேஸ்வரி

நாற்பது வயது என்பது வருமானம் ஈட்டுவோருக்கு ஆயுள் காப்பீடு அத்தியாவசியமான காலகட்டம். நாற்பதுகளில்தான் பொதுவாக கமிட்மெண்ட்ஸ் அதிகம் இருக்கும்.
பள்ளி செல்லும் பிள்ளைகள், வீட்டுக் கடன் இ எம் ஐ, வாகனக் கடன் என்று இந்த வயதில்தான் பொருளாதாரத் தேவை அதிகம் இருக்கும். நாற்பது முதல் ஓய்வுபெறும் வயது வரை
(60 அல்லது 65) இருக்குமாறு ஒரு ஆயுள் காப்பீடு நாப்பது வயதில் இருக்கும் வருமானம் ஈட்டும் ஒவ்வொருவருக்கும் அவசியம்,

ஒரு வண்டியை இன்சூர் செய்கிறீர்கள், அந்த ஆண்டில் வண்டிக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கும், விபத்து நேராவிட்டாலும் காப்பீட்டு நிறுவனம் பணம் தர
வேண்டும் என்று நீங்க எதிர்பார்ப்பதில்லை, ஆனால் ஆயுள் காப்பீடு எடுத்தவர் காப்பீட்டு காலத்தில் இறக்கா விட்டாலும் பணம் கிடைக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? காப்பீடு மற்றும்
முதலீட்டை போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள், இவை இரண்டும் வெவ்வேறு. ஆண்டுக்கு 6 லட்சரூபாய் வருமானம் உள்ள ஒருவர் திடீரென இறந்தால் அவர் குடும்பம் அதே லைஃப் ஸ்டைல்
தொடர குறைந்தபட்சமாக 60 முதல் 90 லட்ச ரூபாயாவது தேவைப்படும். அத்தொகை இருந்தால்தான் அதை பாதுகாப்பான முதலீட்டில் போட்டு அக்குடும்பம் வாழ முடியும். வெறும் பத்து
லட்சரூபாய்கள் காப்பிடு இருந்தால் அதை வைத்துக்கொண்டு 2-3 ஆண்டுகள் மட்டுமே குடும்பம் செலவுகளை சமாளிக்க முடியும். வருமானத்தின் 10 மடங்கு அளவுக்கு காப்பீட்டை எண்டோமெண்ட் பாலிசியில் பெற
முடியாது ஏனென்றால் அதற்கு ப்ரீமியம் மிக மிக அதிகமாக இருக்கும். இந்த அளவுக்கு காப்பீடு டெர்ம் பாலிசியில் மட்டுமே சாத்தியம்.

நீங்கள் வேலைக்குச் செல்கிறீர்களா? அல்லது சுயதொழில் மூலம் வருவாய் இருக்கிறதா என்று சொல்லவில்லை. உங்களுக்கு வருமானம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை
டெர்ம் பாலிசி எடுங்கள். அதை அரசு நிறுவனமான எல் ஐ சியிலோ அல்லது ஏதேனும் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்திலோ எடுக்கலாம். ஒரு வேளை நீங்கள் வேலைக்குப் போகாத
குடும்பத் தலைவியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கணவருக்கு டெர்ம் பாலிசி எடுங்கள். இதற்கு ப்ரீமியம் குறைவே. 40 வயது பெண்மணி, 50 லட்ச ரூபாய் காப்பீடு 25 ஆண்டு காலம் – இதற்கு
ஆகும் ஆண்டு ப்ரீமியம் வெறும் 14600 ரூபாய்தான். தனியார் நிறுவனங்களில் இதற்கும் குறைவாகவே இருக்கும். காப்பீட்டுக்கு டெர்ம் பாலிசி எடுத்து விட்டு சேமிப்புக்கு மியூச்சுவல் ஃபண்ட்,
வங்கி வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, தங்கமகள் சேமிப்புத் திட்டம், புதிய பென்சன் திட்டம், பி பி எஃப் போன்றவற்றை தேர்ந்தெடுங்கள். உங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

வருமானவரியில் மாற்றம்

Image may contain: 12 people, people smilingபுதியதலைமுறை பத்திரிக்கையில் வெளியான வருமானவரியில் மாற்றம் குறித்த கட்டுரை.
அதை அழகாகச் சுருக்கி வெளியிட்டமைக்கும், தொடர் ஆதரவுக்கும் நன்றி Justin Durai

ஐந்து லட்ச ரூபாய் வரை வருமானவரி விலக்கு வேண்டும் என்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது கேட்டவர் திரு. அருண் ஜெட்லி அவர்கள். அதற்கான அதிகாரம் அவர் கையில் வந்து நான்காண்டுகளுக்குப் பின்னரே அதற்கு வழி பிறந்திருக்கிறது.

நிதியமைச்சர் பியுஷ் கோயல் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனி நபர் வரி மற்றும் சேமிப்பு குறித்து இருக்கும் முக்கிய அம்சங்கள்

1. ஸ்டாண்டர்ட் டிடக்சன் ஆண்டுக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது
2. சொந்த உபயோகத்திற்கு இருக்கும் இரண்டாவது வீட்டிற்கும் விலக்கு
3. வங்கி வட்டிக்கு TDS Limit 10,000 லிருந்து 40,000ஆக உயர்த்தப் படுகிறது
4. வீட்டு வாடகைக்கு TDS Limit 1.8 லட்சத்திலிருந்து 2.4 லட்சமாக உயர்த்தப்படுகிறது (TDS பிடித்தம் செய்வதிலிருந்து மட்டுமே விலக்கு அளிக்கப் படுகிறது, வருமானவரியிலிருந்து அல்ல)
5. இவற்றையெல்லாம் விட அதிகம் பேசப்பட்டது 87A செக்சனில் அளிக்கப்பட்டுவந்த 2500 ரூபாய் வரி விலக்கு 12,500 ரூபாய உயர்த்தப் பட்டதுதான்.

ஆண்டுக்கு 5 லட்சம் சம்பாதிப்போர் மட்டுமல்ல, 8 முதல் 9 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்போர் கூட சரியான திட்டமிடல் இருந்தால் வருமானவரி ஏதும் செலுத்தாமல் இருக்க வகை செய்திருக்கிறது இந்த பட்ஜெட். நடுத்தர வர்க்கத்துக்கு பயனளிக்கும் அதே நேரத்தில் ஆண்டுக்கு 12 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கும் பணக்காரர்களுக்கு இதன் பயன் பெரும்பாலும் சென்று சேராத வகையில் இது நடைமுறைபடுத்தப் பட்டுள்ளது.

பொதுவாக வருமானவரியில் சலுகை மாற்றம் செய்ய விரும்பும் அரசுகள் அடிப்படை விலக்கு (Basic Exemption) அல்லது Standard Deduction இல் மாற்றம் செய்யும். அப்படிச் செய்கையில் அதன் பயன் அனைவரையும் சென்று சேரும். இம்முறை நடுத்தரவர்க்கத்துக்கு பயனளிக்கும் வகையில் வருமானவரி விலக்கு தர எண்ணிய இந்திய அரசு செக்சன் 87 A மாற்றி அமைப்பதன் மூலம் அதை சிறப்பான வகையில் செய்திருக்கிறது. Standard Deduction இல் வெறும் 10,000 ரூபாய் அளவுக்கே சலுகை தரப்பட்டிருக்கிறது. 2.5 லட்ச ரூபாய் அடிப்படை விலக்கில் (Basic Exemption) மாற்றம் ஏதும் செய்யப் படவில்லை.

ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுவோரின் வரி கணக்கிடல்
வருமானம் 5,00,000 ரூபாய்
அடிப்படை விலக்கு 2,50,000 ரூபாய்
வரிக்குட்பட்ட வருமானம் 2,50,000
வருமான வரி : 2.5 லட்ச ரூபாய் *5% = ரூபாய் 12,500
87 A இன் கீழ் விலக்கு ரூபாய் 12,500
நிகர வரி = 0

ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுவோரின் வரி கணக்கிடல்
வருமானம் 7,00,000 ரூபாய்
அடிப்படை விலக்கு 2,50,000 ரூபாய்
Standard Deduction 50,000 ரூபாய்
Section 80 C யின் கீழ் விலக்கு 1,50,000
வரிக்குட்பட்ட வருமானம் 2,50,000
வருமான வரி : 2.5 லட்ச ரூபாய் *5% = ரூபாய் 12,500
87 A இன் கீழ் விலக்கு ரூபாய் 12,500
நிகர வரி = 0

இது தவிர ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியத்துக்கு 50,000 ரூபாய் வரை விலக்கு
புதிய பென்சன் திட்டத்தில் செலுத்தும் 50,000 ரூபாய்க்கு விலக்கு
வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு விலக்கு
போன்றவற்றை கணக்கில் எடுத்தால் 9 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உடையோர் கூட வருமான வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கலாம்

நேரடியா அடிப்படை விலக்கை உயர்த்தாமல் இருப்பதன் மூலம் பயன் நடுத்தர வர்க்கத்துக்கு மட்டும் செல்வதை உறுதி செய்வதோடு இது வேறொரு பலனையும் தரக்கூடும். இனி வருமான வரி சேமிப்பதற்காகவாவது மக்கள் காப்பீடு (ஆயுள் மற்றும் ஹெல்த்) மற்றும் சந்தை முதலீடுகள் (NPS & ELSS) பக்கம் போவாங்க. இது நடுத்தரவர்க்க குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு பங்குச் சந்தைக்கு இன்னும் அதிக முதலீடு வர வழிவகை செய்யும். இவற்றிற்காகவே இதைப் பாராட்டலாம்.

ஆண்டு வருமானம் 2 அல்லது 3 லட்ச ரூபாய்க்குள் இருப்போர் வருமானவரி தாக்கல் செய்வதின் முக்கியத்துவம் உணராமல் விட்டு விடுகின்றனர். வேறு எந்த சேமிப்பும் இல்லாவிட்டாலும் கூட இனி 5 லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது. உங்க வருமானம் 2 அல்லது 3 லட்சரூபாயாக இருந்தாலும் அதை வருமானவரித்துறைக்கு டிக்ளேர் செய்து தாக்கல் செய்யுங்கள். வருமானவரி ஏதும் செலுத்தா விட்டாலும் பின்னாளில் வீட்டுக்கடன் வாகனக் கடன் போன்றவை பெற விண்ணப்பிக்கும் போது உதவியாக இருக்கும்.

காஃபிக்கு ஆகும் செலவில் கோடி ரூபாய் காப்பீடு

dollars in cupகாஃபிக்கு ஆகும் செலவில் கோடி ரூபாய் காப்பீடு

கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு எடுத்துவிட்டு தகவல் சொன்னார்கள்.

முதல் நண்பர், சிங்கப்பூர் வாழ் என் ஆர் ஐ வயது 35, எச் டி எஃப் சியில் 2 கோடிக்கு டெர்ம் பாலிசி 30 ஆண்டு காலம் எடுத்திருக்கார். அதற்கு ஓராண்டு ப்ரீமியம் ரூ 21,500 மட்டுமே. நாள் கணக்கில் பார்த்தால் ஒரு நாளைக்கு 58 ரூபாய்

நண்பர் அவரோட நண்பரை டெர்ம்பாலிசி எடுக்க வைத்திருக்கிறார். வயது 29 எல் ஐ சியில் ஒரு கோடிக்கு பாலிசி 32 ஆண்டு காலம், இதன் ப்ரீமியம் வெறும் 15,741 மட்டுமே, அதாவது ஒரு நாளைக்கு 43 ரூபாய்

இன்னொரு நண்பர், வயது 42, எல் ஐ சியில் ஒரு கோடிக்கு பாலிசி எடுத்திருக்கிறார், அதன் ப்ரீமியம் ரூ 26,923, அதாவது ஒரு நாளைக்கு 72 ரூபாய்

இதில் ரெண்டு விசயங்களை கவனிக்கலாம்.

உண்மையான காப்பீட்டுக்கு (எண்டோமெண்ட், மணி பேக் என்ன பிற போன்ற ஃபேக் காப்பீட்டு பாலிசிகள் தவிர்க்கப்படவேண்டியவை) ஆகும் செலவு மிகவும் கம்மி. 40-50 ரூபாய் என்பது பலருக்கு தினமும் வெளியில் காஃபி குடிக்கும் செலவு. அவ்வாறு உணவகத்தில் காஃபி குடிப்பதற்கு பதிலாக அப்பணத்தைக் கொண்டு கோடி ரூபாய் காப்பீடு எடுத்து குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

ரெண்டாவது இளமையில் கல், கற்றபின் காப்பீடு எடு என்பதே. 29 வயதாக இருக்கும் போது 1 கோடி ரூபாய் காப்பீடு 16 ஆயிரத்துக்கும் குறைவாகக் கிடைக்கிறது, அதே அளவு காப்பீடு, குறைவான காலத்துக்கே 27 ஆயிரம் ரூபாய் ஆகிறது 41 வயதானவருக்கு. வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஆயுள் காப்பீடு பெறுவதும் ஓய்வு காலத்துக்கு திட்டமிடுதலும் அவசியம்.

அரசு வேலையில் இருப்போர் புது பென்சன் திட்டமா பழைய திட்டமான்னு போராட்டம் செய்வதை வேடிக்கை பார்க்கும் தனியார் துறை ஊழியர்கள் தமக்கு எந்த பென்சன் திட்டமும் இல்லை என்பதை உணர வேண்டும்

வேண்டாத காப்பீட்டு பாலிசிகளை என்ன செய்வது?

தெரியாமல் எடுத்துவிட்ட எண்டோமெண்ட் பாலிசியை என்ன செய்வது?

நான் அதிகம் எதிர்கொண்ட கேள்விகளின் பட்டியலில் டாப் 3யில் இக்கேள்வி இடம்பெறும். ஜீவன் ஆனந்த் அல்லது வேறொரு எண்டோமெண்ட் பாலிசி எடுத்துவிட்டேன். இப்பத்தான் புரியது அது ஒரு தேவையற்ற பாலிசி என்று. ஆனா பாலிசி எடுத்து சில பல வருசங்கள் ஆச்சு, வெறும் அஞ்சு லட்சத்துக்கு 15-20 ஆயிரம் ரூபாய் ப்ரீமியம் கட்டிக்கிட்டு வர்றேன், அதே ப்ரீமியத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக டெர்ம் பாலிசி கிடைக்குது, அதை எடுத்து குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்னா, ரெண்டு பாலிசிக்கும் பணம் கட்ட முடியாது அல்லது ரெண்டு கோடிக்கு டெர்ம் பாலிசி எடுத்துட்டேன், இனி ஜீவன் ஆனந்த தரும் 5 லட்ச ரூபாய் கவரேஜுக்கு அர்த்தமேயில்லை, அந்த பாலிசியை என்ன செய்யட்டும் என்று கேட்போர் அனேகம்.

இந்நிலையில் இருப்போருக்கு மூன்று வழிகள் இருக்கின்றன

1. முதல் தெரிவு பாலிசி கேன்சல் செய்வது. பாலிசி எடுத்து மூன்றாண்டுகள் கூட ஆகலேன்னா, கட்டிய பணம் முழுதும் போய்விடும், எதுவும் கிடைக்காது. மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால், முதலாண்டு ப்ரீமியம் கிடைக்காது, அப்புறம் கட்டிய ப்ரீமியங்களின் 30% திரும்பக் கிடைக்கும், அதற்கப்புறம் போனஸ் ஏதாவது இருந்தால், அதுவும் கிடைக்கும். உதாரணத்த்துக்கு 20,000 ஆண்டு ப்ரீமியம் 5 ஆண்டுகள் கட்டியிருந்தால், முதலாண்டு ப்ரீமியம் போக மிச்சமிருக்கும் 80 ஆயிரத்தின் 30% 24,000 ரூபாயும் போனஸ் இருந்தால் அதுவும் கிடைக்கும்.

2. ரெண்டாவது தெரிவு, பாலிசியை கடைசி வரை தொடர்வது. காப்பீடாகவும் பிரயோசனமில்லை, முதலீடாவகும் பிரயோசமில்லை என்று தெரிந்தும் ஆரம்பிச்சதை விட வேண்டாம் என தொடர்வது

3. இவை இரண்டுக்கும் இடையில் அதிகம் அறியப்படாத “Paid Up” Policy Option. அதாவது பாலிசியை கேன்சலும் செய்யாமல் தொடர்ந்து இறுதி வரை ப்ரீமியமும் செலுத்தாமல் இருக்க வகை செய்யும் தெரிவு இது.

தேவைப்படாத பாலிசியை கேன்சல் செய்யாமல் “Paid Up” ஆக மாற்றுவதன் மூலம் கட்டியபணத்திற்கு இழப்பு ஏதும் ஏற்படாது, இனிமேல் கட்ட வேண்டிய ப்ரீமியம் எதையும் கட்ட வேண்டியதில்லை. பாலிசியின் முதிர்வு வரை பாலிசிதாரர் உயிரோடு இருந்தால், கட்டிய தொகையும் அதற்குண்டான போனஸும் கிடைக்கும்.
ஒரு உதாரணம் – பாலிசி எடுத்த போது வயது 23, தற்போது 26, காப்பீட்டுத் தொகை 12 லட்சம், காப்பீட்டின் காலம் 21 ஆண்டுகள், காலாண்டு ப்ரீமியம் 15 ஆயிரம் ரூபாய்கள். இப்ப இவருக்கான தெரிவுகள்

அ. மூன்றாண்டுகள் முடியும் வரை காத்திருந்து பாலிசியை கேன்சல் செய்வது. அப்படிச் செய்தால், மூன்றாண்டுகளுக்கான ப்ரீமியம் 1.8 லட்சத்தில் முதலாண்டு ப்ரீமியம் போக மிச்சம் இருப்பதில் 30% அதாவது 36,000 ரூபாய் கையில் கிடைக்கும்

ஆ. பாலிசியை உடனே “Paid Up”ஆக மாற்றினால் இப்போது பணம் ஏதும் கிடைக்காது, காப்பீட்டு காலத்தில் மிச்சம் இருப்பது 18 ஆண்டுகள், இதன் முடிவில் (தற்போதைய போனஸ் நிலவரப்படி) தோராயமாக 2 லட்ச ரூபாய் கிடைக்கும்.

கேன்சல் செய்து இன்று கிடைக்கும் 36,000 ரூபாயை ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், 18 ஆண்டுகள் முடிவில் 3 லட்ச ரூபாய் இருக்க வாய்ப்பு அதிகம். நிச்சயமில்லாத நாளைய லாபத்துக்காக இன்று நிச்சயமாக நிகழக்கூடிய நஷ்டத்தை ஏற்க விருப்பமில்லாதோருக்கு இந்த “Paid Up” பாலிசி தெரிவு நல்ல முடிவாக இருக்கும்

என் கருத்தில், பாலிசியின் ஆரம்ப காலத்தில் இருப்போர் (பாலிசி ஆரம்பிச்சு 5 ஆண்டுகள், இன்னும் 15 – 20 ஆண்டுகள் இருக்கு) பாலிசியை கேன்சல் செய்து விட்டு பணத்தை மியூச்சுவல் ஃப்ண்டில் முதலீடு செய்வது சரியா இருக்கும்

பாலிசி ஆரம்பிச்சு பல வருடங்கள் ஆச்சு இன்னும் 2-3 வருசங்களே இருக்கு பாலிசி முதிர்ச்சி அடைய என்பவர்கள், அந்த சில ஆண்டுகளும் ப்ரீமியம் கட்டி மொத்தமா போனஸ் பெறுவது மியூச்சுவல் ஃபண்டுக்கு மாற்றுவதை விடவும் பெயிட் அப் மாற்றுவதை விடவும் அதிக பலன தரும்

இவை இரண்டுக்கும் இடையில் இருப்போருக்கு (ஆரம்பிச்சு 7 – 8 -10 வருசம் ஆச்சு இன்னும் 10 வருசம் இருக்கு) பெயிட் அப் தெரிவு சரியாக இருக்கும்

வங்கி சேமிப்புக் கணக்குகளில் அதிக பணத்தை வைக்கலாமா ?

பாரத ஸ்டேட் வங்கி சேமிப்புக் கணக்குக்கு வழங்கும் வட்டியை மறைமுகமாகக் குறைத்துள்ளது. இன்று முதல் 1 லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ள கணக்குகளுக்கு வட்டி 3.5% லிருந்து 3.25% ஆக குறைத்துள்ளது. இது எல்லாருக்கும் என மாற்றப்படும் எனவும் ஏனைய வங்கிகளும் விரைவில் வட்டிக் குறைப்பு செய்யும் என எதிர்பார்க்கிறேன்

இனியாவது வங்கி சேமிப்புக் கணக்குகளில் பணத்தை முடக்காதீர்கள். அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் அதில் பேலன்ஸ் வைத்து விட்டு மிச்சத்தை Liquid Mutual Funds இலோ அல்லது குறைந்த பட்சம் வைப்பு நிதியிலோ வையுங்கள்.

இந்நடவடிக்கை எனக்கு எவ்வித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை. நாட்டின் வட்டி விகிதம் இன்ஃப்ளேசனை ஒட்டியே இருக்கும். இன்ஃப்ளேசன் குறையும் போது வட்டி குறைவதும் இயல்பே. மேலும் நாட்டின் பொருளாதாரம் வளர வட்டியை குறைத்தே ஆகவேண்டும். வங்கி வைப்பு நிதிக்கான வட்டி 5 – 6% லெவலுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இதன் சாதக பாதகங்கள் நீங்க்ள் இருக்கும் இடத்தைப் பொருத்து அமையும். நீங்க டெபாசிட் செய்யும் இடத்தில் இருந்தால் இது உங்களைப் பாதிக்கும். வீட்டுக் கடனோ தொழில் கடனோ வாங்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் இன்ஃப்ளேசனைத் தாண்டி அதிக அளவு வளர்ச்சி நீண்ட கால அடிப்படையில் தரக்கூடியது பங்குச் சந்தை முதலீடுகளே. ஏற்கெனவே இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பணவரத்து அதிகமா இருக்கு. வங்கி வட்டி விகிதம் குறையும் போது அது இன்னும் அதிகமாகும்..

பள்ளிக் கட்டணத்துக்கே கடனா? : பொருளாதார புதைகுழி

சாதாரண செலவுகளையும் மாதாந்திரத் தவணையாக மாற்றுவது அமெரிக்கப் பழக்கம். வீட்டுக்கு ஃபர்னீச்சர் வாங்கினாலும் சுற்றுலா செல்ல விமான டிக்கெட் வாங்கினாலும் அதை 12 மாதத் தவணைகளாக மாற்றிக்கொள்ள முடியும் அமெரிக்காவில். இவை நம் கையில் காசு இருந்தால் மட்டுமே செய்ய வேண்டிய செலவுகள் – இவற்றை தவணை முறையில் பெறுவதன் மூலம் எதிர்கால வருமானத்தை இன்றே ஆடம்பரத்துக்கு செலவு செய்ய பழகிவிட்டனர் அமெரிக்கர்கள்

இப்போது இந்தியாவிலும் இப்பழக்கம் பரவத்தொடங்கியுள்ளது. ஆட்டைக் கடிச்சி மாட்டைக் கடிச்சி கல்வியையும் கவர் செய்யுள்ளது இப்பழக்கம்.

https://www.fullertonindia.com/school-fee-funding/index.aspx

இந்த நிறுவனம் மூணாம் கிளாஸ் படிக்கும் பையனின் அப்பாவை பள்ளிக் கட்டணத்துக்கு கடன் வேணுமான்னு கேக்குது. இது கல்விக் கடன் என்ற பேரில் வழங்கப்படும் பர்சனல் லோன். 10.99% வட்டியாம். கடன் தருவதும் பெறுவதும் கூட பெரிய தப்பாப் படல, திருப்பி 24 மாசத்தில் கட்டலாம்னு சொல்றதுதான் பெரிய பொருளாதார புதைகுழியாகப் படுகிறது எனக்கு.

பிள்ளையின் ஒராண்டு பள்ளிக் கட்டணத்தை கடனாக வாங்கிவிட்டு அதை 2 வருச இ எம் ஐ யாக மாற்றி விட்டால், அடுத்தாண்டு கட்டணத்துக்கு என்ன செய்வது? அதையும் ரெண்டு வருசத் தவணையா மாத்தினா 2ம் ஆண்டிலேருந்து தொடர்ந்து ரெண்டு தவணை கட்டவேண்டியிருக்கும், குடும்பத்தில் 2 பிள்ளைகள் இருந்தால் 4 தவணைகள் கட்ட வேண்டியிருக்கும். இதிலேருந்து மீளவே முடியாது.

க்ரெடிட் கார்டுகள் வழங்கும் ரிவால்விங் க்ரெடிட்தான் இதுவரை நான் பார்த்ததிலேயே மோசமான கடன். மிக அதிக வட்டி ஒரு காரணமாக இருந்தாலும் அதை விட மோசமான காரணம் ஒரு முறை இதில் மாட்டிக்கொண்டு விட்டால் அதிலேருந்து வெளியே வருவது 99% பேருக்கு இயலாத காரியம். அதைப் போல பள்ளிக் கட்டணத்துக்கு கடன் வாங்க ஆரம்பித்தால் பிள்ளைகள் படிப்பை முடிக்கும் வரை அதிலேருந்து வெளியே வரவே முடியாது.

சென்னையில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆண்டுக்கட்டணம் 90,000 ரூபாய். 2 வருசம் இல்லை ஒரே வருசத்தில் திருப்பித் தர்றேன்னு அதை இங்கு கடனாக வாங்கினால் திருப்பிச் செலுத்தும் தொகை மாதத்துக்கு 7954.35 ரூபாய் அதாவது 95452.19 ரூபாய் திருப்பித் தரணும். இதில் இழப்பது வெறும் 5000 ரூபாய் அல்ல. பங்குச் சந்தை முதலீடெல்லாம் வேணாம் மாசம் 7954 ரூபாய் வங்கி தொடர் வைப்பு நிதியில் போட்டு வந்தால் ஆண்டு இறுதியில் 98,570 ரூபாய் உங்களிடம் இருக்கும். அதாவது ஒரே ஒரு ஆண்டு கடன் வாங்காமல் கட்டணத்தை கட்டி விட்டு இ எம் ஐ செலுத்துவதற்கு பதிலாக தொடர் வைப்பு நிதியில் போட்டு வந்தால் 8570 ரூபாய் – இதுதான் உண்மையான இழப்பு.

கடன்தான் ஈஸியா கிடைக்குதேன்னு வாங்காம கையிருப்பிலிருந்தோ, எதையாவது விற்றோ ஒரே ஒரு வருசம் கஷ்டப்பட்டு பள்ளிக் கட்டணத்தை கட்டி விட்டு, அடுத்தாண்டுக்காக இப்போதே சேமிக்கத் தொடங்க வேண்டும். அப்படிச் செய்யும் போது மாதம் 7270 ரூபாய் தொடர் வைப்பு நிதியில் போட்டு வந்தாலே ஓராண்டு முடிவில் 90,000 ரூபாய் சேர்ந்து விடும்.

பிள்ளைகள் கல்லூரிக்கு போகும் போது லட்சக்கணக்கில் செலவாகும், அப்ப கல்விக் கடன் வாங்குவதில் ஒரு நியாயம் இருக்கும். பள்ளிக் கட்டணத்துக்கே கடன் வாங்குவதில் ஒரு நியாயமும் இல்லை. உங்களால் இக்கடனுக்கு இ எம் ஐ கட்ட முடியுமென்றால், கண்டிப்பாக உங்களால் அப்பணத்தைச் சேமித்து அடுத்தாண்டு கடன் வாங்காமல் கட்ட முடியும்.

Asset Allocation

No photo description available.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில் எனக்கு ஒப்புதல் இல்லை என்றாலும், அசெட் அல்லோகேசனையும் வயது ஆக ஆக எப்படி முதலீட்டை திருத்தியமைத்துக் கொண்டு வரவேண்டும் என்பதையும் இதை விட எளிதாக விளக்கிவிட முடியாது. 

இளம் வயதில் ஈக்விட்டி அதிகமாகவும் கடன் பத்திரம் / ஃபிக்ஸ்ட் இன்கம் கேட்டகரியில் கம்மியாகவும் ஆரம்பிக்கவேண்டும். அதுவும் ஈக்விட்டியில் ரிஸ்க் அதிகமான மிட்கேப்பில் நிறைய முதலீடு செய்யலாம் (தனிப்பட்ட முறையில் எனக்க்கு ஸ்மால் கேப் ஃபண்ட்களில் நாட்டமில்லை) 
சந்தை இறக்கத்தில் மதிப்பு குறைந்தாலும் மீண்டு வருவதற்கு நிறைய காலம் இருக்கிறது. வயது அதிகரிக்க படிப்படியாக அதிக ரிஸ்க் ஈக்விட்டியிலிந்து கம்மி ரிஸ்க் ஈக்விட்டி கேட்டகரிக்கும் பிறகு ஈக்விட்டியை குறைத்து கடன் பத்திரங்கள் / ஃபிக்ஸ்ட் இன்கம் முதலீட்டையும் அதிகரித்துக்கொண்டே வரவேண்டும். 

ஓய்வு கால இலக்கான தொகையை அடைந்ததும் அல்லது ரிட்டையர்மெண்ட் அருகில் வந்ததும் 10-20% வரை மட்டும் ஈக்விட்டியில் வைத்து விட்டு மிச்சத்தை அசலுக்கு ஆபத்தில்லாத முதலீடுகளில் வைப்பது நலம். 

இதில் சொன்னது போலன்றி 50 வயதில் லார்ஜ் கேப்பை விட்டு வரவேண்டியதில்லை. 
இ எல் எஸ் எஸ் (வரிவிலக்கு ஃபண்ட்கள்) இல் 10% என்று இல்லாமல் தேவைப்படும் அளவுக்கு முதலீடு செய்யலாம். 20 வயதுகாரர்களுக்கு எஃப் டி தேவையேயில்லை. கேஷ் இன் ஹாண்ட் 10% வைத்துக் கொள்வதும் முதலீட்டுக்கு நல்ல ஆப்பர்ச்சுனிட்டி வரும்போது உயபோகப் படுத்திக்கொள்ளத்தான் அதை 20% அளவுக்கெல்லாம் அதிகரிக்கத் தேவையில்லை (எமெர்ஜென்சி ஃபண்டையும் இதையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது) 

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணும் எங்கேருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை என்போருக்கு இது ஒரு நல்ல துவக்கப்புள்ளியாக இருக்கும்.

Mutual Fund: “Growth” or “Dividend”

நண்பர்கள் பலரும் கேட்கும் கேள்வி. Mutual Fundல் முதலீடு செய்யும் பொழுது, எந்த விருப்பத்தை தேர்வு செய்யனும். “Growth” or “Dividend” ?.

பொதுவாக சொன்னால் -> எதிர் காலத்திற்க்கு + தொடர் சேமிப்புக்கு – GROWTH .

செய்த முதலீட்டிலிருந்து தொடர் வருமானம் வருவதற்க்கு DIVIDEND.

மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது – Mutual Fundகளில் Dividend என்பது பங்குச்சந்தையிலிருப்பது போல லாபத்தில் ஒரு பங்கல்ல. இருக்கும் பணத்திலிருந்து எடுத்துக்கொடுப்பது. அவ்வளவு தான். 
எளிய உதாரணம்(எந்த வரியையும் கணக்கில் கொள்ளவில்லை): 
NAV 1,000 என்ற விலையில் பத்தாயிரத்துக்கு 10 யூனிட் வாங்குறோம் . 
GROWTH -> 10(Unit) * 1,000(NAV) = 10,000 .
DIVIDEND -> 10(Unit) * 1,000(NAV) = 10,000 .
ஒரு மாதத்திற்கு பிறகு எந்த உயர்வுமில்லை . ஆனால் Dividend மட்டும் 500 ரூபாய் கிடைத்திருக்கு.
Dividendற்க்கு பிறகு முதலீட்டுத் தொகை 
GROWTH -> 10(Unit) * 1,000(NAV) = 10,000
DIVIDEND -> 10(Unit) * 950 (NAV) = 9,500
மேற்க்கண்ட உதாரணத்தை படித்தவுடன் , இதென்னங்க அநியாயமாயிருக்கு, நம்ம பணத்தை எடுத்து நமக்கே கொடுக்கறதுக்கு பேரு “Dividend”யா என்று என்னைப்போல் உங்களுக்கும் தோன்றினால் நீங்கள் Mutual fund dividend யை சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம்..
அடிப்படையில் Mutual Fund முதலீட்டை இருவகையாகப் பிரிக்கலாம் .
1. Equity – பங்கு சார்ந்த முதலீடு (65% அல்லது அதற்க்கு மேல் உள்நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருக்க வேண்டும்)
https://www.amfiindia.com/…/knowledge-cen…/equity-funds.html
2. Debt – கடன் சார்ந்த முதலீடு. கார்ப்பரேட் மற்றும் அரசு பத்திரங்கள், பெருநிறுவன கடன் பத்திரங்கள் நிலையான வருவாய் முதலீடுகள் (
(65% அல்லது அதற்க்கு மேல் உள்நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யாதவை அனைத்தும் )
https://www.amfiindia.com/i…/knowledge-center/debt-fund.html
எதுக்கு இப்ப Equity மற்றும் Debtன்னு கேட்கறீங்களா .?இதை பொறுத்து தான் Dividendக்கான DDT(Dividend Distribution Tax) வரி விதிப்பு கணக்கீடு செய்வாங்க.
முதலில் நாம பார்க்கப்போவது – MF – DEBT DIVIDEND – DDT(Dividend Distribution Tax) – 28.84 per cent (25 per cent tax + 12 per cent surcharge + 3 per cent cess ) .
—————————————–
10%, 20% வருமான வரி வரம்பிலிருப்போர்:
NAV 1,000 என்ற விலையில் பத்தாயிரத்துக்கு 10 யூனிட் வாங்குறோம். ஒரு மாதத்திற்கு பிறகு எந்த உயர்வுமில்லை . ஆனால் Dividendற்க்கு மட்டும் யூனிட்ற்க்கு 50 ரூபாய் தர Fund House முடிவெடுக்குது .
DDT(28.84%) = ஒரு யூனிட்க்கு 14.42 வரி பிடித்தம் செய்யப்படும். 
மொத்த DDT தொகை = 10 * 14.42 = 144.20
நமக்கு கிடைக்கும் Dividend => 10 * 35.58 = 355.80.
Dividendற்க்கு பிறகு முதலீட்டுத் தொகை
DIVIDEND -> 10(Unit) * 950 (NAV) = 9,500
மகிழ்ச்சியான செய்தி –> கிடைக்கும் DIVIDENDற்க்கு வரியில்லை. அதுதான் DDT பேர்ல சுளையாக 28.84% போய்டுச்சே .. அதுக்கப்புறம் எதுக்கு வரி என்று என்னைப்போல் உங்களுக்கும் தோன்றினால் நீங்கள் DEBT – Mutual fund dividend யை தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம்..
Mutual Fund – DEBT டிவிடெண்ட்ல் DDT மிக அதிகமென்பதால் இதில் முதலீடு செய்வதற்க்கு பதிலாக Exit load அல்லாத GROWTH fund ல் முதலீடு செய்து SWP அல்லது தேவைப்படும் பொழுது REDEEM செய்வதே சிறப்பானது.
இதனால் வரி குறையும் , மேலும் DEBT Mutual Fund யை மூன்று வருடத்திற்க்கு மேல் வைத்திருந்தால் Indexation benefit கிடைக்கும்.

MF – EQUITY DIVIDEND 
—————————-
MF – EQUITY DIVIDEND – DDT(Dividend Distribution Tax) – 11.648 per cent (Including surcharge and Cess) . NAV 1,000 என்ற விலையில் பத்தாயிரத்துக்கு 10 யூனிட் வாங்குறோம். ஒரு மாதத்திற்கு பிறகு எந்த உயர்வுமில்லை . ஆனால் Dividendற்க்கு மட்டும் யூனிட்டிற்க்கு 50 ரூபாய் தர Fund House முடிவெடுக்குது .
DDT(11.648%) = ஒரு யூனிட்க்கு 5.824 வரி பிடித்தம் செய்யப்படும். 
மொத்த DDT தொகை = 10 * 5.824 = 58.24
நமக்கு கிடைக்கும் Dividend => 10 * 44.176 = 441.76.
Dividendற்க்கு பிறகு முதலீட்டுத் தொகை
DIVIDEND -> 10(Unit) * 950 (NAV) = 9,500
மகிழ்ச்சியான செய்தி –> கிடைக்கும் DIVIDENDற்க்கு வரியில்லை. அதுதான் DDT பேர்ல 11.648% போய்டுச்சே .. அதுக்கப்புறம் எதுக்கு வரி என்று என்னைப்போல் உங்களுக்கும் தோன்றினால் நீங்கள் EQUITY – Mutual fund dividend யை புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம்..
—————————-
MF – EQUITY GROWTH 
—————————-
NAV 1,000 என்ற விலையில் பத்தாயிரத்துக்கு 10 யூனிட் வாங்குறோம். ஒரு மாதத்திற்கு பிறகு எந்த உயர்வுமில்லை . ஆனால் 500 ரூபாயை தேவைக்காக எடுக்கிறோமெனில்(REDEEM)
நமக்கு கிடைக்கும் தொகை => 0.5 யூனிட் * 1000 = 500
REDEEMற்க்கு பிறகு முதலீட்டுத் தொகை
9.5(Unit) * 1000 (NAV) = 9,500
வருமான வரி – வரியில்லை , செய்த முதலீட்டில் எந்த லாபமும் கிடைக்காததால் வரியில்லை.
———————————————————————————-
லாபம் கிடைக்கும் பட்சத்தில்,
Mutual Fund – EQUITY GROWTH fundல் முதலீடு செய்து ஒரு வருடத்திற்க்கு முன் பணத்தை எடுக்கும் பொழுது லாபத்திற்க்கான வருமான வரி (Short term capital gains) -> 15.6% (15% Tax + 4% Surcharge)
Mutual Fund – EQUITY GROWTH fundல் முதலீடு செய்து ஒரு வருடத்திற்க்கு பிறகு பணத்தை எடுக்கும் பொழுது லாபத்திற்க்கான வருமான வரி (Long term capital gains) -> லாபம் ஒரு லட்சம் வரைக்கும் வரியில்லை(Equity மொத்த லாபம்) + ஒரு லட்சத்திற்க்கு மேற்பட்ட லாபத்திற்கு மட்டும் 10.4% (10% Tax + 4% Surcharge)
வருமான வரியின் அடிப்படையில் பார்க்கும் பொழுது குறுகிய கால முதலீட்டிற்க்கு Dividendயின் DDT வரி குறைவு என்றாலும் Equityயில் குறுகிய கால முதலீடு என்பது அதிக RISKயுடையது. முதலீடே குறைந்தால் DIVIDEND யால் அதிக நட்டம் ஏற்படும். EQUITY ல் நீண்ட கால முதலீட்டின் வழி RISKயை குறைக்கலாம் , முதலீட்டைப்பெருக்கலாம்.
Equityயில் நீண்ட கால முதலீடே சிறப்பானது. எனவே GROWTH யை தேர்ந்தெடுத்து கூட்டு வட்டியின் மூலம் கூடுதல் லாபம் பெறலாம்.

எல் ஐ சி … இந்தியாவின் மிகப் பெரிய காப்பீடு நிறுவனம்..

இப்படிச் சொல்வதை விட நீங்க எல்லாரும் உங்க முதலீட்டை ஜீவன் ஆனந்த் மற்றும் ஜீவன் சரல்ல போட்டு விட்டு அவை உங்க எதிர்காலத்தை பாதுகாக்கும் என்று எண்ணியிருக்கும் திட்டங்களின் சொந்தக்கார நிறுவனம்…

ஷேர் மார்க்கெட் எல்லாம் ரிஸ்க் சார், எல் ஐ சி ல போட்டா கேரண்டி சார் என்று முகவர்களால் சர்ட்டிஃபிகேட் வழங்கப்படும் நிறுவனம்..

இந்தியாவின் மொத்த புது இன்சூரன்ஸ் பாலிசி ப்ரீமியம் 1.75 ட்ரில்லியன் ரூபாய்கள் அதில் எல் ஐ சி மட்டும் 1.27 ட்ரில்லியன் ரூபாய்கள். 
எல் ஐ சியின் மொத்த ப்ரீமியம் கலெக்சன் 3 ட்ரில்லியன் ரூபாய்கள் – ட்ரில்லியனுக்கு 12 சீரோக்கள் என்பது பதிவுக்கு சம்பந்தம் இல்லாத தகவல்

இழப்புக் காப்பீடு, போனஸ், செலவு போன்றவை போக லாபத்தில் 50% கவர்மெண்ட் செக்யூரிட்டிகள் போட வேண்டும் என்பது விதி.. அதைப் பெரும்பாலும் இந்திய அரசின் பாண்ட்களில் போட்டுவிட்டு மிச்சத்தை எல் ஐ சி ஷேர் 
சென்ற ஆண்டு மட்டும் மார்க்கெட்டில் போட்ட பணம் எவ்வளவு தெரியுமா? ரொம்ப அதிகமில்லை லேடிஸ் & ஜெண்டில்மென் வெறும் ஐம்பதாயிரம் கோடி ருபாய் மட்டும். மார்ச் 31 2017 அன்று எல் ஐ சியின் மொத்த மொதலீடு 24,69,589 கோடி ரூபாய்கள், ஷேர் மார்க்கெட்டில் சென்ற் ஆண்டு லாபம் மட்டும் 1.8 லட்சம் கோடிகள்

உங்க ஜீவன் ஆனந்த் பாலிசியின் ஒரு அம்சம் – லாபத்தில் பங்கு – அந்த லாபம் எங்கேருந்து வருது? அரசு பாண்ட்லேருந்தும் முகவர்களால் ரிஸ்க் என்று நாமகரணம் சூட்டப்பட்ட ஷேர் மார்க்கெட்டிலிருந்தும்தான்…

மொதல்ல – உங்க யாராலாவது தேவைப்படும் அளவுக்கு (ஆண்டு வருமானத்தின் 10-20 மடங்கு) எந்த ஜீவன் டேஷ் பாலிசியாவது வாங்க முடியுமான்னு பாருங்க (டேஷ்னதும் தப்பா யோசிக்காதீங்க ஜீவன் பக்கத்துல எந்த பேரு போட்டாலும் அப்படி ஒரு பாலிசி இருக்கும், டேஷ்ல உங்க பாலிசி பேரை போட்டுக்கோங்க), வாங்க முடியாதுல்ல… அப்புறம் என்ன டேஷுக்கு அதை வாங்கணும்ங்கறேன்… (இந்த டேஷ் நீங்க நினைச்ச அதேதான்)

ரெண்டாவது முதலீடுன்னு சொல்லி விற்கப்படும் பாசிலிகளின் மூலம் கிடைக்கும் சொற்ப பணமும் ஷேர் மார்க்கெட்டில் லாபம் கிடைச்சால் மட்டுமே என்கிற போது… சல்லிசா டெர்ம் பாலிசியை ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு எடுத்துட்டு மிச்சத்தை ஓரிரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலம் அதே பங்குச் சந்தைக்கு ஏன் அனுப்பக் கூடாது? இந்த ப்ளானில் பயனர் இறந்தாலும் வருமானத்தின் 10 மடங்கு பணம் குடும்பத்துக்கு கிடைக்கும், இறக்கலேன்னாலும் மியூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சி மூலம் கணிசமான தொகை கையில் இருக்கும்… இரண்டு சூழ்நிலைகளிலும் குறைந்த அளவே பணம் தரக்கூடிய ஜீவன் —— பக்கம் இனி போவீங்க?

https://www.livemint.com/Money/DELSJgyRofOgwmtQGJW0hO/LIC-may-hike-stock-market-investments-to-Rs4trillionin-201.html