Shriram Insurance நிறுவனம் சூப்பர் இன்கம் ப்ளான் என்று ஒரு திட்டத்தை அறிமுகம் செய்கிறது, அது குறித்து சொல்லுங்கன்னு ஒரு நண்பர் மின்மடல் அனுப்பியிருந்தார்.
எல்லா எண்டொமெண்ட்டும் காப்பீடாகவும் உபயோகமில்லாமல் முதலீடாகவும் உபயோகமில்லாதவைதான் இது மட்டுமென்ன வித்தியாசமாவா இருக்கப்போகுதுன்னு அது குறித்து படித்து விட்டு கணக்கு போட ஆரம்பிச்சேன். என்ன ஒரு ஆச்சரியம் – அவற்றுள் எல்லாம் தலையாய வீண் ஆணி அந்தஸ்து பெரும் அளவுக்கு இருக்கு. கட்டுற ப்ரீமியத்தின் 10 மடங்கு மட்டுமே காப்பீடு. அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சரூபாய் ப்ரீமியம் கட்டினா வெறும் 10 லட்ச ரூபாய் காப்பீடு.
15 ஆண்டுகள் பணம் செலுத்தணுமாம், 16 ஆண்டிலேருந்து மாதம் ஒரு தொகை தருவாங்களாம், 75 ஆண்டுகள் வரை அத்தொகை வருமாம் அப்புறம் இன்னொரு சிறிய தொகை தருவாங்களாம் – இதான் திட்டம். இது 12 % வளர்ச்சி தரும் திட்டம்னு வேற ஏஜெண்ட்கள் நம்ப வைக்கப்பட்டிருக்கின்றனர்
பொதுவா கம்பெனி வெப்சைட்ல அவங்களுக்கு வசதியா இருக்கும் உதாரணம் சொல்லப்படும், ஸ்ரீராம் நிறுவன தளத்தில் இருக்கும் உதாரணத்தையே எடுத்துக் கொண்டேன்
ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் ப்ரீமியம் 15 ஆண்டுகள் கட்ட வேண்டும்16 ஆண்டிலிருந்து மாசம் 12,252 ரூபாய் கிடைக்கும்.
இப்ப படத்தைப் பாருங்க. வெறும் 6 % வளர்ச்சியை கணக்கில் எடுக்கிறேன், முதலாம் ஆண்டு முதலீடு செய்த 1லட்ச ரூபாய் 15 ஆண்டு முடிவில் கிட்டத்தட்ட 2.4 லட்ச ரூபாயாக இருக்கும், 2ம் ஆண்டு முதலீடு 2.26 லட்சமாக இருக்கும். இப்படியே 15 ஆண்டுகளும் முதலீடு செய்யும் பணம் வெறும் 6% வளர்ச்சி மட்டும் கண்டாலே 16 ஆண்டில் உங்களிடம் 24, 67, 253 ரூபாய்கள் இருக்கும். அப்போ அப்பணத்தை வெறும் 6% தரக்கூடிய எந்த முதலீட்டில் போட்டாலும் ஆண்டுக்கு 148,305 ரூபாய் தரும் அதாவது ஸ்ரீராம் சூப்பர் இன்கம் தருவதை விட ஆயிரம் ரூபாய் அதிகம். அது மட்டுமல்ல ஸ்ரீராம் சூப்பர் இன்கம் 75 வயது வரை மட்டுமே மாதாந்திரத் தொகை வழங்கும் அப்புறம் வெறும் 5 லட்ச ரூபாய் கொடுத்து அனுப்பிவிடும். நீங்க வேற ஏதாவது நல்ல முதலீட்டில் பணம் போட்டு வெறும் 6% மட்டுமே வளர்ச்சி கண்டாலும், 25 லட்ச ருபாய் இருக்கும் அதிலேருந்து வரும் வட்டியே சூப்பர் இன்கம் தருவதை விட அதிகம் இருக்கும் 75 வயது ஆகும் போது உங்க கையில் 5 லட்சமலல் 25 லட்சம் இருக்கும்.
இந்த திட்டம்னு இல்ல, எல்லா எண்டொமெண்ட் திட்டங்களும் காப்பீடாகவும் பிரயோசனமில்லை, முதலீடாகவும் பிரயோசனமில்லை. இத்திட்டம் 4% வளர்ச்சி கூட தராது என்பது தெளிவாத் தெரியும், இனியும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாமான்னு கேட்டா, என் பதில் வெறும் 4% வளர்ச்சி தரும் திட்டத்தைக்கூட உங்களால் கண்டுபிடிக்க முடியாதுன்னா இதில் தாராளமா முதலீடு செய்யலாம் – இதே பதில்தான் எல்லா எண்டோமெண்ட் / மணி பேக் பாலிசிகளுக்கும்.