சொத்துக் காப்பீடு… லாப நஷ்டக் கணக்கு!

ரு லட்சம் ரூபாயை முதலீடு செய்ய மூன்று வாய்ப்புகள். முதலாவதில் ரூ.9,000 லாபம் நிச்சயம். இரண்டாவதில், ரூ.10,000 லாபமடைய 90% வாய்ப்பு; லாபமில்லாமல் போக 10% வாய்ப்பு – இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் முதலாவது வழியையே தேர்ந்தெடுக்கிறார்கள்.   

அதே ரூ.1 லட்ச ரூபாய் முதலீட்டில், ரூ.9,000  நஷ்டம் நிச்சயம் என்பது  ஒரு வாய்ப்பு. ரூ.10,000 நஷ்டம் அடைய 90% வாய்ப்பு. நஷ்டமே இல்லாமல் தப்பிக்க 10% வாய்ப்பு, இப்படி ஒரு நிலையில் பெரும்பான்மையானோர் தேர்ந்தெடுப்பது இரண்டாவது வழியை. 

இதிலிருந்து நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிகின்றன. லாபம் தரும் சந்தோஷத்தைவிட நஷ்டமே மனிதர்களை அதிகம் பாதிக்கிறது. பொதுவாக, நாம் லாபத்தை எதிர்நோக்கும்போது ரிஸ்க்கைத் தவிர்க்கவும், நஷ்டத்தை எதிர் நோக்கும்போது ரிஸ்க் எடுக்கவும் தயங்குவதில்லை. 

பொதுவாக, காப்பீட்டை அதிலும் குறிப்பாக ஜெனரல் இன்ஷூரன்ஸ் எனப்படும் பொருள் அல்லது சொத்துக்கான காப்பீட்டை லாப நஷ்ட நோக்கிலேயே மக்கள் எதிர்கொள்கின்றனர். 

காப்பீட்டின் அவசியம் ஏற்படும் வரை பலரும் அது குறித்து யோசிப்பதே கிடையாது. எப்போதோ ஒருமுறை நிகழக்கூடிய அல்லது நிகழாமலே போகக்கூடிய ஓர்  இயற்கை பேரிடருக்காகவோ, திருட்டுக்காகவோ செலுத்தும் காப்பீட்டுத் தொகையை நஷ்டம் என்றே கருதுகின்றனர்.  அதே நேரத்தில், பேரிடர் நிகழ வாய்ப்புண்டு என்று நினைத்தால், பிரீமியத்தைக் கவனிக்காமல் காப்பீட்டை எடுப்பதில் உள்ள சாதகங்களையே அதிகம் கவனிக்கிறது.  

வீடோ, தொழிற்சாலையோ, தீப்பற்றிய பிறகு அல்லது மழை வெள்ளம் புகுந்தபின்பு காப்பீட்டைப் பெற முடியாது. இதற்கு ஆங்கிலத்தில் எதிர்பார்ப்புக் கோட்பாடு (Prospect Theory) என்று பெயர். இதன்படி, ஒரே அளவு லாபம் தரக்கூடிய இருவேறு முதலீடுகளைப் பெரும்பாலான மக்கள் அவர்தம் எண்ணத்தில் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அலசுகிறது. உதாரணத்துக்கு, இரண்டு திட்டங்களில் கிடைக்கக்கூடிய லாபம் ஒரு லட்சம் ரூபாய்தான். முதலாவது திட்டத்தில், நேரடியாக ஒரு லட்சம் ரூபாய் லாபம்; இரண்டாவதில், இரண்டு லட்சம் ரூபாய் லாபம், அப்புறம் ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் கிடைக்கும் எனில், முதலாவது திட்டமே நம்மில் பலரின் விருப்பமாக இருக்கும். அதற்குக் காரணம், லாபம் தரும் சந்தோஷத்தைவிட நஷ்டம் தரும் துக்கம் அதிகம்.   

மனிதர்களின் மற்றொரு குணம், உண்டு / இல்லை என்கிற விதத்தில் ரிஸ்க்கினைப் பார்த்து, அதன்படி முடிவெடுப்பது. உதாரணத்துக்கு, சென்னைவாசிகளிடம் கேட்டால் வெள்ளம் வர வாய்ப்பு முழுமையாக இருப்பதாகவும், எனவே, வெள்ள நிவாரணக் காப்பீடு எடுக்க வேண்டும் என்பார்கள். ஆனால், நிலநடுக்கத்துக்கான காப்பீடு எடுக்கச் சொன்னால், அது எதுக்கு வீண் செலவு என்பார்கள். ஒரு நிறுவனம் தந்த புள்ளிவிவரங்களின்படி,  வெள்ளம் வந்த அடுத்த ஆண்டு காப்பீடு எடுத்தோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. அடுத்துவந்த ஆண்டுகளில் பெரிய வெள்ளம் ஏதும் வராத நிலையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் காப்பீட்டைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டார்கள்.

விபத்தோ, திருட்டோ ஏதும் நிகழாது என்ற நம்பிக்கையில், சில ஆயிரம் ரூபாய் பிரீமியம் தொகையைச் சேமிப்பதாக நினைத்து, ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்தினைக் காப்பீடு செய்ய மறுக்கிறோம். பிரீமியம் தொகையை நஷ்டம் எனக் கருதும் நாம், காப்பீடு வழங்கும் கவரேஜை லாபமாக  கருதாததே இதற்குக் காரணம். ஆனால், இயற்கைப் பேரிடர் நிகழும் காலத்தில் பிரீமியத்தை நஷ்டமாக நினைக்காமல் கவரேஜை லாபமாகப் பார்க்கிறோம்.

எதையெல்லாம் காப்பீடு செய்ய வேண்டும் என்பதைச் சுலபமாக முடிவு செய்யலாம். சேமிப்பில் கைவைக்காமல் வெறும் மாதாந்திரச் சம்பளத்தில் எதையெல்லாம் மாற்ற முடியாதோ, அதையெல்லாம் இன்ஷூரன்ஸ் செய்வது உத்தமம். 

காப்பீடு என்பது லாப நஷ்ட நோக்கில் பார்க்க வேண்டிய முதலீடல்ல. ‘Investing is to Achieve Certainty, while Insurance is Cover the Uncertainty’ என ஆங்கிலத்தில் அழகாகச் சொல்வார்கள். இனியாவது காப்பீட்டுக்குச் செலுத்தும் தொகையை நஷ்டமெனக் கருதாமல், அதை ஓர் அத்தியாவசியச் செலவாகக் கருதி மதிப்புமிக்க பொருள்கள்/சொத்துகளை இன்ஷூரன்ஸ் செய்யுங்கள். முதலில் உங்கள் குடும்ப உறுப்பினர் களைக் காக்க உங்கள் உயிருக்கு இன்ஷூரன்ஸ் எடுங்கள்!  

  • மே 2018,நாணயம் விகடன் இதழில் வெளியான கட்டுரை